

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மறைந்த 82 வயது காவேரி அம்மாளின் உடலை பெண்கள் சுமந்து சென்று மரியாதை செலுத்தினர். 50 வயதுக்கு மேல் பெரியாரிய கொள்கையைப் பின்பற்றத் தொடங்கிய காவேரி அம்மாள், தான் இறந்த பிறகு அடக்கமோ, எரியூட்டவோ செய்யாமல் உடலைத் தானம் செய்துவிடுங்கள் எனத் தெரிவித்திருக்கிறார். தந்தையைப் போல, தாயார் காவேரி அம்மாளின் உடலையும் மருத்துவப் பயன்பாட்டிற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் தானம் வழங்கினர். பொதுவாக இறந்தவரின் உடலை ஆண்கள் சுமந்து செல்லும் நிலையில், காவேரி அம்மாளுக்குப் பெண்களால் செலுத்தப்பட்ட இறுதி மரியாதை பலரது கவனத்தைப் பெற்றது.
புலிட்சர் விருதாளர் பறக்கத் தடை
2022 ஆண்டுக்கான புலிட்சர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் நடைபெறுகிறது. விருது வென்ற காஷ்மீர் புகைப்படக்காரரான சன்னா இர்ஷத் மாட்டூ அமெரிக்கா செல்ல டெல்லி விமானநிலையம் வந்தபோது, குடியேற்ற அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர். “முறையான காரணமின்றி வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்படுவது இது இரண்டாவது முறை. விழாவில் பங்கேற்று விருது பெறுவது எனக்கு இந்த வாழ்நாளில் கிடைத்த மகத்தான ஒரு வாய்ப்பு” என சன்னா ட்வீட் செய்திருக்கிறார். பெண் பத்திரிகையாளர் ஒருவருக்குத் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்துச் சமூக வலைதளத்தில் பலர் கண்டனங்களைப் பதிவுசெய்தனர்.
பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவி விலகல்
பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமராக கடந்த மாதம் 6ஆம் தேதி பதவியேற்ற லிஸ் ட்ரஸ், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பிரிட்டனின் மந்தமான பொருளாதாரத்தை மீட்க முடியாததால் லிஸ் ட்ரஸ் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனால் பதவியேற்ற 45வது நாளில் தனது ராஜினாமா முடிவை அறிவித்திருக்கிறார். பிரிட்டன் அரசியல் வரலாற்றில் குறுகிய காலத்துக்கு பிரதமர் பதவி வகித்தவர் லிஸ் ட்ரஸ்தான்.