

‘ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று பெருமையாகக் கூறப்படுகிறது. இந்த வாக்கியத்தை உருவாக்கியவர் ஓர் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் ஆதிகாலம் தொட்டு நாகரிக உருவாக்கம், பொருள்சார் பண்பாடு, போராட்டங்கள், கலை, அறிவியல், அரசியல் போன்ற துறைகளில் பெண்களின் பங்களிப்போ அவர்களது பெயர்களோ பெரும்பாலும் நினைவுகூரப்படுவதேயில்லை.
இந்திய வரலாற்றில் பெண்களின் பங்களிப்பை நினைவுகூரும் வண்ணம், கூகுளின் கலை மற்றும் கலாச்சார இணையதளம், பெண்ணியப் பதிப்பகமான ஜூபான் புக்ஸ், அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியன் ஸ்டடீஸ், பெங்களூரு மியூசியம் ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி, கொல்கத்தா அருங்காட்சியகம், ரெக்தா அறக்கட்டளை உள்ளிட்ட 26 அமைப்புகளுடன் இணைந்து, சொல்லப்படாத இந்தியப் பெண் ஆளுமைகளின் கதைகளை அழகிய வண்ணச் சித்திரங்களுடன் கூறும் முயற்சியை எடுத்துள்ளது. அவர்களைப் பற்றிய வீடியோக்களும் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.
ஆளுமை ஆவணம்
சூஃபி துறவிகளின் வரலாற்றை எழுதிய ஜஹானாரா (ஷாஜகானின் மகள்), முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் பூலே, பெண்ணிய எழுத்தாளர் தாராபாய் ஷிண்டே என இதுவரை 1800-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வீடியோக்கள் இத்தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
“வரலாற்றில் இந்தியப் பெண்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அங்கீகரிப்பதற்கான முயற்சிதான் இந்தத் திட்டம். நம் கலாச்சார வளத்தை இளம் தலைமுறையினர் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இந்தத் தளத்தில் கிடைக்கச் செய்யும் டிஜிட்டல் முயற்சி இது” என்கிறார் கூகுள் கல்ச்சுரல் இன்ஸ்டிட்யூட்டின் ஆபரேஷன்ஸ் ஹெட் லூயிசெல்லா மஸ்ஸா.
தன்னம்பிக்கை தளம்
இந்தியாவின் பெண் விஞ்ஞானிகள் பற்றிய புகைப்படங்களுடனான அறிமுகம், வாசிப்பவர் யாருக்கும் பெரிய வியப்பையும், இந்த இணையத்தளத்திற்குப் பின்னால் இருக்கும் உழைப்பையும் சொல்லக்கூடியது. ஆனந்திபாய் ஜோஷி முதல் சாருசிதா சக்கரவர்த்திவரை இரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்தியப் பெண் விஞ்ஞானிகளைப் பற்றி அறியும்போது, எத்தனையோ பின்னடைவுகளுக்குப் பிறகும் சாதனைகள் செய்யும் இந்தியப் பெண்களின் பயணச் சித்திரம் துலங்கும்.
1945-ல் பிஎச்டி முடித்து, விஞ்ஞானி சி.வி.ராமனோடு பணியாற்றி கதிரியக்கம், ஓசோன் படிவம் மற்றும் வளிமண்டல மின்னூட்டத் துறைகளில் பங்களிப்பு செய்த சென்னையைச் சேர்ந்த அன்னா மணியும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறார். ஏதாவது ஒரு சூழலில் மனம் சோர்ந்திருக்கும் வேளையில், தன்னம்பிக்கை குறைந் திருக்கும் நிலையில் ஒவ்வொரு பெண்ணும் ஆற்றலையும் உற்சாகத்தையும் பெறுவதற்கான இணையதளம் இது.
- அன்னா மணி
இணையதளத்தைப் பார்க்க: >http://bit.ly/2g7HLpw