என் பாதையில்: சமையலறை மருத்துவமனைக்கான வழியா?

என் பாதையில்: சமையலறை மருத்துவமனைக்கான வழியா?
Updated on
2 min read

தொடர்ச்சியான சமையலறை வேலைகள் பெண்களை மோசமாகப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் சொன்னதாக ஒரு கட்டுரையில் படித்தேன். ஒரு பெண்ணைச் சமையலறை இந்த அளவுக்குத் தாக்குமா? தாக்கும். குறிதவறாமல் தாக்கும். எழுந்திரிக்கவே முடியாத அளவுக்குத் தாக்கும். அப்படித்தான் ஆயிற்று எனக்கு.

காலையில் எழுந்ததுமே சமையலறை முகத்தில்தான் முழிக்க வேண்டும். உள்ளே நுழைந்ததுமே வேலைகள் வரிசைகட்டி நிற்கும். புதைகுழிக்குள் விழுந்ததுபோல் இருக்கும். இந்த இடத்தில் பலருக்கு ஏன் பெண்களுக்கேகூட இந்தச் சந்தேகம் வரலாம். கணவனுக்கும் குழந்தைகளுக்கும் ஆக்கிப்போடுவதில் சந்தோஷம்தானே கிடைக்கும் என்பார்கள். ஆனால் அது மட்டுமே அவளுக்கு நிறைவைத் தராது என்பதுதான் நாம் சாவகாசமாக மறந்துவிட்ட உண்மை. ஒரு பெண்ணுக்கு அவளுக் கென்று தனிப்பட்ட ரசனைகள் உண்டு. ஆசைகள் - பெரும்பாலும் பிறந்தவீட்டில் நிறைவேறியவை - உண்டு. விருப்பங்கள் உண்டு. திருமணத்துக்குப் பிறகு சமையலறையே கதி எனக் கிடக்க வேண்டிய சூழல். அவளுடைய சின்ன சின்ன ஆசைகளைக் கூட நிறைவேற்ற முடியாத சூழல். அவளது சின்ன சின்ன ஆசைகள் சிறைபிடிக்கப்பட்டு, சின்னாபின்னமாகின்றன.

சமையல் வேலைதான் வாழ்க்கைத்துணை என்கிறபோது எந்தப் பெண்ணுமே சோர்ந்துதான் போகிறாள். தனிமையுணர்வு மலைப்பாம்பாக அவளை விழுங்குகிறது. வெறுமை உடும்பாகப் பிடித்துக்கொள்கிறது. பதிலற்ற கேள்விகள் என்னை உலுக்கின. நான் படுக்கையில் விழுந்தேன்.

இப்படித்தான் ஆரம்பித்தது அந்த வேதனை. முதலில் கால்வலி வந்தது. பலமுறை இது பற்றிக் கணவரிடம் சொன்னபோது கண்டுகொள்ளவேயில்லை. எனக்கும் தனியாக மருத்துவமனைக்குப் போகத் தோன்றவில்லை. நின்றுகொண்டே சமையலைக் கவனித்த நான் பிறகு சேர் போட்டு உட்கார்ந்து சமைத்தேன். முடி பயங்கரமாகக் கொட்டியது. உடல் மெலிந்தது. புற்றுநோயோ என்றுகூடப் பயமாக இருந்தது. கால் விரல்கள் மரத்துப் போயின. நாட்கள் செல்லச் செல்ல முழங்காலுக்குக் கீழே உணர்வற்று இரும்பாகக் கனக்க ஆரம்பித்தன. நடக்கவே முடியாத சூழல் உருவானபின்தான் என் கணவர் விழித்துக் கொண்டார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல என்னை காரில் ஏற்ற கணவர், மகன், மகள் படாதபாடு பட்டபோதுதான் விஷயம் விபரீதமாகிவிட்டதை நானே உணர்ந்து பெருத்த அதிர்ச்சிக்குள்ளானேன்.

மருத்துவமனை, பரிசோதனைகள், டிப்ரஷன், மனநல மருத்துவர், பிசியோதெரபிஸ்ட், வேறொரு டாக்டர், B12, சோடியம், ‘சூடோ பெராலிசிஸ்’ (pseudo paralysis)... இப்படி எவ்வளவையோ கடக்க வேண்டியிருந்தது. கவலை ஒரு மனிதனை இந்த அளவுக்கு அலை கழிக்குமா என்ன? இந்தக் களேபரத்தில் என் மகளின் திருமணமும் நடந்ததுதான் பெரிய ஹைலைட்டே. நிச்சயத்தன்று நிற்கக்கூட முடியவில்லை. நிச்சயம் இப்படியென்றால் மூன்று மாதங்களுக்குப் பின் நடந்த திருமணத்தில் வீல்சேரில் இருந்தேன். வீல்சேரைத் தள்ளும் வேலையை என் கணவர், மகன், சின்னக்கா மருமகன் எனக் கர்மசிரத்தையாகச் செய்தார்கள். கண்களில் ஆனந்தக் கண்ணீர் தளும்பியது எனக்கு.

கணவனும் மகனும் கவனித்துக்கொள்ள நிற்கவே முடியாமல் இருந்த நான் கையைப் பிடித்து நடக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளேன். என்னுடைய ஆதங்கமெல்லாம் ஒரு பெண் உடம்புக்கு முடியவில்லை என்று சொன்னால் அது அலட்சியப்படுத்தப்படுகிறது. நிலைமை முற்றியபின் நிலைகுலைந்து போகிறார்கள் கணவன்மார். அப்புறம் சமையலறைதான் பெண்ணின் ஒரே உலகம் எனப் பிழைகள் நிறைந்த இலக்கணத்தைப் போதித்து வைத்திருக்கிறது நமது கலாச்சாரம். அந்த மாண்புமிகு பண்பாட்டில் அவளது குட்டி குட்டி ஆசைகள் எல்லாம் அநாதையாக்கப்படும்போது சமையலறையே மருத்துவமனைக்குச் செல்லும் வழியாகிறது. தேவையா இந்த வழியும் வலியும்?

- ஜே. லூர்து, மதுரை.

நீங்களும் சொல்லுங்களேன்...
தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை பிறருக்குப் பாடமாக அமையும் அனுபவம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in
Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in