

எனக்குப் புத்தகங்கள் வாசிப்பதில் அலாதி ஆர்வம். நான் படித்து முடித்த புத்தகங்களைப் பற்றிய கருத்துகள், ரசித்த பகுதிகள் ஆகியவற்றை என் கணவரிடம் பகிர்ந்துகொள்வேன். குழந்தையின் குதூகலத்தோடு நான் சொல்வதை எந்த இடையீடும் இல்லாமல் அவர் பொறுமையாகக் கேட்டு ரசிப்பார். ஒரு நாள், “இவ்ளோ ரசிச்சு சொல்றியே, இதையெல்லாம் பத்திரிகை களுக்கு எழுதி அனுப்பலாமே” என்று சொன்னார். அதெல்லாம் சரிவருமா என்ற என் தயக்கத்தைத் தகர்த்து, ஊக்கப்படுத்தினார். பிறகு நானும் ஆர்வத்தோடு புத்தகங்களில் நான் ரசித்த பகுதிகளைப் பற்றி பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு வார, மாத இதழிலும் என் கடிதம் வந்துள்ளதா என்று பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
ஒரு மாதம் எதிலும் என் கடிதம் வராததைக் கண்டு மிகவும் துவண்டுவிட்டேன். அப்போது என் கணவர், “உன் கருத்துகளைக் கடிதத்தின் மூலம் நீ பகிர்ந்துகொண்டதைக் கட்டாயம் ஒருவர் படித்துப் பார்த்துவிட்டுத்தான் அதைத் தேர்ந்தெடுக்கிறார் அல்லது வேண்டாம் என்று முடிவுசெய்கிறார். ஒருவர் படிப்பதே உனக்கு சந்தோஷம்தானே” என்று சொன்னார். அப்போதுதான் எனக்கும் அது புரிந்தது. அவரது நேர்மறையான சிந்தனை, ஆர்வத்தைத் தூண்டும் சொற்கள் யாவும் என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டின.
பிறகென்ன… சொல்லிவைத்தது போல ஒவ்வோர் இதழிலும் என்னுடைய அனுபவம், கட்டுரைகள், விவாத கருத்துகள் போன்றவை இடம்பெறத் தொடங்கின. எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் சலிப்போடு துவண்ட சமயம் உற்ற தோழனாக என்னை ஊக்குவித்த என் கணவரிடமிருந்துதான் எந்தவொரு விஷயத்தையும் நேர்மறையாகச் சிந்தித்து அதை அணுகும் முறையைக் கற்றுக் கொண்டேன்.
இதில் இன்னொரு நன்மையும் நடந்தது. என்னுடைய குட்டி குட்டி அனுபவப் பகிர்வுகள் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
உறவுகள், நண்பர்கள் எல்லோரும் பாராட்டும்போது என் கண்கள் என் கணவரைத்தான் நன்றி சொல்லத் தேடும். இப்போதும், தான் ஏதாவது படித்து அறிந்த செய்தியை உடனே என்னோடு பகிர்ந்துகொள்வதோடு, “உனக்கு எழுதுவதற்கு உபயோகமாக இருக்கும். எனவே குறித்து வைத்துக்கொள்” என்று சொல்வார். அப்போதெல்லாம் மனம் பெருமிதத்தாலும் மகிழ்ச்சியாலும் பூரிக்கும். விவாதம், குறுக்கெழுத்துப் போட்டி என என் சந்தேகங்களுக்குக் கைகொடுக்கும் தோழன் என் கணவர்!
- பானு பெரியதம்பி, சேலம்.
தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே, கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்.