தினமும் மனதைக் கவனி - 3: சாகசங்களில் ஈடுபடத் தூண்டும் பருவம்

தினமும் மனதைக் கவனி - 3: சாகசங்களில் ஈடுபடத் தூண்டும் பருவம்
Updated on
2 min read

‘பதினாறு வயது லில்லியின் சடலம் புதர்களுக்கு நடுவிலிருந்து கண்டெடுக்கப்பட்டபோது அவள் வயிற்றில் இறந்துபோன மூன்று மாத கரு ஒன்று இருந்தது’, ‘ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ரேணுகா எனும் பதின்ம வயதுப் பெண் தவறான செயல்களில் ஈடுபட்டுக் கைதானாள்’, ‘பருக்களும் வடுக்களும் நிறைந்த தன் முகத்தைப் பார்க்கப் பிடிக்காத கவிதா (17 வயது) மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாள்’ - இது போன்ற செய்திகள் நாள்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. புத்தியில்லாமல், யோசிக்காமல் இப்படியெல்லாம் நடந்துகொண்டார்களா இவர்கள்? இல்லை, இவர்களுக்குப் புத்தி உண்டு. ஆனால், வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை. அறிவுபூர்வமாகச் சிந்திக்காமல் உணர்வுகளின் சொல்படி கேட்டதால்தான் இந்த நிலை!

வளர்ப்புமுறை சரியில்லாதபோதும்கூடப் பதின்ம வயதை அடையும் வரை பெரும்பாலும் பெற்றோர் கட்டுப்பாட்டில்தான் பெண் இருக்கிறாள். பதின்ம வயதை அடையும்போதுதான் உடல், உணர்வுரீதியான மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அதைத் தொடர்ந்து அவள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வான ‘பருவமடைதல்’ நடந்துவிடுகிறது. அது என்னவென்று முழுமையாக உணரும் முன்பே அந்த மாற்றம் நிகழ்ந்துவிடுகிறது. அப்போது அவளுக்குள் பரவசமூட்டும், குழப்பிவிடும், பயமுறுத்தும் சில சிந்தனைகளும் அனுபவங்களும் நிகழ்கின்றன. இனி அவள் பெண்; சிறுமி அல்ல. இப்போது அவளுடைய இனப்பெருக்க உறுப்புகள் முழுமையாக வளர்ச்சி பெற்றுவிட்டன. குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதியை அவள் அடைந்துவிடுகிறாள். இத்துடன் பாலுணர்வும் சுறுசுறுப்பாகிறது. அவளுக்குள் ஓர் அந்தரங்கம் உருவாகிறது. அதில் தோன்றும் எண்ணங்களை ரகசியமாக வைத்துக் கொள்வாள் அல்லது நெருங்கிய தோழியிடம் பகிர்ந்துகொள்வாள். அவற்றைப் பெற்றோரிடம் சொல்ல முடியாது.

வழிகாட்டுதல் தேவை

பதின்ம வயதின் குணங்களைக் கொஞ்சம் கவனிப்போமா? திடீரென்ற உடல் வளர்ச்சிதான் பதின்ம வயதின் முதல் குறியீடு. மார்பகங்கள் வளர ஆரம்பிக்கின்றன. இவை பருவமடையும் முன்பே தொடங்குகின்றன. அத்துடன் பெண்ணுக்கு அவசியமான பெண்ணின ஹார்மோன்களும் சுரக்க ஆரம்பிக்கின்றன. இதற்கு முன்பே தாயோ, ஆசிரியையோ, உளவியல் நிபுணரோ அந்தப் பெரிய நிகழ்வுக்குப் பெண்ணைப் பக்குவமாகத் தயார்படுத்த வேண்டும். முன்னறிவிப்பு இல்லாமல் வரும் முதல் சம்பவத்தை எப்படிக் கையாள வேண்டும், அதற்குப் பின் அவளது உடல், மன நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், எதிலெல்லாம் அவளுக்கு எச்சரிக்கை தேவை என்பது போன்ற விவரங்களை அவளைப் பயமுறுத்தாமல் பகிர்ந்துகொள்வது மிக அவசியம். கூகுள் குருவுக்குப் பக்குவம் போதாது! அநாவசியக் கிளர்ச்சியை உண்டுபண்ணும் அளவிற்கு எல்லாவற்றையும் உடைத்துச் சொல்லிவிடும்.

இந்தப் பருவத்தில் அவள் மனம் துணிச்சலாகச் சாகசங்கள் செய்ய விழையும். புகைப்பதும், குடி, போதை போன்றவற்றை ருசிபார்ப்பதும், ‘ஓர் ஆணுடன் இருந்தால் எப்படி இருக்கும்’ என்று முயற்சி செய்வதும் ஆபத்தில் முடியும் என்பதை அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்ள அவளால் முடியவில்லை. தொட்டாற்சிணுங்கியாக அவள் இருப்பதால், ஒரு கடும் சொல், ஒரு எதிர்மறை கருத்து போதும் அவளை அழவைக்க.

மகளிடம் ஏற்படும் மாற்றங்கள் அவள் தாயைக் கலவரப்படுத்தும். மகள் ‘கெட்டுப்போய்விடக் கூடாது’ என்கிற கவலையில், தாய் கண்டிக்க ஆரம்பிப்பார். மகளின் சுதந்திரம் பறிக்கப்பட, ‘நான் யார்? குழந்தையா, பெரியவளா?’ என்கிற குழப்பம் அவளுக்கு ஏற்படும். ‘பெரியவளாகிவிட்டேனே! இன்னும் ஏன் என்னைச் சுதந்திரமாக விடப் பெற்றோர் மறுக்கிறார்கள்?’ என்று வருந்துவாள். ‘அண்ணனை மட்டும் அனுமதிக்கிறார்களே’ என்று விவாதிப்பாள். இதுபோன்ற நேரத்தில் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? கட்டுப்பாடு அவசியம்தானா, அதற்கு என்ன காரணம்? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

(மனம் திறப்போம்)

கட்டுரையாளர் உளவியல் ஆற்றாளர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in