

உலகம் பரந்து விரிந்ததாக இருந்தாலும், இந்த உலகில் வாழும் அனைவருக்கும் உலகம் வசப்படுவதில்லை. ஆணின் இயங்கு வெளி, பரந்த வெளி; கட்டுப்பாடற்ற வெளி. நாடு, நகரம், மலை, முகடு, காடு, கடல், பிரபஞ்சம் என்று அனைத்து இடங்களுக்கும் ஆண் செல்லலாம். ஆணின் இயக்கத்துக்கு எப்போதும் தடையிருந்ததில்லை. பெண்ணின் இயங்கு வெளி அன்று முதல் இன்றுவரை குறுகியதாக, எல்லை வரையறுக்கப்பட்டதாக, பாதுகாப்புக்குரியதாக, கட்டுப்படுத்தப் பட்டதாக, கண்ணுக்குத் தெரியாத வேலிகள் அமைக்கப்பட்டதாக, மூச்சு முட்டுவதாக என்று ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளது.
‘பெண் வெளி ’ஆணாதிக்கச் சட்டங்களினால் உருப்பெற்றது. ஆணாதிக்கச் சட்டகங்களுக்குள் இறுக்கி அடைக்கப்பட்டது. ஆணின் அரசியல் அதிகார அரசியல் மட்டுமல்ல; பெண் உலகை முடக்கிய அறிவார்ந்த அரசியலும்தான். ராமாயணம் சொல்லும் ‘லட்சுமணன் கோடு’அனைவரும் அறிந்ததே. ஆண்கள் கிழித்த கோட்டைத் தாண்டினால் பெண்ணுக்கு வாழ்வு போராட்டமாகத்தான் அமையும் என்று உணர்த்துகிறது ராமாயணம். நம் இலக்கியங்கள் இல்லத்துக்குள் அடைபட்டிருப்பவளைக் ‘கற்புக்கரசி’என்கின்றன. வீட்டைத் தாண்டி வெளியில் புழங்குபவர்கள் பொதுமை மகளிராக இருக்க வேண்டும் அல்லது பெண் துறவிகளாக இருக்க வேண்டும் என்று வரையறை செய்கின்றன.
பழந்தமிழ்ச் சமூகத்தில் பெண்ணுக்குக் கடல் தாண்டிச் செல்லும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. சென்ற நூற்றாண்டுவரை பெண்ணுக்கு வீட்டை விட்டு வெளியே வர உரிமை கிடையாது. வீட்டுக்குள்ளும் அவள் புழங்குமிடம் சமையலறையுடன் கூடிய பின்கட்டு மட்டும்தான். பிற ஆண்கள் வந்து போகும் முன்கட்டு ஆண்களுக்கே உரியது. அவன் அழைத்தால் தவிர, அதற்குள் நுழையப் பெண்ணுக்கு உரிமையில்லை. முன்கட்டுக்கும் பின்கட்டுக்கும் இடையே உள்ள அரசியல், ஆணாதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் ஒரு சேர அடையாளம் காட்டுகிறது. பின்கட்டில் பெண்கள் அடுப்புச் சுழல், சமையல் புதைமணல் என்று தப்பித்தலே இல்லாத ஆயுள் தண்டனை பெற்று, விடியலே இல்லாத அந்தகாரத்தில் வாழ்ந்து மறைந்த நிரந்தரப் போராட்டங்களை நாம் அறிவோம்.
முந்தைய தலைமுறைப் பெண்களின் வாழ்க்கை நிரந்தரமாகப் பின்கட்டில் முடிந்துவிட, இந்தத் தலைமுறைப் பெண்கள் பணியின் நிமித்தம் வீட்டுக்குள் இருந்து வெளிவந்து, புது உலகில் காலடி வைத்தனர். ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர்கள் எல்லாத் துறைகளிலும் காலடி வைக்கத் தொடங்கிய பின், அதிலும் குறிப்பாகக் காவல்துறை, பாதுகாப்புத் துறை போன்றவற்றில் பெண்களின் பங்கு அதிகரித்த பின்பு, பெண்களின் இயங்கு வெளி அகலமானது. இன்றைய புதிய தலைமுறைப் பெண்கள் பணி நிமித்தமாக உலகம் முழுவதும் பயணிக்க, அளக்க முடியாத அளவுக்குப் பெண்களின் வெளி விரிவடைந்துள்ளது.
கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்ற பெண்கள் பிரபஞ்ச வெளியில் பயணித்து, அதனைத் தங்களதாக்கிக்கொண்டனர். வாலண்டினாவிலிருந்து இன்றுவரை பிரபஞ்ச வெளியில் பறந்தும் , நடந்தும், சுற்றுலா
சென்றும் அந்த வெளியைத் தமதாக்கிக்கொண்டவர்கள் அறுபது பெண்கள் என்றாலும் அவர்கள் அறுபதாயிரம் கோடிப் பெண்களின் பிரதிநிதிகள். முன்பு சமையலறை ஜன்னலிலிருந்து உலகைப் பார்த்து அதிசயித்த பெண்கள், இன்று பிரபஞ்ச வெளியில் விண்கலன் ஜன்னலிலிருந்து, சிறிய உருண்டையாகத் தெரியும் உலகைப் பார்த்து ரசிக்கும் நிலை உருவாகிவிட்டது.
இனி, எல்லாப் பெண்களுக்கும் பரந்த வெளி இயங்கு தளமாகும் சாத்தியக் கூறுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். கல்வி மட்டுமன்றி, தன்னம்பிக்கையும் தனித்துவமும் ஊக்கமும் செயல்பாடும் பெண்ணுக்குத் தேவை. பிற்போக்குத்தன்மையைப் புறந்தள்ளிவிட்டு, சுயமுயற்சி எடுத்துச் சொந்தக் காலில் நிற்க முனைந்தால் பெண்களின் இயங்கு வெளியும் பரந்துபட்டதாக மாறுவது உறுதி.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com