‘பின்தொடர்ந்தால்’ சட்டம் துரத்தும்

‘பின்தொடர்ந்தால்’ சட்டம் துரத்தும்
Updated on
2 min read

அண்மையில் நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம்தான் இதை எழுதத் தூண்டியது. தமிழ்நாட்டில் இளங்கலை அறிவியல் முடித்த மாணவன் ஒருவன் மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்குச் சென்றான். அங்கே விடுதியில் வரவேற்பாளராகப் பணிபுரிந்த இத்தாலி நாட்டுப் பெண்ணைச் சந்தித்தான். அந்தப் பெண்ணின் பண்பான மொழி, அந்த மாணவனின் மனத்தை இதமாக்கியது. முகமறியா மனிதர்கள் மத்தியில் மொழி புரியாத நாட்டில் இப்படி யாராவது பேசினால் அவர் மீது பிணைப்பு ஏற்படுவது இயற்கையானது. அந்த உணர்வை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு கடந்து சென்று படிப்பில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த மாணவனோ மாற்றுப்பாதையில் சென்றான்.

அந்த இத்தாலியப் பெண்ணிடம் பேசுவது இதமாகவும் இணக்கமாகவும் இருந்ததால் மீண்டும் பேச ஆசைப்பட்டு அவரது அலைபேசி எண்ணைக் கேட்டான். அந்தப் பெண் தரவில்லை. ஆனாலும் அந்தப் பெண் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பின்தொடர்ந்து சென்று அவரது முகவரியைக் கேட்டான். அந்தப் பெண்ணும் அவனைப் புண்படும் வகையில் பேசாமல் நாகரிகமாக மறுத்துவிட்டார். பின்னர் அந்தப் பெண்ணுக்கு ஃபேஸ்புக்கில் நட்பு வேண்டுகோள் விடுக்க, அவர் அதைச் சட்டை செய்யவில்லை. இவற்றைக் கவனித்து வந்த அந்தப் பெண்ணின் தோழி இதைப் பற்றிக் காவல்துறையில் புகார் அளிக்கச் சொல்லியும் அவர் அதைச் செய்யவில்லை. ஆனால், புகார் அளித்துவிடுவேன் என்கிற தகவலை அந்த மாணவனிடம் தெரிவித்தார். அது ஒரு மறைமுக எச்சரிக்கை என்பது மாணவனுக்குப் புரியவில்லை. தனக்கு அவன் மேல் ஈடுபாடு ஏதுமில்லை என்றும் எந்தத் தனிப்பட்ட விஷயத்தையும் அவனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமில்லை என்றும் தெள்ளத் தெளிவாகச் சொல்லியும்விட்டார்.

நேரிலும் இணையவழியிலும் பெண்களைப் பின் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஆண்கள் ஈடுபட்டால் பெண்கள் தயங்காமல் காவல்துறையில் புகார் அளிக்கலாம். 100-க்கு அழைத்துப் புகார் சொல்லலாம். தங்களது செல்போனில் KAVALAN SOS, KAAVAL UTHAVI ஆகிய இரண்டு செயலிகளையும் தரவிறக்கம் செய்துகொண்டு ஆபத்து நேரத்தில் அவற்றைப் பயன்படுத்தலாம். இணையவழியிலான தொந்தரவுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கலாம் அல்லது 1930 என்கிற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொண்டும் புகார் அளிக்கலாம். இவற்றில் புகார் அளிக்கும் பெண்களின் ரகசியம் காக்கப்படும் என்பதால் எவ்விதத் தயக்கமும் தேவையில்லை.

நிராகரிப்பை ஏற்காத ஆண் மனம்

இவ்வளவுக்குப் பிறகும் அவர் மனத்தில் எப்படியாவது இடம்பிடித்துவிட வேண்டும் என்கிற நப்பாசையில் வரையறுக்கப்பட்ட எல்லையை மதிக்காமல் செயல்பட்டான். காதலர் தினத்தன்று சாக்லேட் கொடுக்க முயல, அந்தப் பெண் அதை நிராகரித்து விட்டார். அந்த மாணவன் எந்தப் பெண்ணையும் எளிதாகக் கவரக்கூடியத் தோற்றம் உள்ளவன். இந்தியாவில் கல்லூரியில் படித்தபோது பல மாணவிகள் தன்னிடம் பேச முற்பட்டபோதெல்லாம் அவர்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிய அவனால், ஒரு பெண் தன்னை நிராகரிப்பதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அவரைப் பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்தபடி இருந்தான். அது மட்டுமல்லாமல் பாலியல் சாயல் உள்ள சில கேள்விகளைத் தன்னுடைய ஆராய்ச்சி தொடர்பான கேள்விகள் என்கிற ரீதியில் அந்தப் பெண்ணிடம் கேட்டான். அவற்றுக்கு அவர் பதில் சொல்லவில்லை. இன்ஸ்டா கிராமில் வேண்டுகோள் விடுத்தான். அவரோ தன்னுடைய பதிவுகளை இவன் பார்க்க முடியாதபடி அதைத் தனிக்கணக்காக மாற்றிவிட்டார். உடனடியாக பெண் பெயரில் போலியாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு ஆரம்பித்து அவன் வேண்டுகோள் விடுக்க, பெண் என எண்ணி அவரும் ஏற்றுக் கொண்டார். பொய்க்கணக்கில் அவன் இன்ஸ்டாகிராமில் நண்பரானது தெரிந்து கோபத்தின் உச்சகட்டத்திற்குச் சென்றார். நடந்த சம்பவங்களை எல்லாம் ஆதாரத்துடன் காவல் துறையில் புகார்கொடுக்கக் காவல் துறை வழக்குப் பதிவுசெய்து மாணவனைக் கைதுசெய்தது. அந்தப் பெண் வேலை செய்யும் பல்கலைக்கழகத்துக்கு இந்த மாணவன் செல்லக் கூடாது எனக் கட்டுப்பாட்டு ஆணை ஒன்றை நீதிமன்றம் இட்டது. ஆகவே, கல்லூரிக்குச் சென்று படிப்பைத் தொடர இயலாத நிலை. வழக்கைப் பொறுத்தவரை ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் இந்த மாணவன் தண்டணை பெறுவது உறுதி எனத் தெரிகிறது.

ஆணுக்கு ஆலோசனை தேவை

மேற்சொன்ன சம்பவங்களைப் பார்த்தால் இது ஒரு தெளிவான ‘பின்தொடர்தல்’ (Stalking) வழக்கு. மேற்சொன்ன விஷயங் களை ஒரு மாணவன் செய்வது சகஜம் அது சாதாரணமானது என்றும் பலர் எண்ண வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு எண்ணுவதும் செய்வதும் தவறு என்பதை மாணவர்கள் தெளிவாக உணர வேண்டிய நேரம் இது. ஒரு பெண்ணை நேரடியாகவோ மறை முகமாகவோ அவர்களுடைய விருப்பம் இல்லாமல் பின்தொடர்வது சட்டத்துக்கு எதிரானது. இந்தியத் திரைப்படங்களில் கதாநாயகர்கள் இதுபோல் பெண்ணைத் தொடர்ந்து செல்வது போலவும் ஒரு கட்டத்தில் நாயகி மனம் மாறி ஒப்புதல் சொல்வது போலவும் காலங்காலமாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. இவை பெரும் பாலான இளைஞர்கள் மனத்தில் அந்த அணுகுமுறை சரி என்கிற தவறான எண்ணத்தை உருவாக்குகின்றன. அவர்களது செயல்களை நியாயப் படுத்துவதும் இதுபோல் தொடர்ந்து ஒரு பெண்ணிடம் முயன்றால் ஒரு கட்டத்தில் எந்தப் பெண்ணும் மனம் இரங்கிவிடுவார் என்கிற தவறான எண்ணமும் வளரக் காரணமாகிறது.

வெளிநாட்டுக்குச் செல்லும் மாணவர் களுக்கு மட்டுமல்லாமல் இங்கிருக்கும் மாணவர்களுக்கும் பெண்களை அணுகும் முறை குறித்து ஆலோசனை வகுப்புகள் நடத்துவது நல்லது. பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் ஐ.டி., நிறுவனங்களும்கூட இதுபோன்ற வகுப்புகளை நடத்தி வழிகாட்டலாம். இந்த வழக்கு பெண்களின் உணர்வுகளை ஆண்கள் மதிப்பதற்கான விழிப்புணர்வையும் பயிற்சியையும் வலியுறுத்துவதோடு பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் களைவதில் ஆண்களுக்கு அதிகமான அறிவுரைகள் தேவைப்படு கின்றன என்பதையும் உறுதிப்படுத்துகிறது. பெண்களுக்குக் குறிப்பாகக் கல்லூரி மாணவி களுக்குத் தங்களுடன் பழகும் ஆண்களுக்கு எப்படி வரையறைகளை வகுப்பது என்பதும் அதை மீறும் பட்சத்தில் தயங்காமல் காவல்துறையை அணுக வேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

கட்டுரையாளர், கோவை மாநகரக் காவல் ஆணையர்

v.balky.ips@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in