

அனைத்திலும் ஆணுக்கு நிகரான சம உரிமையைக் கேட்கும் பெண்கள் மகப்பேறு தொடர்பான விவகாரங்களில் தனி உரிமையைக் கோருவது நியாயமானதே. காரணம், கருவுறுதலுக்குப் பிந்தைய சிக்கல்கள் அனைத்தையும் பெண் மட்டுமே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உடல், மனரீதியான வாதைகளும் சமூக அழுத்தமும் பெண்ணுக்கு மட்டுமே. ஆண் மிக எளிதாகக் கடந்துவந்துவிடுகிற நிகழ்வைப் பெண்கள் பெரும்பாடுபட்டும்கூடக் கடந்துவிட முடிவதில்லை. பொதுச் சமூகம் அதைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருப்பதை அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்துகிறது.
டெல்லியைச் சேர்ந்த 25 வயதுப் பெண் ஒருவர் 23 வாரங்கள் கடந்துவிட்ட கருவைக் கலைக்க அனுமதிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்பதைக் காரணமாகச் சொல்லி கருக்கலைப்புக்கு நீதிமன்றம் மறுத்துவிட்டது. தன் நண்பருட னான மனமொத்த உறவில் உருவான கருவைக் குடும்பத்தின் வறுமை காரணமாகத் தொடர்ந்து சுமக்க முடியாத நிலையில் இருப்பதாகச் சொன்ன அந்தப் பெண், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ‘மருத்துவரீதியிலான கருக் கலைப்புச் சட்டம்’ கருக்கலைப்புக்கு யாரெல்லாம் தகுதியானவர்கள் என்று வரை யறுத்துள்ளது. அதில் பெண்ணின் திருமண நிலை குறித்துச் சொல்லப்பட்டிருக்கும் பகுதியை மட்டும் கேள்விக்குள்ளாக்கினார் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஐஸ்வர்யா.
திருமணம் ஒரு தகுதியல்ல
கருவுற்றிருக்கும் நிலையில் ஒரு பெண் கணவனை இழந்தாலோ விவாகரத்து பெற்றாலோ அவர் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்கிறது சட்டம். இதன்படி பார்த்தால் திருமணமான பெண்கள் மட்டுமே கருக்கலைப்புக்குத் தகுதியானவர்கள் என்றாகிறது. மணமாகதவர்களின் உடல்ரீதியான உறவு குறித்த அடிப்படை உரிமைக்கு எதிரானது இது. அதனால் இந்த வரையறைக்குள் தன் இணையரால் கைவிடப்பட்ட மணமாகாத பெண்களையும் சேர்க்க வேண்டும் என்று வாதிட்ட ஐஸ்வர்யா, கருக்கலைப்புச் சட்டத்தின் சம்பந்தப்பட்ட விதிமுறையில் மட்டுமே மாற்றம் செய்தால் போதுமானது என்றார். அதன் அடிப்படையில் அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செப்டம்பர் 29 அன்று தீர்ப்பளித்தனர். மணமாகாத பெண்களும் 24 வாரங்களுக்குட்பட்ட கருவை மருத்துவரீதியாகக் கலைக்க உரிமையுண்டு என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. தீர்ப்பின்போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் பெண்ணுரிமையை உறுதிப்படுத்துவதாக அமைந்தன. ‘விருப்பமில்லாத கருவைச் சட்டத்தின் பேரால் சுமக்கச் சொல்லி வலியுறுத்துவது அந்தப் பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் செயல்’ என்று சொன்ன அதேநேரம், ‘மனைவி மீது கணவன் நிகழ்த்தும் பாலியல் வல்லுறவையும் பாலியல் வல்லுறவாகவே கருதி அதன் விளைவாக உருவாகிற கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும். இதில் பெண்ணின் இசைவு மட்டுமே போதுமானது. பாலியல் வல்லுறவு குறித்து அவர் நிரூபிக்கத் தேவையில்லை’ என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திருமண வல்லுறவு குறித்துப் பல ஆண்டுகளாகப் பேசிவரும் நிலையில் விருப்பமற்ற உறவில் உருவாகிற கருவைக் கலைக்கவாவது அதைப் பாலியல் வல்லுறவாக நீதிமன்றம் கணக்கில் கொள்வதை வரவேற்க வேண்டும்.
கணவனின் அனுமதி தேவையில்லை
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையொட்டிச் சில நாட்களுக்கு முன்பு கேரள உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பும் கவனிக்கத்தக்கது. கணவனைப் பிரிந்து வாழும் பெண்ணுக்குத் தன் கருவைக் கலைக்கும் உரிமையைக் கேரள உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது. அதற்குக் கணவனின் அனுமதி தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது. “கருவுறுதல் தொடங்கிப் பிரசவம் வரையிலான மன அழுத்தத்துக்குப் பெண்களே ஆளாகிறார்கள். பொருளாதாரப் பின்புலமும் கணவனின் ஆதரவும் இல்லாத நிலையில் குழந்தையைச் சுமப்பது ஒரு பெண்ணை மனரீதியான சிதைவுக்கு இட்டுச் செல்லும் அபாயமும் இருக்கிறது” என்று நீதிமன்றம் தெரிவித்திருப்பது முக்கியமானது. ஆண் ஒதுங்கிவிடுவதும் பெண் சிக்கிக்கொண்டு உழல்வதும் இந்த இடத்தில்தான். கருப்பை பெண்ணிடம் இருக்கிறது என்பதற்காகவே விருப்பமில்லாத கர்ப்பத்தைச் சுமக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை என்பதைத்தான் இந்தத் தீர்ப்புகள் உணர்த்துகின்றன. அதை மறுப்பது பெண்ணின் தனி உரிமையைப் பறிப்பதற்கு நிகரானது.
கருத்தடையைப் பரவலாக்குவோம்
மருத்துவத் துறை நவீனமடைந்துவிட்ட இந்தக் காலத்திலும் கருக்கலைப்பு குறித்து நாம் விவாதித்துக்கொண்டிருப்பது சுகாதாரத் துறையின் சுணக்கத்தையே காட்டுகிறது. இந்தியாவின் தேசியக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் உலகிலேயே மிகப் பெரிய திட்டமாகக் கொண்டாடப்படுகிறது. குடும்பக் கட்டுப்பாடு என்பது கருத்தடை யையும் உள்ளடக்கியதுதானே. கருத்தடை குறித்த விழிப்புணர்வையும் அதன் பயன்பாட்டையும் இன்னும் பரவலாக்காதது அந்தத் திட்டத்தின் பின்னடைவு. இந்தத் தலைமுறையிலும் பலரும் ‘எதிர்பாராத கர்ப்பம்’ குறித்துப் பேசுவது ஆரோக்கியமானதல்ல. நம்மிடம் போதிய சுகாதாரக் கட்டமைப்பு இருக்கிறபோதும் பெண்களின் இனப்பெருக்க நலனோடு தொடர்புடைய ஒரு திட்டத்தை ஏன் இன்னும் பரவலாக்கவில்லை என்கிற கேள்வி எழுவது இயல்பு. பருவமடைந்த அனைவருக்கும் கருத்தடை சாதனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை.
அதே நேரம் எதிர்பாராத கர்ப்பத்தைக் கலைப்பதற்கான மருத்துவரீதியியான வழிமுறைகளையும் பரவலாக்க வேண்டும். கருத்தடை மாத்திரைகள் அனைத்துத் தரப்பினருக்கும் எளிதில் கிடைக்கும் நிலையில் இருப்பது தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கும். அரசு மருத்துவ மனைகளில் கருத்தடை மாத்திரைகள் கிடைக்கின்றன என்கிறபோதும் எந்தக் கேள்விகளும் இன்றி அவற்றை அவ்வளவு எளிதாகப் பெண்கள் பெற்றுவிட முடிகிறதா என்பதும் ஆராய வேண்டியதே. கருக்கலைப்புக்குச் சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதம் மட்டுமே போதும் என்று சட்டம் சொன்னாலும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரால் ஏதேனும் தொந்தரவு வரக்கூடுமோ எனப் பயந்தே பெரும்பாலான மருத்துவர்கள் கருக்கலைப்புக்கு மறுத்துவிடுகிறார்கள். இதுபோன்ற நேரத்திலும் அரசின் இடையீடு அவசியமாகிறது.
கருத்தடை சாதனங்களைப் பயன் படுத்துவதில்கூட ஆணின் விருப்பமே மேலோங்கியிருப்பதையும் மறுப்பதற் கில்லை. ஆணுறைகளைப் பயன்படுத்துவது எளிது, பக்க விளைவுகளும் இல்லை. ஆனாலும் பெண்கள்தாம் கருத்தடை சாதனங்களையும் மாத்திரைகளையும் பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது. கருத்தடை சாதனங்களின் தோல்வி குறித்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில் கருக்கலைப்பு வரை நீட்டிக்காமல் அதை ஆரம்ப கட்டத்திலேயே தவிர்த்துவிடும் கருத்தடை முறைகளைப் பின்பற்றுவது நல்லது. அச்சமும் குற்றவுணர்வும் இல்லாமல் பெண்கள் கருத்தடை மாத்திரை களைப் பெறும் சூழலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். பெண்களுக்கு ஆதரவளிப்பதுபோல் தீர்ப்புகள் வழங்கப்படுவது மகிழ்ச்சியளித்தாலும் அவை செயல்படுத்தப்படும் வகையில் கட்டமைப்பு வசதி இருக்கிறதா என்பது விடையில்லாக் கேள்வி. அதுவும் மாற வேண்டும்.
கட்டுரையாளர், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in