அக்டோபர்: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் | மீண்டெழுவோம் புற்றுநோயிலிருந்து!

அக்டோபர்: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் | மீண்டெழுவோம் புற்றுநோயிலிருந்து!
Updated on
3 min read

நம் பெண்களுக்கு எதற்கெடுத்தாலும் தயக்கமும் அச்சமும் வந்துவிடும். அதுவும் தங்கள் உடல்நலன் சார்ந்தது என்றால் அதற்கு மூன்றாம்பட்சமாகக்கூட முக்கியத்துவம் தருவதில்லை. இந்தச் சமூகம் உருவாக்கிவைத்திருக்கும் கட்டமைப்புகளில் இருந்து மீள முடியாமல் ‘தியாக’ வாழ்க்கை வாழ்வதையே லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள். மார்பகப் புற்றுநோயால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதையும் இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

1990களில் உலக அளவில் நான்காம் இடத்தில் இருந்த மார்பகப் புற்றுநோய் இன்று முதலிடத்தைத் தொட்டுவிட்டது. 2020 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் புற்றுநோயாளிகளில் 90 ஆயிரம் பெண்கள் மார்பகப் புற்றுநோய் தொடர்பான கோளாறுகளால் மரணமடைந்துள்ளனர். மருத்துவ வசதி பெருகிவிட்ட காலத்திலும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பெண்கள் இறப்பது கொடுமை. பெண்களிடம் இருக்கும் அறியாமையும் தங்கள் உடல் நலன் சார்ந்த அக்கறையின்மையும்தான் இதற்கு முக்கியக் காரணங்கள். கருப்பை வாய், மார்பகம் போன்ற அந்தரங்க உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுவதைப் பெரும்பாலான பெண்கள் தங்கள் நடத்தையோடும் கண்ணியத்தோடும் நேரடியாகத் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். அதனாலேயே அவற்றில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் குடும்ப உறுப்பினர்களிடம்கூடச் சொல்வதில்லை.

சுயபரிசோதனை அவசியம்

சமூகப் புறக்கணிப்பும் தனிமைப்படுத்து தலும் பெண்களை அச்சுறுத்துவதால் மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டாலும் யாருக்கும் சொல்லாமல் ‘கண்ணியத்தோடு’ இறந்துவிடுவது நல்லது என்று நினைக்கிறார்கள். தனக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்டால் தன்னுடைய மகள்களின் திருமண வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும், தங்கள் குடும்பத்துக்கு அவப் பெயர் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் பெண்கள் இதை வெளியே சொல்வதில்லை, சிகிச்சை பெறவும் முன்வருவதில்லை. பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வாழும் நிலைக்கு அவர்களைத் தள்ளுவது வேதனைக்குரியது. இதில் கிராமம், நகரம் என்றெல்லாம் வேறுபாடு கிடையாது.

புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைத் தவறவிடுவதும் தாமதமாகச் சிகிச்சைக்கு வருவதும் சிகிச்சை அளிப்பதில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. புற்றுநோயின் ஆரம்ப கட்டத் தில் வலி இருக்காது என்பதால் பெரும்பாலான பெண்களால் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய முடிவதில்லை. அதனால்தான் 18 வயதைக் கடந்த அனைத்துப் பெண்களும் மார்பக சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். மார்பகக் கட்டியைக் கையால் அழுத்திப் பார்த்தே கண்டறிந்துவிடலாம் என்பதால் சுயபரிசோதனை அவசியமானது. தங்கள் குடியிருப்புக்கு அருகில் மருத்துவமனை இல்லாதது, பயணத்துக்கும் சிகிச்சைக்கும் ஆகும் செலவு, நீண்ட நாள்கள் சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை போன்றவையும் பெண்களை மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுக்கின்றன. தங்கள் உயிரைவிடவும் இவை எதுவும் பெரிதல்ல என்பதைப் பெண்கள் உணர வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் சில தனியார் மருத்துவமனைகளிலும் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கப்படுவதால் செலவு பற்றிப் பெண்கள் கவலைப்படத்தேவையில்லை. ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்துவிட்டால் பெரும்பாலான மார்பகப் புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும். சிகிச்சைக்குப் பிறகும் இயல்பான வாழ்க்கையை அவர்கள் தொடரலாம்.

போராடி வென்றவர்

அரசும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் மார்பகப் புற்றுநோய் குறித்துத் தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருப்பது ஓரளவுக்குப் பலனளித்துள்ளது. அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மாதமாக அனுசரிக்கப்படுகிறது. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவதும் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளன. புற்றுநோய் குறித்த அச்சத்தையும் பதற்றத்தையும் அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் தணிக்கிறார்கள். புற்றுநோயைக் கண்டறிய நம் உடல்நலன் மீது அக்கறை இருந்தால் போதும்; கிராமம் – நகரம், படித்தவர் – படிக்காதவர், ஏழை – பணக்காரர் என்று எதுவும் அதற்குத் தடையல்ல என்கிறார் பொள்ளாச்சியை அடுத்த பெத்தநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி.

தனலட்சுமி
தனலட்சுமி

“நான் பள்ளிக்குச் சென்றதில்லை. எங்களுக் குக் காட்டு வேலைதான். அது இல்லாதப்ப 100 நாள் வேலைக்குப் போவோம்” என்று சொல்லும் தனலட்சுமி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்திருக்கிறார். “அன்னைக்கும் காட்டு வேலைக்குப் போயிட்டு வந்தேன். வலது பக்க மார்ல புளியங்கொட்டை அளவுக்குக் கட்டி இருக்கற மாதிரி தென்பட்டது. வலி எதுவும் இல்லை. உடம்பு மட்டும் கொஞ்சம் அசதியா இருந்தது. அப்புறம் பக்கத்துல இருக்கற புன்னை ஆஸ்பத்திரிக்குப் போனேன். எனக்கு ஒரே ஒரு பொண்ணுதான். அவ வீட்டுக்குப் போயிருக்கும்போது இதைப் பத்தி சொன்னேன். அவ வீட்டுப் பக்கத்துல இருக்கற மோகனா மேடத்துக்கும் இதே மாதிரிதான் கேன்சர் வந்து ஆபரேஷன் பண்ணியிருக்காங்கன்னு சொன்னா. அவங்ககிட்ட பேசின பிறகு தைரியம் கூடுன மாதிரி இருந்துச்சு. கோயம் புத்தூர்ல சிகிச்சை எடுத்துக்கிட்டேன். முதல்ல ஆபரேஷன் பண்ணாங்க. அதுக்கு அப்புறம் ஒன்பது கீமோ ஊசி போட்டாங்க. கீமோதெரபிக்கு அப்புறம் முடி கொட்டுச்சு. சரி, வேண்டுதலுக்கு முடிகொடுப்போம்தனே, அந்த மாதிரி இருக்கட்டும்னு மொட்டை அடிச்சிக்கிட்டேன். அப்புறம் 28 கரண்ட் சிகிச்சை (ரேடியேஷன் தெரபி). எல்லாம் முடிச்சி இரண்டரை வருஷமாகுது. நல்லா இருக்கேன்” என்று ஆறு மாத சிகிச்சை அனுபவத்தை ஐந்தே நிமிடங்களில் புன்னகைத்தபடி பகிர்ந்து கொண்டார் தனலட்சுமி. அறுவை சிகிச்சையை நினைத்துப் பயப்படவில்லையா எனக் கேட்டால், “ஏன் பயப்படணும், எதுக்குப் பயப்படணும்? என்னை மாதிரி எவ்வளவோ பேர் ஆபரேஷன் செஞ்சிக்கிட்டு நல்லா இருக்கும்போது பயப்படவே தேவையில்லை. எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவு நல்லது” என்கிறார் அவர். “இப்பவும் களை எடுக்கறது, நடவு நடறுதுன்னு காட்டு வேலைக்குப் போறேன். அதனால, பொம் பளைங்க எதை நினைச்சும் பயப்படாம நம்ம உடம்பை நல்லா கவனிச்சுக்கணும்” என்கிறார்.

47 வயதாகும் தனலட்சுமிக்குக் கல்வி, பொருளாதார வசதி என எந்தப் பின்புலமும் இல்லை. ஆனால், தன்னம்பிக்கையோடு புற்றுநோயிலிருந்து போராடி மீண்டிருக்கிறார். மார்பக சுயபரிசோதனையும் ஆரம்ப நிலையிலேயே எடுக்கப்படும் சிகிச்சையும் மார்பகப் புற்றுநோயை வெல்லும் வழிகள். காலம் தாழ்த்தாத சிகிச்சையும் அதற்குப் பிறகான வாழ்க்கையும் நம் உரிமை என்பதைப் பெண்கள் உணர வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in