

கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணிக்குப் பிரசவம் பார்க்க மறுத்ததால் தாய், இரட்டைப் பச்சிளங்குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரி என்பவரின் கணவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால், தன்னுடைய ஆறு வயது மகளுடன் தும்கூரில் வேலை செய்து வந்துள்ளார் கஸ்தூரி. பிரசவ வலி ஏற்பட்டு உள்ளூர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவரிடம் ஆதார், மருத்துவ அட்டைகள் இல்லாததால் பிரசவம் பார்க்க மருத்துவர்கள் மறுத்துள்ளனர். பிரசவத்திற்கு பெங்களூரு செல்லுமாறு அங்கிருந்த மருத்துவரும் செவிலியரும் அறிவுறுத்தியுள்ளனர். பெங்களூரு செல்லப் போதுமான பண வசதி இல்லாததால் வீட்டிலேயே பிரசவம் பார்த்த கஸ்தூரிக்கு முதல் குழந்தை பிறக்கும்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவரும் இரண்டு பச்சிளங் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். “அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்க வரும் கர்ப்பிணிகளிடம் ஆதார், மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் இருக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் சிகிச்சை அளித்து பின்பு ஆவணங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்” என கர்நாடக மாநில மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அனில் குமார் தெரிவித்துள்ளார். உயிரைக் காப்பாற்ற வேண்டிய மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தால் மூன்று உயிர்கள் பறிபோனதற்குப் பலரும் கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளனர்.
இனி ‘இரு விரல்’ பரிசோதனை கூடாது
பாலியல் வழக்குகளை விசாரிக்கும்போது ‘இரு விரல்’ பரிசோதனை முறையைப் பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு உத்தரவிட்டுள்ளது. பெண்ணுறுப்பில் ‘ஹைமன்’ என்ற சவ்வு இருக்கும். அந்தச் சவ்வு கிழிந்துள்ளதா, இல்லையா என்பதைப் பரிசோதிப்பது ‘இரு விரல்’ பரிசோதனை முறை. மிகவும் வலி தரக்கூடிய இந்த இரு விரல் பரிசோதனைக்குக் கடந்த 2018ஆம் ஆண்டு, ஐ.நா. சபை தடைவிதித்தது. அதற்கு முன்னதாகவே, இரு விரல் பரிசோதனை சட்டவிரோதமானது என்றும், இப்பரிசோதனை மூலம் உண்மையைக் கண்டறிய முடியாது என்றும் 2013ஆம் ஆண்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. எனினும், இரு விரல் பரிசோதனை நடைமுறையில் இருந்துவந்தது. இப்போது இதற்குத் தடை விதித்திருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இரு விரல் பரிசோதனை முறை தொடர்பான பாடத்தை மருத்துவக் கல்லூரி பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இரு விரல் பரிசோதனையில் ஈடுபடும் எந்தவொரு நபரும் குற்றவாளியாகக் கருதப்படுவார் என்கிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவுக்குப் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய காவல்படையில் பெண்கள்
மத்திய ரிசர்வ் காவல்படையான சி.ஆர்.பி.எஃப்.,பில் முதல் முறையாக இரண்டு பெண்கள் ஐஜிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
1987ஆம் ஆண்டு பதவியில் சேர்ந்த சீமா துண்டியா, ஆனி ஆபிரஹாம் ஆகியோருக்கு ஐஜியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில் சீமா துண்டியா பிஹார் பிரிவுக்குத் தலைவராகவும் ஆனி ஆபிரஹாம் விரைவு நடவடிக்கைப் படையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மைல்கல்லை எட்ட இரு பெண் அதிகாரிகளும் தங்களது பயணத்தில் அயராத உழைப்பை வழங்கி இருப்பதாக சக அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். முதல் சி.ஆர்.பி.எஃப்., பெண்கள் படை 1986ஆம் ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இன்று ஆறாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் இப்படையில் பணியாற்றிவருகின்றனர்.
- ராகா