மொழியின் பெயர் பெண்: எடித் சோடெர்கிரான் - சூரியன் நிரப்பிய தேன்

மொழியின் பெயர் பெண்: எடித் சோடெர்கிரான் - சூரியன் நிரப்பிய தேன்
Updated on
2 min read

சுவீடிஷ் மொழியின் முன்னோடி நவீனக் கவிஞராகக் கருதப்படும் எடித் சோடெர்கிரான் (1892-1923) தான் வாழ்ந்த காலத்தில் புறக்கணிப்பையே எதிர் கொண்டார். சுவீடனில் இருந்த சிறுபான்மை ஃபின்னிஷ் இனத்தைச் சேர்ந்தவர் சோடெர்கிரான். அவர்கள் இருந்த பிராந்தியம் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யா வசம் சென்றது. ஜார் மன்னனின் ஆளுகைக் காலத்தில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 1892-ல் பிறந்தார் எடித் சோடெர்கிரான். அவருடைய தாயார் வசதி மிக்க குடும்பத்திலிருந்து வந்தாலும் அரசியல் சூழல், குடும்பச் சூழல் காரணமாக அவர்கள் குடும்பம் ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவித்தது. 1907-ல் சோடெர்கிரானின் தந்தை காசநோயால் மரணமடைந்தார். 1909-ல் சோடெர்கிரானுக்கும் (வயது 17) காசநோய் இருப்பது கண்டறியப்படவே அவரது வாழ்க்கையில் பேரிருள் கவியத் தொடங்கியது.

பதின் பருவத் தொடக்கத்திலேயே ஜெர்மானிய மொழியில் கவிதைகள் எழுதத் தொடங்கிய சோடெர்கிரான் பிறகு சுவீடிஷ் மொழிக்கு மாறினார். அவரது முதல் தொகுப்பு 1916-ல் ‘கவிதைகள்’ என்ற தலைப்பில் வெளியானது. அதுவரை மரபுக் கவிதைகளின் ஆதிக்கம் இருந்துவந்த சுவீடிஷ் இலக்கிய உலகம் மரபை விடுத்து எழுதப்பட்டிருந்த சோடெர்கிரானின் கவிதைகளைப் புறக்கணித்தது. ‘சுவாரஸ்யமான கோமாளி’ என்றும் சில விமர்சகர்களால் இகழப்பட்டார் சோடெர்கிரான்.

குறுகிய வசந்த காலம்

புறக்கணிப்பால் மனவருத்தம் அடைந்திருந்தாலும் தன் கவிதை குறித்த நம்பிக்கை சோடெர்கிரானுக்கு வலுவாக இருந்தது. இதற்கிடையே அவரது வாழ்க்கை காசநோய் மருத்துவமனைகளுக்கிடையில் சிக்கிச் சிதைந்துகொண்டிருந்தது. உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்படுவதும் பிறகு மோசமாவதும் என்று, சொல்ல முடியாத இன்னல்களை எதிர்கொண்டார். நண்பர்கள், உறவினர் என்று எல்லோரிடமிருந்தும் தன்னைப் பெரும்பாலும் துண்டித்துக்கொண்டார். இந்த நிலையில், சோடெர்கிரானின் கவிதைகளின் மேன்மையைப் பற்றி விமர்சனம் எழுதிய ஒரே ஒரு விமர்சகரான ஹாகர் ஓல்ஸோனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு அவரது மிகக் குறுகிய வாழ்நாளின் வசந்த காலம். அவர்களுக்கிடையே நேரடி சந்திப்புகளும் தொடர்ந்த கடிதப் போக்குவரத்தும் நிலவின.

நித்தியத்தின் துயில்

1917-ல் ரஷ்யாவில் ஏற்பட்ட நவம்பர் புரட்சியால் எடித் சோடெர்கிரானும் அவருடைய தாயும் தங்கள் பாரம்பரிய சொத்தை இழந்து மீட்சியற்ற நிலையை அடைந்தார்கள். அப்போது கையில் காசில்லாமல் தனது உள்ளாடையைக்கூட விற்கத் துணிந்திருக்கிறார் சோடெர்கிரான். இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும் அவர் வலிமையாக இருந்தார்! நீட்சேவின் புத்தகங்களைப் படித்தது அவருக்குப் பெரும் மனவலிமையைக் கொடுத்தது. கடவுள் நம்பிக்கையை அவர் உதறித் தள்ளினார். மரணம் கூடிய சீக்கிரம் நிச்சயம் என்ற போதும் அவர் அதை இயல்பாக ஏற்றுக்கொண்டார். 1923-ல் காசநோய் முற்றி மரணமடைந்தார். அவரது கல்லறையில் அவரின் கடைசிக் கவிதையிலிருந்து நான்கு வரிகள் பொறிக்கப்பட்டன:

பாருங்கள், நித்தியத்துவத்தின் கரை இங்கு துயில்கிறது,

சலசலத்தோடுகிறது அந்த ஓடை இங்கே,

புதர்களுக்கிடையில் மரணம் வாசிக்கிறது

எளிமையான, இனிமையான

ஒரே கீதத்தை.

எடித் சோடெர்கிரானின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவரது தேர்ந்தெடுத்த கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘Love and Solitude’ என்ற தலைப்பில் ஸ்டீனா கட்ச்சடோரியனின் மொழியாக்கத்தில் 1981-ல் வெளியானது. இங்குள்ள கவிதைகள் அந்த நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

இருத்தலின் வெற்றி

எதன் பொருட்டு அஞ்ச வேண்டும் நான்? முடிவின்மையின் ஒரு பாகம் நான். பிரபஞ்ச சக்தியின் ஒரு பகுதி நான்,

கோடிக்கணக்கான உலகங்களுக்குள் ஒரு தனித்த உலகம்,

உச்சபட்ச ஒளிர்வு கொண்ட விண்மீன், எல்லாவற்றுக்கும் இறுதியாய் மரிக்கப்போகும் விண்மீன்,

வாழ்தலின் வெற்றி, சுவாசித்தலின் வெற்றி,

இருத்தலின் வெற்றி!

என் நாளங்களூடாக, மெதுவாக, காலம் பாய்வதையும்

இரவின் அமைதியான ஓட்டத்தை அது செவியுறுவதையும்

சூரிய வெளிச்சத்தில் மலையின் உச்சியில் அது நிற்பதையும்

உணர்தலின் வெற்றி!

காலமே- மாற்றத்தின் சக்தியே, காலமே – அழிக்கும் சக்தியே, காலமே- மயக்கும் சக்தியே, புது வித்தைகளுடன், ஆயிரம் திட்டங்களுடன் வந்திருக்கிறாயா?

ஒரு சிறு விதையாய், சுருண்டுகொள்ளும் அரவமாய், கடலுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பாறையாய் எனக்கு உயிர் தர வந்திருக்கிறாயா?

காலமே - கொலைகாரக் காலமே - போய்த்தொலை

என்னை விட்டு!

என் மார்பின் விளிம்புவரை ததும்பத் ததும்ப அற்புதத் தேன்கொண்டு நிரப்பும் சூரியன் சொல்கிறாள்:

ஒருநாள் எல்லா விண்மீன்களும் மடிந்துபோகும்

என்றாலும் அச்சமின்றி அவை ஒளிர்கின்றன எப்போதும்.

நான்கு திசை காற்றை நோக்கியும்

எனதிந்த மறைவான மூலையினுள்

வழிதவறிப் பறப்பதில்லை எந்தப் பறவையும்,

எந்தக் கறுப்புத் தைலான்குருவியும் கொண்டுவருவதில்லை ஏக்கத்தை,

எந்த வெண்ணிறக் கடல்காகமும் கட்டியம் கூறுவதில்லை புயலுக்கு…

கரையோரக் கூர்பாறைகளின் நிழலில்

காவலாய் நிற்கிறது என் காட்டுத்தனம்,

சிறிது சத்தம் கேட்டாலும், காலடிச் சத்தம் நெருங்கக் கேட்டாலும்

பறந்துவிடத் தயாராய்...

ஒலியற்றது, தொலைதூரமானது எனது பரவச உலகம்.

நான்கு திசைகளின் காற்றை நோக்கியும் திறந்திருக்கும் வாசல் கதவு எனக்குண்டு.

கிழக்கு நோக்கிய வாசல் கதவுண்டு என்னிடம், ஒருபோதும் வாராத காதலுக்காக,

பொழுதுக்கென்றொரு வாசல் கதவுண்டு என்னிடம், எனது துயரத்துக்காகவும் ஒன்றுண்டு,மரணத்துக்காக ஒரு வாசல் கதவுண்டு என்னிடம்

- அது எப்போதும் திறந்தே இருக்கிறது.

(ஆங்கிலம் வழி தமிழில்: ஆசை)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in