

தைமாத மேகம் ஊரெங்கும் வெண்பஞ்சாகப் படர்ந்திருந்தது. பேசும்போது எல்லாருடைய வாயிலிருந்தும் ஆவியாகப் புகை வந்துகொண்டிருந்தது. சுள்ளென்று வெயில் அடித்தாலும் யாருக்கும் உறைக்கவில்லை. இந்தப் பனிக்கு ஒருவேளை சட்டென்று தூறல் வந்துவிடுமோ என்று விவசாயிகள் பயந்துகொண்டிருந்தார்கள். ஏனென்றால், களத்தில் கருதுகள் அடிப்பதற்காகக் காய்ந்துகொண்டிருந்தன. கருது அறுத்த தட்டைகள் படப்பு ஏறுவதற்காகப் பிஞ்சையில் வரிசையிட்டுக் கொடிபோட்டுக் கட்டுவதற்காகத் தயாராக இருந்தன. பெளர்ணமிக்காக வளர்ந்துவரும் நிலா மேகங்களினூடே கலைந்து கலைந்து அவ்வப்போது வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தது.
பாதமுத்துவிற்குத் தூக்கம் பிடிக்க வில்லை. நாளைக்குச் சோளம் விதைக்க வேண்டும். புருசன் உழுது கொண்டுபோனால் இவள் விதை போட்டுக்கொண்டே போக வேண்டும். ஒருவேளை மழை வந்து தட்டை நனைந்துவிட்டால் உழவு மாடுகளுக்கான ஒரு வருஷ இரை பாழாப்போகுமே என்று நினைத்து நினைத்துப் படுக்கையில் புரண்டுகொண்டு கிடந்தாள். ஆனாலும் படுக்கை கொள்ளவில்லை. புருசன் தூங்கட்டும், நாம் போய் தட்டையைக் கட்டிக்கொண்டு வந்து வீடு சேர்த்துவிடுவோம் என்று எழுந்து பிஞ்சைக்கு வந்துவிட்டாள். வந்தவள் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு ஓடி ஓடி தட்டையைக் கட்ட ஆரம்பித்துவிட்டாள்.
தட்டைக்குள்ளிருந்து பாம்புகளும் கீரிப்பிள்ளைகளும் முயல்களும் எதிராட்டமும் புதிராட்டமும் போட்டுக் கொண்டு இருக்க இவள் காலடிச் சத்தத்தில் எல்லாம் ஓடி மறைந்தன. பாதமுத்து அவற்றையெல்லாம் கவனிக்க வில்லை. ஓடி, ஓடி தட்டைகளைச் சுருட்டி, சுருட்டிக் கட்டினாள். எப்போதும் எந்தத் தட்டைகளையும் கட்டுவதற்குக் கயறு தேவைப்படாது. எந்தத் தட்டைகளை அறுக்கிறோமோ அதை வைத்தே அவற்றைக் கட்டிவிடலாம். இவள் தட்டைகளைக் கட்டுக் கட்டாகக் கட்டி முடித்தபோது அவள் புருசன் மணிகண்டன் முழித்துவிட்டான். வெளிவாசலில் தன் கட்டில் பக்கத்தில் படுத்திருந்த பொண்டாட்டியைக் காணவில்லை, எங்கே போயிருப்பாள் என்று இரண்டு முறை குரல் கொடுத்துப் பார்த்தான். பதில் குரல் வரவில்லை.
சரி பிஞ்சையில் வேலை கிடந்தால் இவளுக்கு உறக்கம் வராது, நாளைக்குச் சோளவிதை போட வேண்டியிருப்பதால் இவள் பிஞ்சைக்குத்தான் போயிருப்பாள் என்று இவனும் பிஞ்சைக்கு வந்தான். அப்போதுதான் தட்டையைக் கட்டி முடித்த பாதமுத்து தூக்க முடியாமல் ஒரு கட்டைத் தூக்கிக் கொண்டிருந்தாள். இவன் உடனே சட்டென ஓடி கை கொடுக்க கட்டு பாதமுத்து தலையில் ஏறிவிட்டது. அவளும் அவசரமாகக் கட்டைக் கொண்டுவந்து படப்படியில் போட்டாள். இப்படியே மொத்தம் இருபத்தி ஐந்து கட்டு. இவள் கட்டைப் போட்டுவிட்டுப் பிஞ்சைக்கு வந்து தட்டைத் தலைக்குத் தூக்க முயற்சிதான் பண்ணுவாள். உடனே விருட்டென்று கட்டு தலைக்கு ஏறிவிடும். அவளும் எதைப் பற்றியும் நினைக்காமல் இருபத்தி ஐந்து கட்டுகளையும் சுமந்துகொண்டு வந்து போட்ட பிறகுதான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
கடைசிக் கட்டைத் தூக்கிவிட்ட இவள் புருசன் இவளுக்குத் தெரியாமலே முந்திவந்து தூங்குபவன் போல் கட்டிலில் படுத்துக்கொண்டான். கட்டுகளையெல்லாம் படப்படியில் போட்டுவிட்டு சாவகாசமாகத் தன் படுக்கைக்கு வரும்போது மூன்றாம் சாமம் ஆகியிருந்தது. புருசனை எழுப்பியவள் “நீரு இந்நேர வரையிலும் இங்கேயா படுத்திருந்தீரு” என்று கேட்டாள். அவள் புருசன் மணிகண்டனும், “இதென்னத்தா புதுசா கேக்க. கஞ்சியக் குடிச்சிட்டு வந்து கட்டுல படுத்தவந்தேன். இப்ப நீ எழுப்பப் போயிதேன் முழிக்கேன்” என்றான்.
உடனே பாதமுத்து திடுக்கிட்டுப் போனாள். அப்ப நமக்குக் கட்டைத் தலைக்குத் தூக்கிவிட்டது பேயாகத்தான் இருக்கும் என்று நினைத்து காய்ச்சலில் படுத்தவள்தான் அதன்பிறகு அவள் எந்திருக்கவே இல்லை.