

பதின்ம வயதினரின் மூளையும் பெரியவர்களின் மூளையும் மாறுபட்டுச் செயல்படுகின்றன. உடலியல் வளர்ச்சியின்படி ஒரு குழந்தைக்கு உயிர் வாழ்வதற்குத் தேவையான மண்டலங்கள் பிறக்கும்போதே முழுமை பெற்று விடுகின்றன. ஆனால், நரம்பு மண்டல வளர்ச்சி மட்டும் பிறந்த பின்பும் சுமார் 25 வயதுவரை தொடர்கிறது.
இந்த வயது வரம்பில் ஆய்வாளர்கள் மாறுபடுகிறார்கள். மூளையின் முன் பகுதி (Pre-frontal cortex) அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட உதவுகிறது. பெரியவர்கள் பகுத்தறிந்து செயல்படுவது இதனால்தான். பின்மூளையின் உள்புறம் உள்ள ‘அமிக்டலா’ (amygdala) எனும் பகுதி உணர்வுகளுக்குப் பொறுப்பாகிறது. அமிக்டலாவுக்கும் மூளையின் முன் பகுதிக்கும் உள்ள இணைப்பு பதின்மவயதில் வலுவடையாமல் இருக்கும். இதனால், எண்ணங்கள் வரும்முன் உணர்வுகள் அலை மோத ஆரம்பிக்கும். சிந்திக்க நேரமில்லை; அதனால்தான் உணர்வுப்பூர்வமாகவே அவர்கள் செயல்படுகிறார்கள். பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் கண நேரத்தில் ஓர் உந்துதலால் தீர்மானத்தை எடுத்துவிடுகிறார்கள் என்று மருத்துவம் சொல்கிறது.
காதலனைச் சந்திக்கும்போது ஏற்படும் மனக் கிளர்ச்சியினால் தவறு செய்வது, அந்தரங்கமான செல்பி - காதல் கடிதங்கள் அனுப்புவது, தோல்வியை எதிர்நோக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள முனைவது போன்றவை உணர்வுகளின் சொல்படி நடப்பதால்தான் நிகழ்கின்றன. காதலில் வரும் சிக்கல்களில் பாதிக்கப்படுபவள் பெண்தானே! அதனால்தான் பெற்றோர்கள் பெண்களைக் கண்டிப்போடு வளர்க்கிறார்கள். தன் பெண் உணர்வுகளுக்கு இடம் கொடுக்க மாட்டாள் என்று பெற்றோர் நம்பும்போது கண்டிப்பு குறையும். நம் சமுதாயம், மணமாவதற்கு முன் கர்ப்பமடையும் பெண்ணை அங்கீகரிக்குமா? மேலும், தீர்மான மெடுக்கும் திறன் இல்லாத காலத்தில், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது சரியாகுமா? காதலிப்பவனைத்தான் மணம் செய்துகொள்வோம் என்று நம்பி, வரம்புமீறிப் பழகுவது ஆபத்தல்லவா? பெற்றோர்கள் மறுத்துவிடலாம். காதலன் விட்டுப் போய்விடலாம். வேறு வழியின்றி மற்றொருவரை மணமுடித்து, காதலனிட மிருந்து மிரட்டல்கள் வந்து தவித்த பெண்கள், வீட்டைவிட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்டு பெற்றோரால் ஒதுக்கப்பட்டு, காதல் கணவனால் துன்புறுத்தப்பட்ட பெண்கள் இவர்களது கதைகள் நமக்குத் தெரிந்தவைதானே!
காதல்வயப்படும் பதின்ம வயதினரது குறிக்கோளே மாறிவிடுகிறது. காதலிப்பதற்கு முன் தீவிரமாக ஒரு சிறந்த இலக்கை நோக்கிப் பயணம் செய்யும் ஒரு பெண், காதலித்ததும் இலக்கை மாற்றிக்கொள்கிறாள். காதலனுடன் மகிழ்ச்சியாகக் காலம் கழிப்பதுதான் அவளது இலக்காகிவிடுகிறது. படிப்பு பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
பதின்ம வயதில் சில ஆண்களிடம் ஈர்ப்பு ஏற்படும்போது அனுபவிக்கும் மனக் கிளர்ச்சி ஓர் அற்புதமான அனுபவம்; ஆனால், அதற்காக முதல் அடியை எடுத்து வைத்துவிடக் கூடாது. ஒரு அடி முன் நோக்கி நீங்கள் சென்றுவிட்டால் நிறுத்த முடியாது. வேகம் அதிகரிக்கும்; பிரேக் இல்லாத வண்டிபோல், கட்டுப்பாடின்றிப் பயணிக்க ஆரம்பிப்பீர்கள்.
இது உங்கள் வாழ்வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பருவம். படிப்பில் உள்ள கவனத்தைச் சிதறவிடாமல் உழைத்தால் வெற்றி அடையலாம். உங்களது அறிவும் திறமையும் அளவில் அடங்காதவை. காதலும் கல்யாணமும் காத்திருக்கட்டும், நீங்கள் வேலையில் அமரும் வரை! நடப்பதைப் பற்றிக் கவலைப்படுவதால் கரிசனத்தோடு இதை எழுதுகிறேன். அமிக்டலாவைக் காரணம் காட்டித் தப்பிக்கப் பார்க்காதீர்கள்! உணர்வு வயப்பட்ட அல்லது மனக் கிளர்ச்சி நிலையில் (impulsive) எதையோ செய்யத் தோன்றினால், உடனே பிஸ்கட் போன்று எதையாவது சாப்பிட்டுவிடுங்கள். நீங்கள் செய்ய நினைத்த அந்தச் செயல் சில நிமிடங்கள் ஒத்திப் போடப்படும். அதற்குள் அறிவுப்பூர்வமான சிந்தனை தலைதூக்கும். உணவில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஓர் உணவை ஒரு வாரத்துக்குத் தவிர்த்து விடுங்கள். இந்தப் பயிற்சி உங்களது உணர்வுகளைக் கட்டுப்படுத்த உதவும். செய்து பார்க்கிறீர்களா?
(மனம் திறப்போம்)
கட்டுரையாளர் உளவியல் ஆற்றாளர்.