அஞ்சலி | இலா பட்: பெண்களுக்கான தொழிற்சங்கத்தைக் கட்டமைத்தவர்

அஞ்சலி | இலா பட்: பெண்களுக்கான தொழிற்சங்கத்தைக் கட்டமைத்தவர்

Published on

‘ஏழ்மை என்பது அதிகாரமின்மை. தங்கள் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை ஏழைகள் பெறாத வரைக்கும் வறுமையை ஒழிக்க முடியாது’

- இலா பட்.

உழைப்பாளர்கள் என்றதுமே உடலுழைப்புத் தொழிலில் ஈடுபடும் ஆண்களின் பிம்பம் நம் மனத்துக்குள் நிழலாடுவதை மாற்றியமைக்கப் போராடியவர் களில் இலா பட் முக்கியமானவர். உலக அளவில் கொண்டாடப்படும் தொழிற் சங்கவாதி. இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 1933 செப்டம்பர் 7 அன்று பிறந்தார். நம் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிப்பதில் குடும்பத்துக்கு முக்கியப் பங்குண்டு. இவரது வாழ்விலும் அது பொய்த்துப்போகவில்லை. இவருடைய அப்பா சுமந்த், மாவட்ட நீதிபதியாக இருந்தவர். அம்மா வனலீலா, ‘அனைத்திந்திய பெண்கள் மாநாடு’ என்னும் அமைப்பின் குஜராத் கிளையின் செயலாளராகச் சில காலம் செயல்பட்டவர். பெண் கல்விக்காகவும் சமூகச் சீர்திருத்தத்தை ஏற்படுத்தவும் 1927இல் கமலாதேவி சட்டோபாத்யாயவால் உருவாக்கப்பட்ட அமைப்பு அது. குடும்பம் சமூக அக்கறையை ஊட்டி வளர்க்க, சட்டப் படிப்பைத் தேர்ந்தெடுத்தார் இலா.

சேவையின் பாதையில்

1954இல் தங்கப் பதக்கத்துடன் சட்டப் படிப்பை முடித்தவர் அதற்கு அடுத்த ஆண்டே இந்தியாவின் பழம்பெரும் தொழிற் சங்கமான ஜவுளித் தொழிலாளர் சங்கத்தின் வழக்கறிஞர் பிரிவில் இணைந்தார். ஜவுளித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக காந்தி போராடியதைத் தொடர்ந்து இந்தியாவின் மூத்தத் தொழிற்சங்கவாதியான அனுசுயா சாராபாயால் 1920இல் தொடங்கப்பட்ட தொழிற்சங்கம் இது. ஆலைகளில் பணி புரியும் பெண்களின் கல்விக்கு இந்தச் சங்கம் முக்கியத்துவம் கொடுத்தது. தொழிலாளர் நலன் குறித்துப் பயிலும் சிறந்த களமாக இலா வுக்கு இந்தத் தொழிற்சங்கம் அமைந்தது.

காந்தியின் அகிம்சை, தற்சார்பு போன்ற கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார் இலா. பீடி சுற்றுவது, நெசவு, தையல், சுள்ளி - குப்பை சேகரிப்பது போன்ற முறைசாராத் தொழில் களில் ஈடுபடும் பெண்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இவர்கள் பணம் படைத்தவர்களாலும் முதலாளிகளும் உழைப்புச் சுரண்டலுக்கும் பாலியல் தொல் லைக்கும் ஆளாக்கப்படுவதை அறிந்தார். அதிகக் கடன் சுமையால் குடும்பத்தில் அனை வருமே காலம் முழுக்க உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் உணர்ந்தார். இதுபோன்ற பெண்களின் உரிமைகளுக்காகச் சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான தொழிற்சங்கத்தை (Self Employed Women’s Association – SEWA) 1972இல் அமைத்தார். இது 1990களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவின் பெண்களுக்கான மிகப் பெரிய தொழிற்சங்கமாக வலுப் பெற்றது. தற்போது 18 மாநிலங்களில் அதன் உறுப்பினர்கள் பரவியுள்ளனர். 1996இல் ஓய்வுபெறும்வரை அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளராகச் செயல்பட்டார்.

வளர்ச்சி தரும் ‘ஆறு’

பல்வேறு தொழில்களில் ஈடுபடுகிறவர் களுக்காக அந்தத் தொழிற்சங்கத்தின் கீழ் 71 கூட்டுறவு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. பெண்களை அதிகாரப்படுத்துவது அவசியம் என்றார் இலா. ‘மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுடன் அடிப்படைக் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய மூன்றும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் நாம் முழுமையான வளர்ச்சியை அடைய முடியும்’ எனத் தான் எழுதிய ‘Anubanth: Building Hundred - miles communities’ என்கிற நூலில் இவர் குறிப்பிட்டுள்ளார். இவை எல்லாமே மக்கள் வாழும் நூறு மைல்களுக்குள் கிடைக்க வேண்டும் என்பது இவரது நிலைப்பாடு.

பெண்ணுக்குப் பொருளாதாரத் தற்சார்பு அவசியம் என வலியுறுத்தியவர் இலா. முறைசாராத் தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்குப் பணத்தைப் பெறவும் சேமிக்கவும் எந்தவொரு அமைப்பும் இல்லாத காலம் அது. பெண்கள் சேமிக்கிற சிறுவாட்டுப் பணம் எலிக்கடிக்கும் கணவன்/மகனின் அபகரிப்புக்கும் ஆளாகும் அவலம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகியபோது அங்கேயும் பாராமுகம். கற்பனைக்கும் எட்டாத வட்டிக்குப் பணம் வாங்கும் கொடுமையும் சேர்ந்து அவர்களை அலைக்கழித்தது. அப்போது அந்தப் பெண்கள், ‘எங்களிடம் பணம் குறைவாக இருந்தாலும் எண்ணிக்கையில் இவ்வளவு அதிகமாக இருக்கிறோமே. நமக்காக ஏன் நாமே ஒரு வங்கியைக் கட்டமைக்கக் கூடாது?’ என பெண் தொழிலாளர்கள் கேள்வியெழுப்பினர். அது இலாவை ஆச்சரியப்படுத்தியது. அதைத் தொடர்ந்து பெண்களுக்கான முதல் கூட்டுறவு வங்கி 1974இல் அமைய அவர் காரணமாக இருந்தார். அந்த வங்கி, பெண்களுக்குக் கடனுதவி வழங்கியதோடு அவர்களுக்குத் தொழில்ரீதியான ஆலோசனைகளையும் வழங்கியது. பெண்கள் அனைவரும் சேர்ந்து கூட்டுறவு வங்கியை நிறுவியதை ‘அமைதிப் புரட்சி’ என இலா குறிப்பிடுகிறார்.

உழைப்புக்கு மதிப்பளிப்போம்

பெண்களுக்கான உலக வங்கியின் (Women’s World Bank) இணை நிறுவனராக இருந்து அதன் தலைவராகவும் சில காலம் பொறுப்பு வகித்தார். குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்தியத் திட்டக் குழுவின் உறுப்பினராக இருந்தார். முறைசாராத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் ஆகியோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சாலையோர வியாபாரி களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு, ஒழுங்குமுறைச் சட்டம் உருவானதில் இவரது தொழிற்சங்கத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. கறுப்பின உரிமைப் போராளியும் தென்னாப்ரிக்காவின் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலா மனித உரிமைப் பாதுகாப்புக்காக உருவாக்கிய ‘தி எல்டர்ஸ்’ அமைப்பின் நிறுவன உறுப்பினர் இவர்.

வீட்டு வேலைகளில் செலவிடப்படும் பெண்களின் உழைப்பைப் புறக்கணிப்பது அநீதியானது என வாதாடியவர் இவர். “கையகல நிலத்தில் காய்கறிகளைப் பயிரிடுவது, துணிகளைத் தைப்பது, சந்தைக்கும் குடும்பத்துக்கும் அவற்றைத் தருவது, குடும்பத்தின் பொருளாதார, கல்வி, சமூக, உளவியல் தேவைகளைக் கவனிப்பது என நிலையான சமூகத்தை அமைப்பதில் பெண்கள் பங்கெடுக்கிறார்கள். அந்த ‘வீட்டு’ வேலை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் புறக்கணிக்கப்படக் கூடாது” என்று தொடர்ந்து வலியுறுத்தியவர் இலா. உழைக்கும் பெண்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவந்தவருக்கு ராமன் மகசேசே விருது (1977), Right Livelihood award (1984), பத்மஸ்ரீ (1985), பத்ம பூஷண் (1986) போன்ற அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன. SEWA அமைப்பின் 50ஆம் ஆண்டு கொண்டாட்டம் கடந்த ஆண்டு நடைபெற்றபோது 88 வயதிலும் அதில் உற்சாகத்துடன் பங்கேற்று, அடுத்த 50 ஆண்டுகளுக்கான திட்டம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்றார். நவம்பர் 2 அன்று அவர் இறந்தபோது இந்தியாவைத் தாண்டியும் தலைவர்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்தது அவரது பொதுநலச் சிந்தனை உலகளாவியது என்பதற்குச் சான்று. அமைதிக்காகக் குரல்கொடுத்த அவர், அமைதி என்பதை இப்படி வரையறுக்கிறார்: “போர் இல்லாமல் இருப்பது அமைதியல்ல. போருக்கு அவசியமில்லாத சூழலை உரு வாக்குவதுதான் அமைதி. அமைதி என்பது வளர்ச்சியடைந்த, வளமான சமூகத்தால் அனுபவிக்கப்படுவது. சமூகத்தின் சமநிலையை மீட்டெடுப்பதே நீடித்த அமைதியைத் தரும்”.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in