பேசு பெண்ணே - 15: குத்தமா சொல்லாதீங்க, குணமா சொல்லுங்க

பேசு பெண்ணே - 15: குத்தமா சொல்லாதீங்க, குணமா சொல்லுங்க
Updated on
2 min read

தாயைத் தெய்வமாய் வணங்கும் நமது பண்பாட்டில் ஆண்கள் தங்களுக்கு இணையாக வரும் பெண்ணும் தாய் போலவே தன்னைக் காக்க வந்தவள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ‘ஆம்பளைன்னா அப்படித்தான் இருப்பான். பக்குவமா சொல்லி நீதான் உன் வழிக்குக் கொண்டு வரணும்’ என்று பெண்களிடம் அநியாயமான எதிர்பார்ப்பு திணிக்கப்படுகிறது. ஆண் மனம் கோணாதபடி அவனது குறை களைச் சொல்லித் திருத்த வேண்டும் என்று பெண்களுக்கென்று மட்டும் சிறப்புச் சட்டம் ஏதும் இல்லையே.

அலுவலக வாட்ஸ் அப் குழுவில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் ஆபாசத் துணுக்கு ஒன்று பகிரப் பட்டது. கருத்து முரண்களையும் மறந்து பெண்கள் அனைவரும் ஒற்றுமையாக வெகுண்டெழுந்தனர். துணுக்கை அனுப்பிய நபர் தன் செய்கைக்கு விளக்கமளித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையாகப் பெண்களிடையே முடிவு செய்யப்பட்டது. இதை ஆண்கள் உடனடியாக மறுத்தார்கள். வேறு குழுமத்துக்கு அனுப்ப நினைத்தது மாறிவிட்டதாகவும், அவர் தன் செயலுக்கு மிகவும் வருந்துவதாகவும் உப்புசப்பற்ற காரணங்களைப் பிற ஆண்களே அடுக்கினார்கள். அவர்கள் பேசப் பேசப் பெண்கள் அணியிலிருந்து பலரும் தங்கள் நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டதும் மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும் என்கிற எங்கள் தீர்மானம் வலுவிழந்ததும் அதிர்ச்சியாகவே இருந்தது.

இவற்றுக்குச் சிகரம் வைத்தாற்போல் நடந்த நிகழ்வைக் கேள்வியுற்ற பெண் உயரதிகாரி ஒருவர், “ஆண்கள் அப்படித்தான் இருப்பார்கள். நாம்தான் நட்புடன் சொல்லித் திருத்த வேண்டும், போர்க்கொடி தூக்கக் கூடாது” என்று அக்கறையுடன் அறிவுரை கூறினார். ஆணின் செயல்பாடுகளுக்குச் சமூகமே குடும்பம் போன்றதொரு அரணை அமைத்துத் தருவதையும் இதற்கு நேர்மாறாகப் பெண்ணுக்குச் சமூகம் விதிக்கும் அத்தனை விதிகளுக்கும் குடும்பம் சட்டாம்பிள்ளையாக இருப்பதையும் புரிந்துகொள்ள இந்த நிகழ்வு உதவியது.

பொறுத்துப்போகும் நல்ல பெண்கள்?

‘நான் எந்தத் தவறு செய்துவிட்டு வந்தாலும், சரிங்க பார்த்துக்கலாம்னு பக்குவமா எடுத்துச் சொல்ற பொண்ணுதான் எனக்கு வேணும்’ என்று சொன்ன நண்பனை நானறிவேன். ‘நீ செய்வது தவறு’ என்று மண்டையிலடித்த மாதிரி சொல்வதைப் பொறுக்க முடியாமல் துடிதுடித்துப் போகும் அளவுக்கு நம் ஆண்கள் மெல்லியலாளர்கள்.

தவறுகளை அன்பாகச் சொல்லித் திருத்தும் பெண்கள், மௌனமாகக் கொடுமைகளைத் தாங்கிக் குற்றவுணர்வைத் தூண்டும் பெண்கள், பொறுமையையே மகுடமாக அணிந்த பெண்கள்.. ஆண்களைப் பொறுத்த வரை இவர்கள் மட்டுமே போற்றக்கூடிய பெண்கள் – அதுவும் கதைகளிலும் சினிமாக்களிலும் மட்டுமே. கணவன் அடித்தால் திருப்பி அடிக்கும் பெண்ணும், எதிராளி யாராக இருந்தாலும் மனதில் பட்டதை உரக்கப் பேசும் பெண்ணும் கெட்டவர்களாகவே சித்தரிக்கப் படுகிறார்கள்.

குற்றவுணர்வா, புரிதலா?

ஆணின் கொடுமைகளைச் சகிக்கும் பெண் மீது ஆணுக்குத் தோன்றும் குற்றவுணர்வு என்பது தேவையற்ற போலி உணர்வு. ஆணவக் கொலையின் விளைவாக எழுந்தருளி இருக்கும் பெண் தெய்வங்களே இதற்குச் சாட்சி. ஆண்களின் குற்ற மனப்பான்மையைத் தூண்டுவதற்காக இன்னும் எவ்வளவு காலம் பெண்கள் தங்கள் சுயமரியாதையை இழக்கப்போகிறார்கள்? வரலாற்றில் ஒடுக்கப்பட்ட எந்த இனமும் தன் விடுதலையை நோக்கிய பயணத்தில் ஆதிக்க சக்திகளின் மனம் கோணாமல் யாசித்து உரிமைகளை அடைந்ததில்லை. கல்வியும் சுயமரியாதையும் சுய அக்கறையும் வசப்படும்போது பெண் தன் தளைகளைத் தானே உடைத்தெறிகிறாள். பெண் சக்தியின் மகத்துவம் வெளிப்படுவதைக் கண்ணுறும் ஆணின் மனதில் மாற்றங்கள் தன்னால் நிகழுமே ஒழிய தியாகங்களுக்கோ குற்ற மனப்பான்மைக்கோ இதில் இடமும் இல்லை, வேலையும் இல்லை.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர் தொடர்புக்கு: deepa.j.joseph@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in