

டிசம்பருக்காகக் காத்திருக்கிறேன்
ஜெயா தொலைக்காட்சியின் தேன் கிண்ணம் நிகழ்ச்சித் தொகுப்பாளரான கிருத்திகா சூரஜித், டிசம்பர், ஜனவரி சீசன் மேடை நடன நிகழ்ச்சிகளுக்குத் தயாராகிவருகிறார்.
‘‘நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஜொலித்தாலும் என்னால் நடனத்தைக் கனவில்கூட மறக்க முடியாது. ஜெயா தொலைக்காட்சியில் ஆண்டு முழுவதும் விதவிதமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாலும் டிசம்பர், ஜனவரி மாதங்களுக்காகக் காத்திருப்பேன். இப்பவே சாஸ்திரிய நடன நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையை ஆரம்பித்துவிட்டேன். எனக்கு இந்த அளவுக்கு நடனம், இசை உள்ளிட்ட விஷயங்களில் காதல் வரக் காரணமே, பழைய பாடல்களின் தொகுப்பான ‘தேன் கிண்ணம்’ போன்ற நிகழ்ச்சிகள்தான்’’ என்கிறார் கிருத்திகா சூரஜித்.
பெற்றோரோடு நிகழ்ச்சி பார்த்ததில்லை!
சன் மியூசிக், சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவரும் மணிமேகலை, சமீபகாலமாக சன் நியூஸ் சேனலிலும் முகம் காட்டிவருகிறார்.
“இங்கேயும் சினிமா நட்சத்திரங்களை நேர்காணல் செய்யும் வேலைதான். பொழுதுபோக்கு சேனல்களில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது கிடைக்கும் பாராட்டு ஒரு விதம். இப்போது நியூஸ் சேனல் வழியே கிடைக்கும் பாராட்டு ரொம்பவே உத்வேகம் அளிக்கிறது. கல்லூரியில் படிக்கும்போதே தொகுப்பாளராக வந்துவிட்டேன். சின்னத்திரைக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன. நிகழ்ச்சியில் பயன்படுத்தும் ஆடைகள், ஆபரணங்கள் அனைத்தும் என் கைவண்ணம்தான். நிறையப் பேர் இதுக்காக என்னைப் பாராட்டும்போது சந்தோஷமா இருக்கு. இவ்வளவு நாட்கள் சின்னத்திரையில் வட்டமடித்து வந்தாலும் வீட்டில் அப்பா, அம்மாவோடு அமர்ந்து என்னுடைய ஒரு நிகழ்ச்சியைக்கூடப் பார்த்ததில்லை. அப்படியே எதிர்பாராத நேரத்தில் டிவியில ப்ரொமோ வந்தாலும் சத்தமே இல்லாமல் இடத்தைக் காலி பண்ணிடுவேன். ஏன் இப்படிப் பண்ணுகிறேன் என்று எனக்கே காரணம் தெரியலை!’’ என்று புன்னகைக்கிறார் மணிமேகலை.