கிராமத்து அத்தியாயம் - 4: அண்ணணுக்கு வைக்கப்பட்ட விருந்து

கிராமத்து அத்தியாயம் - 4: அண்ணணுக்கு வைக்கப்பட்ட விருந்து
Updated on
2 min read

கேசவனுக்குக் கூடப்பிறந்த ஒரே ஒரு தங்கச்சி மீனாச்சி. அவ சின்னப் பிள்ளையா இருந்தபோதே அவனோட அம்மாவும் அப்பாவும் இறந்துட்டாங்க. அதனால இவன் தங்கச்சிய பாசமும் பிரியமுமா வளத்தான். அவளும் குமரியாயிட்ட உடனே இவன் தங்கச்சிக்கு நிறைய சீர் வரிசை செஞ்சி கொஞ்சம் வசதியான வீட்டுல கொடுக்கணுமின்னு ராவும் பகலுமா உழைச் சான். அப்படி உழைச்சி எப்படியோ பக்கத்தூருல நல்ல மாப்பிள்ளைக்குக் கல்யாணமும் முடிச்சி வச்சிட்டான். அவளும் புருசன்கூடப் போயிட்டா.

தங்கச்சிக்காக உழைச்சதிலையும், பசியும் பட்டினியுமா கிடந்ததுலையும் இவனுக்கு உடம்பு சரியில்லாம ரொம்ப காய்ச்சல்ல விழுந்துட்டான். இவன் ஊட்ல இருந்து மீனாச்சி ஊருக்குப் போனவக, “தாயீ உன் அண்ணன் படுத்த படுக்கையா கெடக்கான். உடம்பு தீயாக் கொளுத்துது”ன்னு சொன்னாக. அவ்வளவுதான் மீனாச்சி அப்பவே அழுதுகிட்டு அண்ணனைப் பார்க்க வந்துட்டா. வந்தவ அண்ணன சேந்துக்கட்டி அழுதா. பிறவு, “ஏன்ணே நானு ஒரு தங்கச்சி இருக்கது தெரியலயா? எதுக்காக நீ இப்படி ஒத்தையா அரை உசுரா கிடக்கணும்? என் கூட வாண்ணே. நாளைக்கே உன் மச்சினன சந்தைக்கு அனுப்பி ஒரு ஆடு வாங்கிட்டு வரச் சொல்லி வெட்டி கறிக் கொழம்பு வச்சு உப்புக்கண்டம் போட்டுத் தாரேன்”னு அண்ணனைக் கூட்டிட்டு வந்துட்டா. கேசவனும் கறி திங்கிற ஆசையில தங்கச்சி கூட வந்துட்டான்.

மூணு வாரம் ஆச்சு. ஆடும் புடிக்கல, ஒன்னும் புடிக்கல. கேசவன் ஒரு நாளு தங்கச்சியக் கூப்புட்டு, “என்ன தாயீ ஆடு பிடிக்கேன்னு சொன்னே, ஒன்னையும் காணோ”மின்னு கேட்டான். அவளும், “உன் மச்சினனுக்கு நேரமே இல்ல. அதனால, வீட்டுல ஒரு சேவலு கூவிக்கிட்டே கிடக்கு. அத அடிச்சு குழம்பு வச்சுத்தாரேன்”னா. இவனும் சரி சேவல் கறியாவது கிடைக்குதேன்னு இருந்தான். ஏழெட்டு நாளு ஆயிருச்சி. சேவல் கறியும் கிடைக்கல. தங்கச்சிய கூப்பிட்டுச் சேவல் கறி என்னாச்சின்னு கேட்டான். அவளும், “அது விடிய முன்னேயே ஓடிருது பிடிக்க முடியல. வீட்டுக்குள்ள ஒரு பெருச்சாளி அலையுது. அதப்பிடிச்சி கொழம்பு வச்சி தாரேன்”னா. இவன் நாக்கு கறிக்குச் செத்துப்போச்சி. சரி பெருச்சாளி கறியாவது கிடைக்கட்டுமின்னு இருந்தான். அதுவும் கிடைக்கல. கேசவனும் தங்கச்சிக்கிட்ட அந்தப் பெருச்சாளி கறி என்னாச்சின்னு கேட்க, “இன்னைக்கு நடுவைக்குப் போறேன். நிறைய நண்டுப் பொந்து இருக்கும். நண்டு புடிச்சிட்டு வந்து ‘நண்டானம்’ காய்ச்சி தரேன்”னு சொன்னா. இவனும் மத்தியானம் வரையிலும் ஆசையோடு நண்டுக் குழம்புக்காகக் காத்திருந்தான்.

மத்தியானம் தங்கச்சி வந்தா. “என்ன தாயீ நண்டு புடிச்சிட்டு வந்தியா?”ன்னு கேட்டான். அவ எரிச்சலோட, “நடுவை நட்டிட்டு வரங்குள்ளயுமே நானு பரிதவிச்சுப்போனேன். உனக்கு எங்க நண்டு புடிச்சிட்டு வர. கொஞ்சம் இரு கொல்லையில தைவள கீரை இருக்கு. அதப் பிடுங்கியாந்து கடைஞ்சு சோறு வைக்கேன். சாப்பிட்டுப் போ”ன்னு சொன்னா. கேசவனும், “என்ன தாயீ தினமும் தைவள கீரயத்தான கடஞ்சி வைக்கே”ன்னான். உடனே மீனாச்சி புருசன், “தைவள கீரைக்கே உம்ம உடம்பு இம்புட்டுத் தெளிஞ்சிருச்சி. இனி கறி சாப்பிட்டா அம்புட்டுத்தேன். உம்மால நடக்க முடியாது. அதனால, சீக்கிரம் ஊரு போயி சேரு”மின்னு இரண்டு பேரும் கேசவனை ஊருக்கு அனுப்பி வச்சிட்டாக.

கேசவன் ஊருக்கு வந்தான். ஊருல இருக்கவங்க எல்லாம் என்னப்பா தங்கச்சி வீட்டு விருந்து எப்படி இருந்துச்சின்னு கேட்டாக. இவனும் ஆடு, கோழியாகி, கோழி பெருச்சாளியாகி, பெருச்சாளி நண்டாயி, தங்கச்சி வீட்டு விருந்து தைவள கீரையோட முடிஞ்சிருச்சின்னு சொல்லிட்டுக் கட்டுல போயிப் படுத்தானாம்.

- கட்டுரையாளர், எழுத்தாளர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in