

எத்தனையோ வெற்றியாளர்கள் திரும்பத்திரும்ப ஒரே விஷயத்தை அறிவுறுத்துவதை நான் கேட்டதுண்டு. உறுதி என்னும் மாமந்திரம்தான் அது. ஆனால், நான் கண்ட ஒருவரின் வாழ்க்கைப் பயணம் அப்படியல்ல. என் சிறு வயதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். அப்போது, அவர் கல்லூரி சென்றுகொண்டே அரசுப் பணித் தேர்வுக்கும் தயாரானார். இதனால், ஊரில் நல்ல மதிப்பு அவருக்கு. என் பெற்றோர்கூட நம் பிள்ளை இவரைப் போல படிக்க வேண்டும் எனப் பேசிக்கொள்வதை நான் கேட்டதுண்டு.
அடுத்தவர் அவரை நினைத்துப் பெருமைகொள்ளும்போது அவருடைய வீட்டில்? நல்ல செல்வாக்குதான். எதற்காக, இவ்வளவு பெருமை. இப்போது பலரும் போட்டித் தேர்வுகளுக்குப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது நடந்தது போட்டித் தேர்வுகள் குறித்துப் பரவலாக அறியப்படாத காலத்தில். இவ்வளவு பெருமையும் அவருக்குக் குறுகிய காலமே இருந்தது. உயர்நிலைப் படிப்புகளை முடித்துவிட்டு அரசுப் பணியாளர் தேர்வுக்குத் தயாராவதை முழுநேரப் பணியாகக் கொண்டார். நாட்கள் கடந்து செல்லச் செல்ல பெற்றோரும் மற்றோரும் முகத்தைச் சுருக்கினர். அவர் அதையெல்லாம் கண்டும் காணாதவராகப் படித்தார். பெற்றோர் வற்புறுத்தலால் திருமணம் நடந்தது. சில நாட்களுக்குள்ளேயே படிப்பின் பக்கம் திரும்பிவிட்டார் சற்று தீவிரத்துடன்.
ஓரிரு வருடங்களில் குழந்தையும் பிறந்து குடும்பச் சுமையும் அதிகரித்தது. தனியார் வேலைக்குச் செல்லும்படி உறவினர் அறிவுரை. இவ்வளவு வருடங்களாகப் படிப்பதால் அரைகுறை படிப்பாளி என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அப்படியல்ல. அவர் துறை சார்ந்த பகுதியில் நீங்கள் எந்தக் கேள்வி கேட்டாலும் அவர் சரியாகப் பதில் கூறுவார். அப்படியிருந்தும் வேலையில்லை. இதனால், அவருக்கு வீட்டிலும் வெளியிலும் மதிப்பு காணாமல் போனது. தற்போது நானும்கூட அதே தேர்வுக்குத் தயாராகும் காலம் வந்தும் அவர் படித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவ்வாறான உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்டவர்.
ஒரு நாள் அவரிடம் பேசும்போது, ‘என் சான்றிதழ்களைக் கண்டாலே தீ வைத்துவிட வேண்டும் என்கிற அளவிற்குக் கோபம் வருகிறது’ என்றார். இந்த அளவுக்கு நொந்துபோக வேண்டுமெனில் அவர் எவ்வளவு மோசமான சூழலை எதிர்கொண்டிருப்பார்? தற்போது, தனது குடும்பத்தாரின் கேலி கிண்டல் பேச்சுக்களையும் மனத்தின் மூலையில் வைத்துவிட்டுத் தனது குடும்பச்சுமையையும் கவனித்துக்கொண்டு படிக்கிறார். இத்தனை இன்னல் களை இவர் மட்டும் சமாளிக்கவில்லை. அரசுப் பணியாளர் தேர்விற்குத் தயாராகும் இளைஞர்களில் பலருக்கும் இந்நிலைமைதான். இப்படிப் படிப்பவர்களை இழிவாகப் பேசுவோரை நினைத்தால் கோபமாக இருக்கிறது. ஆனால், எது நடந்தபோதும் கல்வியைக் கைவிடக் கூடாது என்பதைத்தான் அவர் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டேன்.
- எஸ். ரஞ்சனி