Published : 13 Jul 2014 10:00 AM
Last Updated : 13 Jul 2014 10:00 AM

விவாதக் களம்: சக மனுஷியாகப் பார்த்தாலே போதும்

பெண் என்றாலே இரண்டாம் பட்சம்தான் என்று நடிகை ரோஹிணி சொல்லியிருந்ததை ஆமோதித்தும் மறுத்தும் நம் வாசகர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்கள். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் இங்கே:

முன்னுரிமை உண்டு

எல்லாத் துறைகளிலும் படிப்பும் திறமையும் இருக்கும் பென்கள் நிச்சயம் மதிக்கப்படுகிறார்கள். சில சமயம் பெண்கள் நடந்துகொள்ளும் முறையப் பொறுத்தும் அது அமையும். பெண்களின் சுதந்திரத்துக்கும் கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம் என்று சில வரையறைகளை வைத்திருக்கிறார்கள். அது எல்லை மீறும்போதுதான் பிரச்சினைகள் உருவாகின்றன.

- வரலக்ஷ்மி முத்துசாமி, கிழக்கு முகப்பேர்.

பெண்களுக்கு எல்லா இடத்திலும் சம உரிமையும் சமத்துவமும் கிடைப்பதில்லை. ஆண் குழந்தையைப் போற்றியும், பெண் குழந்தையைத் தூற்றியும் வளர்க்கிறார்கள். ‘உனக்கு எதுவும் தெரியாது, வாயை மூடு’ என்று சொல்லிச் சொல்லியே பெண் வளர்க்கப்படுகிறாள். பெண்களை மட்டம் தட்டுவதிலேயே ஆண்கள் எப்போதும் முனைப்புடன் இருக்கிறார்கள்.

- செ. கலைவாணி, மேட்டூர் அணை.

வீட்டுக்குள் வேண்டும் மாற்றம்

மகாகவி சொன்னது போல பெண்கள் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாக இருந்தாலும், இரண்டாம்பட்சமாகத்தான் நடத்தப்படுகிறார்கள். வேலைக்குப் போகும் இடங்களில் ஆண்களைவிட பெண்களே அதிக சிரமத்துக்கு ஆளாகிறார்கள். வீட்டு வேலையையும் கவனித்துக் கொண்டு, அலுவலகத்திலும் அல்லல்படுகிறார்கள். அப்படியும் கணவனிடம் அடியும், உதையும் வாங்கிக் கொண்டு கொடுமையை அனுபவிக்கிறார்கள். விருப்பம் இல்லை என்றால் மனைவியே என்றாலும் அவளைத் தொட அனுமதியில்லை. ஆனால், பெண்ணை தாங்கள் அனுபவிக்கிற போகப்பொருளாகவே நினைக்கிறார்கள். இதில் எங்கே பெண்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது?

- ப. நிஷா, பாடாலூர், பெரம்பலூர் மாவட்டம்.

தாயே தன் மகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆண் குழந்தைப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற பெரும்பாலான தாய்மார்கள், பெண் குழந்தை வேண்டும் என்று விரும்புவதில்லை. இது வேதனைக்குரியது. வீட்டுக்குள் நிலவும் இந்த நிலை மாறினால்தான் சமூகத்திலும் மாறும்.

- கு. சாந்தா, திருநெல்வேலி.

ஒரு பெண் தன் வாழ்நாளில் அடிப்படைத் தேவைகளைக்கூடப் போராடிப் பெற வேண்டியிருக்கிறது. இன்று பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என்று என்னதான் பெருமையடித்துக் கொண்டாலும் அவர்கள் இரண்டாம்பட்சமாகவே நடத்தப்படுகிறார்கள். எந்த இடத்திலும் பெண்ணுக்கு சுயமரியாதை என்பதை இந்தச் சமூகம் அனுமதிப்பதே இல்லை. தன்னம்பிக்கையோடு நடந்துகொள்கிறவர்களை இந்தச் சமூகம் வேறு கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறது. இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் ஒரு பெண் சம உரிமை எதிர்பார்ப்பது அத்தனை எளிதான காரியமில்லை.

- சீ. பிரியதர்ஷினி, தருமபுரி.

ஆண்களைவிட ஒரு படி மேல்

இன்று பல துறைகளில் பெண்களின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டேதான் வருகிறது. ஒரு சில இடங்களில் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதை மட்டும் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாகப் பெண்கள் இரண்டாம்பட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆண்களுக்கும் பெண்கள் நிகர் என்று சொல்வதைவிட ஒரு படி மேலே என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

- க. பாலகிருஷ்ணன், சுரண்டை.

பெண்ணை முதன்மைப்படுத்தாத வீட்டில் பிரச்சினைகள்தான் அதிகம். பொருளாதாரத்தின் துணையோடு ஆணும் பெண்ணும் சேர்ந்து வளர்க்கும் செடிதான் குடும்பம். முதன் முதலில் விண்வெளித் துறையில் பெண்கள் சாதனை படைத்தபோதே, பெண்ணைப் பற்றி ஏற்கனவே இருந்த பிம்பங்கள் உடைந்துவிட்டனவே.

- சுசீலா ராமமூர்த்தி, கருவம்பாளையம், திருப்பூர்.

ரோஹிணியின் கூற்றை அப்படியே வழிமொழிவது போலத்தான் சமுதாயத்தின் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. விருந்துகளிலும் மற்ற பொது இடங்களிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்று வழிவிடும் ஆண்களின் மறுபக்கமும் சரி மனப்பக்கமும் சரி பெண்களை இரண்டாம்பட்சமாகத்தான் கருதுகின்றன என்பது அவர்களின் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு அவர்கள் தரும் இடத்தைப் பார்த்தாலே புரியும்.

இரண்டாம் பட்சமான விஷயங்களில் பெண்களுக்கு முதலிடம் தரும் ஆண்கள், முதலிடத்தை தர வேண்டிய இடங்களில் பெண்களுக்கு அதை அளிப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த விஷயத்தில் பெண்களும் குற்றவாளிகள்தான். தனக்கான உரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் தனது நிலைப்பாட்டிலியே சிறிது நேரம் தாக்குப்பிடித்து நின்றிருந்தால் அந்த இடம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும்.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

நம் சமுதாயத்தில் பெண் என்றால் எப்படி இருக்கவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. அது எல்லோர் மனதிலும் பசுமரத்து ஆணி போல பதிந்துவிட்டது. ஆனால் தற்பொழுது பெண்கள் தானாக படித்து வெளிவந்து சுயமாகச் சம்பாதிப்பதால் ஓரளவு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இருப்பினும் ஆண், பெண் என்ற சமநிலை வரும்பொழுது பெண்ணின் இடம் ஒரு படி கீழேதான் உள்ளது. ஆணுக்குச் சமமாக உழைத்து, குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்தாலும் அவளது முக்கியத்துவம் உணரப்படுவதில்லை.

- பானு பெரியதம்பி , சேலம்.

தன்னம்பிக்கையின் வெளிப்பாடு திமிர்த்தனமா?

ஒரு பெண் பொது இடத்தில் ஒரு கருத்தைச் சொல்ல உரிமை இல்லை. மீறி நடக்கும் பெண்கள் திமிர் பிடித்தவர்களாகவும், நடத்தை கெட்டவர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். இந்தப் புழுதியை வாரித் தூற்றுவது குருட்டு நோக்கோடு உள்ள ஆண்கள்தான்.

ஒரு ஆணைத் திட்டும்போதுகூட மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அவனது குடும்பப் பெண்களையே அவமானப்படுத்துகிறார்கள். விதவை, கைம்பெண், வாழாவெட்டி போன்ற வார்த்தைகள் பெண்களுக் காகவே உருவானவை. இந்த வார்த்தைகளுக்கு ஆண்பால் என்னவென்று இதுநாள் வரை மொழி ஆராய்ச்சி செய்த அறிஞர் பெருமக்கள் புதிதாய் வார்த்தைகளை உருவாக்கியிருக்கிறார்களா?

சமஉரிமை, சமத்துவம் என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கிறது. பெண்கள் மீதான வன்முறை என்பது எல்லா வடிவங்களிலும் தன் கோரைப் பற்களைக் கொண்டு பெண்களைக் கிழித்துப் போடுகிறது. முதலில் குடும்பத்தில் உள்ள பெண்களை ஒருவன் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த மரியாதை அடுத்த பெண்களிடமும் ஏற்படும்.

- தேஜஸ், காளப்பட்டி, கோவை.

எங்கேயும் எப்போதும் ஆணாதிக்கம்

களப் பணி, கலைப் பணி, அரங்கச் செயல்பாடுகள் என்று வாய்ப்புகள் கிட்டும்போதெல்லாம் தன்னைக் காத்திரமாய் வெளிப்படுத்தும் ரோஹிணிக்கே இதுபோன்ற கேள்விகள் பாயும்போது, அன்றாடம் வாழ்தல் நிமித்தம் போராடும் விளிம்புநிலை பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஆயிரமாயிரம். நாள்தோறும் செய்திதாள்களில் அடிபடும் பெண்கள் பற்றிய செய்திகளே அந்த ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பதம்!

பணியிடத்தில், பழகுமிடத்தில் மட்டுமல்ல, தன் சொந்த வீட்டிலேயேகூட பெண் தாழ்த்தப்படுகிறாள். இரண்டாந்தர நிலைப்பாட்டில் வைக்கப்படுகிறாள். காரணம், காலங்காலமாக அவள் மீது திணிக்கப்பட்ட ஆணாதிக்க அடக்குமுறைகள்தான்.

-கொற்றவன், சென்னை.

கிராமங்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பால் சம்பாதிப்பது முதல் பிள்ளைகளை வளர்ப்பதுவரை அனைத்து பொறுப்புக்களையும் பெண்ணே முன்னெடுக்கிறாள். ஆனால், அதே வீட்டில் திருமணம் போன்ற விசேஷ காரியங்கள் நடக்கும்போது பெண்ணிடம் கருத்துக் கேட்பதுகூட இல்லை. அவளை முதன்மைப் படுத்துவதும் இல்லை. அதனைப் போல ஆணுக்கு நிகராக பெண் கடுமையான உடல் உழைப்பைக் கொடுக்கிறாள். ஆனால் ஊதியம் என வரும்போது பெண்ணுக்கு ஒரு அளவும் ஆணுக்கு ஒரு அளவும் பார்க்கப்படுகிறது.

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

திருமணத்துக்கு முன் பெற்றோர் சொல்லும் வாழ்க்கைக்குள் தங்களைத் திணித்துக் கொள்ளும் பெண்கள், திருமணத்திற்குப் பின் கணவனின் வாழ்க்கைக்குத் துணை நிற்கும்படியே வற்புறுத்தப்படுகின்றனர். வாழ்வில் ஒருபோதும் அவர்களின் விருப்பத்திற்கு வாழத் துணியாத பெண்களையே நம் சமூகம் விரும்புகிறது. கட்டுப்பாடுகளை உடைக்கத் துணியும் பெண்களை வசைச் சொற்களால் கேவலப்படுத்தவும் செய்கிறது. தாய்வழிச் சமூகத்தின் வழியாகவே தந்தைவழிச் சமூகத்திற்கு நாம் வந்தோம் என்றாலும், பெண்களுக்கு உண்டான இடத்தை அளிப்பதில் அதிகத் தயக்கம் காட்டுகின்றனர்.

- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.

சக மனுஷியாக நடத்துங்கள்

பெண்ணை சக மனுஷியாக நடத்துங்கள் போதும். தெய்வமாக்க வேண்டாம். என் தோழியின் வளைகாப்பின்போது அவளிடம் ஆண் பிள்ளை பெற்றவர்களாக பார்த்து பழம் கொடு என்றார்கள். பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் மிக அதிகம். வீட்டிலிருந்தே அது தொடங்கிவிடுகிறது. இதற்கான தீர்வு பெண் குழந்தைகளுக்கு கல்வியுடன் வீரத்தையும் விதைப்பதுதான். பாசத்துடன் சுதந்திரத்தையும் கொடுக்க வேண்டும்.

- வீரமணி சங்கர்.

பெண் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள், கிச்சன் செட் வாங்கிக் கொடுத்து அடுப்பங்கரையில் அடைக்கிறோம். கை, கால், காது, கழுத்து, இடுப்பில் எல்லாம் சங்கிலிகள் போட்டு அழகு பதுமைகள் ஆக்கப் பார்க்கிறோம். பெண் குழந்தைகளை சைக்கிள் ஓட்ட விடுவதில்லை. ஆண் குழந்தைகளைப் போல உணவும் கொடுப்பதில்லை. அவர்களின் உணர்வுகளை மதிப்பதில்லை. எண்ணங்களை கேட்பதில்லை

- சிவசங்கரன்.

பெண்களைத் தெய்வமாக கொண்டாடவும் வேண்டாம், தூக்கிப்போட்டு உடைக்கவும் வேண்டாம். சக மனுஷியாக பார்த்தாலே போதும்.

- எம். அன்பழகன், புதுச்சேரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x