

36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குஜராத்தில் நடைபெற்றுவருகிறது. அதில் தமிழக வீராங்கனைகள் அசத்திவருகின்றனர். உயரம் தாண்டு தலில் 4.20 மீட்டர் உயரம் தாண்டித் தேசிய சாதனையை முறியடித்து, ரோசி மீனா பால்ராஜ் தங்கப் பதக்கம் வென்றார். 400 மீட்டர் தொடரோட்டத்தில் திவ்யா, ஒலிம்பா ஸ்டெஃபி, சுபா, வித்யா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். அர்ச்சனா சுசீந்திரன் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் வென்றிருக்கிறார். ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சுனைனா குருவில்லாவும், வாள்வீச்சுப் போட்டியில் பவானி தேவியும் தங்கம் வென்றனர்.
வேதியியலுக்கான நோபல்: வரலாற்றில் இது எட்டாவது!
2022ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவின் 55 வயதான கரோலின் பெர்டோஸி பெற்றிருக்கிறார். வேதியியலுக்கான நோபல் பரிசை இதுவரை பெண்கள் ஏழு பேர் பெற்றிருக்கும் நிலையில், எட்டாவதாகக் கரோலினுக்கு வழங்கப்படுகிறது. அவருடன் சேர்ந்து டென்மார்க்கைச் சேர்ந்த மோர்டன் மெல்டல் அமெரிக்காவின் பேரி ஷார்ப்லெஸ் ஆகியோரும் விருதைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட புற்றுநோய் செல்களைத் துல்லியமாகப் பிரித்தறியும் முறையில் அடுத்தகட்ட பரிமாணத்தை எட்டியதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசை பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் பெற்றிருக்கிறார். 82 வயதான அவர், கடந்த 50 ஆண்டுகளாகத் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தைத் தன் எழுத்துகளில் வெளிப்படுத்திவருகிறார். இயல்பான மொழிநடையில் ஆழமான கருத்துகளைக் கொண்ட ஆனியின் எழுத்துக்கு ரசிகர்கள் ஏராளம். “பெண்களின் வலியை ஆண்களால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் நான் எழுதுகிறேன்” என்று சொல்லும் ஆனி எழுதிக்கொண்டே இருக்கிறார்.