

அந்தக் காலத்தில் கல்யாணம் முடிந்து விட்டால் புருசனும் பொண்டாட்டியும் மூன்று மாதம் வரை சேரக் கூடாது. மாப்பிள்ளைக்கு இந்த மூன்று மாதமும் விருந்து சாப்பாடு போட வேண்டும். பெரியம்மா, சின்னம்மா, பாட்டி என்றுதான் அவனுக்குச் சாப்பாடு வைப்பார்கள். தாலிகட்டிய பொண்டாட்டி அவன் எதிரிலேயே வர மாட்டாள். அவள் எப்போதும் காடுகளில் வேலை செய்துகொண்டு இரவில் சேத்திக்காரிகளோடு படுத்துக்கொள்வாள். மூன்று மாதம் கழித்து பெரிய மறுவீடு வைத்த பிறகுதான் புருசன், பொண்டாட்டியோடு பேச வேண்டும்.
கோபாலனுக்கும் புசுப்பாவுக்கும் கல்யாணம் முடிந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது. ஆனாலும், புசுப்பா இவன் எதிரே வரவேயில்லை. கோபாலனுக்குப் பொண்டாட்டி மீது அப்படி ஒரு கோபம். ஒரே வீட்டுக்குள்ளதான நம்மகூட இருக்கா? வெளிய போவும்போது, வரும்போது ஒரு கனிவான பார்வ, ஒரு சிரிப்புன்னு சிரிச்சிட்டுப் போவலாமில்ல. நம்ம கண்ணுக்குக்கூடத் தட்டுப்பட மாட்டேங்கா. நானு என்ன இவள கடிச்சா முழுங்கிரு தேன்னு மனசுக்குள்ளையே கடுகடுத்துக்கிட்டு இருந்தான். இரண்டு, மூணு நாளு வேலை செஞ்ச இடத்துக்கும் போயி பார்த்தான். ஆனா, அவ வேலையிலதேன் மும்முரமா இருந்தாளே தவுத்து, இவன என்னுன்னுகூடத் திரும்பிப் பாக்கல.
அதோட இந்தக் கல்யாணத்தில இன்னொரு விஷயமும் இருந்தது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு விவரம் தெரியும்வரை அவர்களின் கைகளில் ரப்பர் வளைவி (வளையல்) தான் போட்டு விடுவார்கள். கல்யாணத்தன்றுதான் கண்ணாடி வளையலைக் கைநிறைய போட்டுவிடுவார்கள். அந்த வளையல் மூணாம் மாதம் மறுவீடுவரை உடையாமல் இருக்க வேண்டும். அப்படி உடைந்துவிட்டால் இவள் புருசனோடு ரகசியமாக யாருக்கும் தெரியாமல் பேசியிருக்கிறாள் என்று குடும்பத்தில் இருப்பவர்கள் வசவான வசவு வஞ்சித் தீர்த்துவிடுவார்கள். அதனாலேயே இந்தப் பெண்கள் ரொம்ப சூதானமாக இருப்பார்கள்.
கோபாலனுக்குப் புசுப்பாவைப் பார்க்காமல் பேசாமல் இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. அதைத் தனக்குத் தங்கை முறையாக வேண்டிய சோலையிடம் சொன்னான். அவளுக்கும் அண்ணனைப் பார்க்க பாவமாய்தான் இருந்தது. அன்றைக்குச் சோலையும் புசுப்பாவும் நெல்லுக்கருது அறுக்கப் போவதாக இருந்தது. நெல்லறுப்பில் கட்டெல்லாம் களம் வந்து சேர்ந்த பிறகு பெண்கள் அள்ளிப்போடும் கருதை ஆண்கள் லாகவமாக வாங்கித் தங்களுக்கு முன்னால் கிடக்கும் பாறைக்கல்லில் அடித்து அந்த வைக்கோலை அப்படியே பிரியாக மாடுகள் பிணையல் அடித்துக்கொண்டிருக்கும் களத்தில் வீசி எறிவார்கள். அதைப் பெண்கள் உதறிக்கொண்டு வந்து ஒரு பெண்ணின் மேல் எறிவார்கள். அவள்தான் அந்தக் கூளத்தை உதறி இரண்டாவது பிணையலுக்குப் போட வேண்டும். அப்படி போடுகிற பெண் செய்யும் வேலைக்கு ‘குத்துக்கல்’ என்றுபெயர். பெரும்பாலும் புசுப்பாதான் அந்த வேலைக்கு நின்றுகொள்வாள். ஏனென்றால், இந்தக் குத்துக்கல் வேலைக்கு ஆடி, ஓடி வேலை செய்ய வேண்டாம் பேசாமல் நின்ற இடத்திலேயே நிற்கலாம். அதில் ஒரு கஷ்டம் என்னவென்றால், பெண்கள் வைக்கோலை உதறி மேலே மேலே போடுவதால் ஆள் அடையாளம் தெரியாமல் அவளும் வைக்கோல் போராக நிற்பாள். வேலை முடிந்தபிறகுதான் ஆள் கொஞ்சமாக அடையாளம் தெரியும். அதனால் சோலை “அண்ணே இன்னைக்கு புசுப்பாவுக்கு ஒரு வேலையைச் சொல்லி அவள களத்துக்கு வெளியே அனுப்பிவிட்டு நானு குத்துக்கல்லுக்கு நிக்கேன். நீ சத்தோடம் அவகிட்ட பேசிட்டு அனுப்பி வச்சிரு” என்றாள். இவனும் சரி என்று களத்தோரம் நிற்க, சோலை புசுப்பாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே கோபாலன் புசுப்பாவை அள்ளிக்கொண்டு ஓட சோலை குத்துக்கல்லாக விக்கித்துப்போய் நின்றாள்!
(தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com