கிராமத்து அத்தியாயம் - 2: விதைக் கேப்பைக் களி, விலாங்கு மீன் குழம்பு

கிராமத்து அத்தியாயம் - 2: விதைக் கேப்பைக் களி, விலாங்கு மீன் குழம்பு
Updated on
2 min read

விருமாண்டிக்குக் குளத்தை ஒட்டிய வயல் இருந்தது. முதல் நாள் பெய்த மழைக்குப் பாதிக் குளம் நிறைய தண்ணீர் வந்துவிட்டது. விருமாண்டிக்கு மட்டுமல்ல ஊர்க்காரர்களும், நிலம் குளிர மழை பெய்ததில் உற்சாகமாக இருந்தார்கள். ஆள் ஆளுக்கு மண்வெட்டியும் கடப்பாரையுமாக நிலத்தைச் சீர்திருத்தம் பண்ண புறப்பட்டுவிட்டார்கள். போன வருசம் சரியாக மழை பெய்யாததால் எல்லாருடைய வீட்டிலும் விதைக்கு மட்டுமே தானியம் இருந்தது.

எப்போதும் இந்த விவசாயிகள் நிலத்தில் ‘பொலி’ கண்ட உடனே எந்தத் தானியமாக இருந்தாலும் சரி முதல் வேலையாக விதைக்கு எடுத்து ஈரப்பதமில்லாமல் வெயிலில் காயப்போட்டு பத்திரமாக அள்ளி அடுக்குப் பானைகளில் அடுத்த வருச விதைக்காகப் பத்திரப்படுத்திவிடுவார்கள். ஒரு வருசம் தானியம் விளையாமல் கஷ்டப்பட்டாலும் அந்த விதைபொருளை எடுக்க மாட்டார்கள். அதைவிடக் கடனை உடனை வாங்கி அரை வயிறும் குறை வயிறுமாகக் கஞ்சி குடிப்பார்களே தவிர விதைப் பண்டத்தை மட்டும் எடுக்கவே மாட்டார்கள்.

அப்படித்தான் விருமாண்டி விதைக்காக நாலுபடி கேப்பை (கேழ்வரகு) வைத்திருந்தான். குளத்துக்குத் தண்ணீர் வந்துவிட்டது என்று தெரிந்த உடனே அவன் பொண்டாட்டி தனத்திடம் ஒரு போனி புளிச்சதண்ணியை வாங்கிக் குடித்துவிட்டு, “நானு சுத்துக்கால் மண்ணெடுத்துக்கிட்டு இருக்கேன். நீ வேலையெல்லாம் முடிச்சிட்டு பெறவு எனக்குக் கஞ்சி கொண்டுகிட்டுவா” என்று சொல்லிவிட்டு வம்பட்டியோடு பிஞ்சைக்கு வந்தான். (சுத்துக்கால் மண்ணெடுப்பது என்பது வரப்புகளையெல்லாம் ஒழுங்கு படுத்தி மேடு பள்ளங்களைச் சீராக்குவது).

விருமாண்டி வரப்பு வேலைகளைக் கவனமாகப் பார்த்துக்கொண்டு இருக்கும் போது எப்படியோ மழை வெள்ளத்திற்குத் தப்பி வந்த ஒரு விலாங்கு மீன் இவன் வயலில் துள்ளி விழுந்துவிட்டது. விடுவானா விருமாண்டி? ஒரே போடாகப் போட்டு துண்டில் முடிந்துகொண்டு வீட்டுக்கு வந்தான். அவன் பொண்டாட்டி தனத்துக்கு ஒரே ஆச்சரியம்.

“என்ன பிஞ்சைக்கு போன மனுசன் போன மாயத்தில் வீட்டுக்கு வந்துட்டீரு மேலுக்குக் கண்டு சேட்டமில்லையா?” என்று கேட்டவளை விருமாண்டி வீட்டுக்குள் ரகசியமாய் கூட்டிப்போய் துண்டிலில் இருந்த மீனைக் காட்டினான். தனம் ஆச்சரியத்தால் வாயைப் பிளந்தாள். அவள் கண்கள் சிமிட்டக்கூட மறந்துபோனது.

“என்ன எப்படி புடீச்சீரு இதை?” என்று கேட்டாள். அவனும், “நானு எங்க இதப்புடிச்சேன். அதுவா நம்ம பிஞ்சையில வந்து விழுந்துச்சு. இந்தா சீக்கிரம் இந்த மீனக் குழம்புவச்சுச் சோறக் காய்ச்சு. நானு இன்னும் ஒரு வரப்புதேன் இருக்கு வெட்டிட்டு வந்துருதேன்”னு சொன்னான். உடனே தனம், “வீட்டுல ‘மாணிப்படி’ தானியம்கூட இல்லயே... நானு எத வச்சி சோறு காய்ச்சுவேன்?” என்றாள். விருமாண்டிக்கு எப்படியும் மீன் குழம்பைத் தின்னே ஆவணுமின்னு ஆசை வந்துருச்சி. உடனே அவன் வீட்டுல விதக் கேப்ப இருக்கில்ல நாலுபடி. அதத் திரிச்சி களியக் கிண்டிரு”ன்னு சொல்லிட்டுப் போயிட்டான். விதக் கேப்பய எடுக்கதுல தனத்துக்கும் வருத் தந்தேன். ஆனாலும், அவளுக்கும் ஆசை.

நாலுபடி கேப்பய எடுத்துத் திரிச்சி களி கிண்டி மீன் கொழம்பு வச்சிட்டு புருசனுக்காகக் காத்திருக்கா. இந்த விருமாண்டிக்குக் களியையும் மீன் குழம்பையும் நினைச்சு ஆதாளி தாங்க முடியல. அதனால ‘வேம்படி வீடு, விதக் கேப்பக் களி, விலாங்கு மீனு கொழம்பு, விருமாண்டி இன்னைக்கு உனக்கு வேட்டதாண்டா’ன்னு பாடிக்கிட்டே வரப்ப வெட்டிருக்கான். அந்த வழியா வந்தவன் ஒருத்தன் இவன் சொன்னதக் கேட்டுக்கிட்டு தனத்துக்கிட்ட வந்து, “எம்மா விதக் கேப்பக் களியும் விலாங்கு மீனு குழம்பும் வச்சிருக்கீக ளாமில்ல. உங்க வீட்டுக்காரரு வாங்கிட்டு வரச் சொன்னாரு”ன்னு சொல்லியிருக்கான். தனமும், “அப்படிச் சொல்லியிருக்க மாட்டாரே”ன்னு சொல்ல, “பிறவு எப்படிம்மா எனக்கு உங்க வீட்டுல விதக் கேப்ப களியும் மீன் குழம்பும் இருக்கது தெரியும்? உன் புருசந்தேன் எனக்கு வவுத்துப்பசி கண்ணப்புடுங்குது. நீ போயி வாங்கிட்டுவான்னு சொல்லி அனுப்புனாரு”ன்னு சொல்ல, தனமும் அப்படியும் இருக்குமோ இல்லாட்டி இவன் எதுக்கு இம்புட்டு விவரமா சொல்லப்போறான் என்று களி, குழம்பு எல்லாவற்றையும் ஊத்திக் கொடுக்க, வந்தவன் அதை வாங்கிக் கொண்டுபோய் தானே தின்றுவிட்டு பெரிய ஏப்பமும் விட்டுவிட்டுப் புறப்பட்டுவிட்டான்.

- கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: arunskr@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in