தினமும் மனதைக் கவனி - 2: உணர்வுகள் பலமா, பலவீனமா?

தினமும் மனதைக் கவனி - 2: உணர்வுகள் பலமா, பலவீனமா?
Updated on
2 min read

பெண்களின் பலம் எது, பலவீனம் எது? பலமும் பலவீனமும் ஒன்றேதான். உணர்வுகள்... துல்லியமான உணர்வுகளைக்கூடப் புரிந்துகொள்வதில் அவர்கள் படு ஸ்மார்ட். பிறருடைய முகபாவங்களில் ஏற்படும் மாற்றத்தி லிருந்தே அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறமை உடையவள் பெண். தன்னுடைய மென்மையான உணர்வுகளை அறிந்துகொள்வதா கடினம் அவளுக்கு?

மகள் ஷிவானி பள்ளியிலிருந்து வந்ததிலிருந்து ஏதுமே பேசவில்லை. முகம் வாடி இருக்கிறது என்பதைக் கவனித்த நளினி, “கண்ணா, ஏன் டல்லா இருக்கே? பள்ளியில் ஏதாவது பிரச்சினையா? உடம்பு சரியில்லையா?” என்று கேட்க அவள், “சும்மா தொணதொணக்காமல் இருங்களேன்” என்று எரிந்துவிழுந்தாள். வீடு திரும்பிய கணவரிடம் நளினி கவலையோடு பேச, “நீயாக எதையாவது கற்பனை செய்துகிட்டுப் பேசாதே” என்று நளினியின் வாயை அடைத்தார். இறுதியில் பிரச்சினை வெளியே வந்தபோது நளினியின் கணிப்பு சரிதான் என்று அவருக்குப் புரிந்தது. உணர்வுகளைக் கண்டுகொள்ளும் இந்தத் திறமையால் பெண்ணால் துன்பத்தில் இருப்பவரையும் போராடுபவரையும் ஆதரவற்றோரையும் அரவணைக்க முடிகிறது.

பல ஆண்களுக்கு உணர்வுகள் புரிவதில்லை. அல்லது ‘இதெல்லாம் ஒரு பொருட்டா?’ என்கிற அலட்சியப் போக்கோ என்னவோ. இங்கே நான் பெரும் பான்மை யினரைக் கணித்து விமர்சிக்கிறேன். இந்த வட்டத்தில் வராத ஆண்களும் பெண்களும் உண்டு.

பலம் எப்படிப் பலவீனமாகும்?

உணர்வுகள் மேலிடும்போது அவளது முகமே அவளைக் காட்டிக் கொடுத்துவிடுமே. ஒரு சுடுசொல் கேட்டவுடன் கண்களில் தயாராகக் காத்தி ருக்கும் கண்ணீர் அருவியாய் கொட்ட ஆரம்பித்துவிடுமே. ‘என் கண்ணீரை அலட்சியம் செய்பவர் முன் நான் ஏன் அழுதேன்?’ என்று பிறகு வெட்கிப் போவாள், வருத்தப்படுவாள். இருந்தாலும் மறுமுறையும் இதே கதைதானே. அறிமுகம் இல்லாதவர் முன்கூட சில சமயம் அழுது தனது பலவீனத்தை வெளிப்படுத்திக்கொள்வாளே! உணர்வு வயப்படுவதாலேயே பெண் தன்னைப் பலமற்றவளாகக் காட்டிக் கொள்கிறாள். உணர்வுகளின் மேலீட்டால் பெண் சில சமயம் தவறான முடிவுகளை எடுத்துவிடுகிறாள். ஒவ்வாத உறவைத் தொடருவதோ, தவறான செயல்களில் ஈடுபடுவதோ, அதனால் பல சிக்கல்களில் மாட்டிக்கொள்வதோ உணர்வுகளின் உந்துதலால்தானே!

சில பெண்கள் கடந்த காலத்தில் தான் புண்பட்டுப்போன சில சம்பவங்களை மறக்க முடியாமல், நினைவு வங்கியில் சுமந்துகொண்டே போவார்கள். அந்தச் சுமையோடு பயணிக்கையில் வாழ்க்கை பளுவாகிறது. ‘லெஸ் லக்கேஜ்; மோர் கம்ஃபர்ட்’ என்பதைப் பின்பற்றினால் அவர்களது பயணம் சுகமாக இருக்காதா? இன்னுமொரு தேவையில்லாத வழக்கம் பெண்களுக்கு. மனதைக் கலக்கப்படுத்தும் ஒரு நிகழ்வை உடனே யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும். அடுத்து எதிர்கொள்வது யாராயிருந்தாலும் அவர்களிடம் கொட்டிவிடுவார்கள். இது வீண் வினையைக் கிளப்பும் நடத்தை.

உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டுப் பெண் தன்னை வருத்திக்கொள்கிறாள். எப்படி இதையெல்லாம் தாண்டி வருவது? கடிகாரத்தின் பெண்டுலம் மாதிரி உணர்வுகளின் வீச்சு இரண்டு விளிம்புகள் வரை வீசாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மகிழ்ச்சி என்றால் ஒரேயடியாகக் குதிப்பது, கோபம் வந்தால் வன்முறையைக் கையாள்வது, வருத்தம் என்றால் உயிரை மாய்த்துக்கொள்ள நினைப்பது ஆகியவை உணர்வுகளின் தீவிர வெளிப்பாடு. இவற்றைத் தவிர்த்து, சமநிலையில் வெளிப்படுத்த பழகவேண்டும். ஒரு சிறு பயிற்சி அதற்கு உதவும். உணர்வின் தீவிர நிலையில் இருக்கையில் மனதை அமைதிப்படுத்த மூச்சுப் பயிற்சி உதவும். தீவிரம் அடங்கியபின் தெளிவான சிந்தனை எழும். உணர்வுகளை வென்றுவிட்டால் பெண் எதையும் எதிர்கொள்வாள்.

(மனம் திறப்போம்)

கட்டுரையாளர் உளவியல் ஆற்றாளர்

தொடர்புக்கு: ashabrinda@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in