

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள சந்தைக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றது கடந்த வாரம் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று. சந்தையில் அமைச்சர் காய் வாங்கும் படத்தைப் பலரும் பகிர்ந்து கருத்துத் தெரிவித்திருந்தனர். நிதியமைச்சர் காய் வாங்கிய கடையை நடத்தும் பத்மாவின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது எனக் கேட்டால், “எல்லாம் அப்படியேதான் இருக்கிறது” எனப் புன்னகைக்கிறார். “உங்க கடைக்குத்தானே நிதியமைச்சர் வந்தாங்க? ஒரே நாளில் பேமஸாகிட்டன்னு நிறைய பேர் சொன்னாங்க” என்று சொல்லும் பத்மா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய கணவர் முருகன் விழுப்புரத்தைச் சேர்ந்தவர். இருவரும் சேர்ந்துதான் காய்கறிக் கடையை நடத்திவருகிறார்கள்.
“காரை விட்டு இறங்கி என் கடையில் வந்து நின்றபோது, இவரை எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே என யோசித்தேன். அதன் பிறகுதான் இவர் மத்திய நிதியமைச்சர் என்று தெரிந்தது. கடையில் உள்ள காய்கறிகளைப் பார்த்துவிட்டுக் கருணைக் கிழங்கையும் சுண்டைக்காயையும் வாங்கினார். காய்கறி விலையை மட்டுமே கேட்டாரே தவிர வேறு எதுவும் அவர் பேசவில்லை. நாட்டின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் இவ்வளவு பெரிய பெண்மணி, யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரெனக் காய்கறிக் கடைக்கு வந்ததைக் கண்டு எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது” என்கிறார் பத்மா.
பத்மா-முருகன் தம்பதிக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். இரண்டு மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. மூன்றாவது மகள் சுகன்யா பொறியியல் படித்துவிட்டுக் காய்கறி கடையில் பெற்றோருக்கு உதவுகிறார். கடைசி மகன் தங்கமணி பி.காம். படிக்கிறார். திரைப் பிரபலங்கள் சிலரும் தன் கடைக்கு வந்திருப்பதாகச் சொல்லும் பத்மா வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வீட்டில் வசிக்கிறார்.