

வனிதா கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் மென்பொருள் நிறுவனம் ஒன்றின் எம்.டி. ஆண், பெண் தொழிலாளர்கள் பலரைத் திறம்பட நிர்வகிப்பவர். வீட்டில்? ஒரு நூறு ரூபாய்க்குக் கணவனிடம் கையேந்தி நிற்கும் அவலம். எந்தச் செயலுக்கும் ‘அவரது’ உத்தரவுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை. பந்தமெனும் விலங்கு அவரை முடக்கிப்போட, அவர் சிறிது சிறிதாகப் பலமிழந்து கொண்டிருக்கிறார்.
இளம் வயதில் நோயால் பாதிக்கப்பட்ட ஹெப்ஸிபா, விந்தி விந்தி நடந்தாலும் படு சுட்டி. ஒரு வருடம் அவளைத் தீவிரமாகக் காதலித்த வனை நம்பி மிதந்துகொண்டிருந்தவளை அவன் கைவிட்டுவிட்டான். அந்த ஏமாற்றத்தில் நொந்துபோனவள், மீண்டு வர முடியாது தவிக்கிறாள்.
கடினமான காலங்களைத் தாண்டி வர முடியாமல் இவர்கள் தவிப்பது ஏன்? போராட போதிய மன பலம் இல்லை அல்லது தங்களது பலத்தை அவர்கள் உணரத் தவறிவிட்டார்கள் என்றுதான் நம்புகிறேன்.
பல பெண்களிடம், ‘நீ யார்?’ என்று ஒரு சின்ன கேள்வியைக் கேட்டேன். ‘நான் ஒரு ஆசிரியர்/மருத்துவர்/கலைஞர்/விஞ்ஞானி’ என்று சிலரும், ‘நான் இன்னாரது மனைவி/மகள்/தாய்’ என்று சிலரும் பதில் சொன்னார்களே ஒழிய, யாருக்குமே தங்களது அடையாளம் என்ன என்று தெரியவில்லை. முகமில்லாத ஒரு பெண்ணாக வாழ்வதெப்படி?
மலர்போன்று மென்மையானவள் பெண் என்று சொல்லப்பட்டாலும் திண்மையுடன் பெண்கள் சிலர் போராடி வாழ்க்கையில் வெற்றி பெறுவதை நாம் கண்டதில்லையா? பெண்ணால் முடியும். இதை நம்மில் பலரும் உணர்வதில்லை. ‘பெண் தனியாக வாழும் அருகதையற்றவள்’ என்கிற போதனையை நமது கலாச்சாரமும் சமுதாயமும் ஓதி ஓதி மூளைச் சலவை செய்திருக்கின்றன.
‘ஆணுக்கு நிகர் பெண்’ என்று நிரூபிக்க சில பெண்கள் எல்லை மீறி நடந்துகொள்வதை எதுவும் செய்ய முடியாத நிலையில் கவலையோடும் வேதனையோடும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ‘பெண்கள்தான் இதற்கெல்லாம் காரணமா?’ என்று கோபப்படாதீர்கள். வண்டிக்கு அச்சாணி போலப் பெண்கள் இந்தச் சமுதாயத்தின் இன்றியமையாத அங்கம். பல காலமாகக் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்த பறவைக்குத் திடீரென்று கூண்டு திறக்கப்பட்டு விடுதலை கிடைத்தால் என்னவாகும்? திடீர்ச் சுதந்திரத்தில் திக்குமுக்காடி பாதை புரியாமல் முட்டி மோதி அலைபாயுமல்லவா?
இதுதான் புதுமைப்பெண்கள் சிலரது நிலை என்று நம்புகிறேன். சில காலம் கழித்து அவள் சமநிலைக்கு வந்துவிடுவாள். ஆனால், அதற்குள் அவள் எவ்வளவு அடிவாங்க வேண்டியிருக்குமோ. அவள் பாதிக்கப்பட்டால் அவளுடைய குடும்பம், அவள் சார்ந்திருக்கும் சமுதாயம், அவள் வாழும் உலகம் எல்லாவற்றிலும் சுழற்சியாக அந்தப் பாதிப்பின் விளைவுகள் ஊடுருவாதா? பெண்கள் சமுதாயத்தைக் கலவரப்படுத்த நான் இவற்றை எழுதவில்லை. போகும் பாதை கரடுமுரடானது, பள்ளங்கள் நிறைந்தது என்று எச்சரிக்கிறேன். கூடவே, பெண்ணுக்கு நம்பிக்கையூட்டும் சில கருத்துகளையும் வழிமுறைகளையும் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். உங்களுக்குள் இருக்கும் பலத்தை உங்களுக்குச் சுட்டிக்காட்டப்போகிறேன்.
எல்லா மதங்களும் மக்களுக்குத் தெரிவிக்கும் ஒரு செய்தி: தீதும் நன்றும் ஒன்றாகவே வரும்; அதேபோல் இரவும் பகலும், பிறப்பும் இறப்பும், உறவும் பிரிவும், இன்பமும் துன்பமும், ஆண்மையும் பெண்மையும். ஒன்றை ஒன்று சார்ந்தே இருப்பதுதான் உலக நியதி. இவை எல்லாவற்றையும் அனுபவிக்கையில் சமநிலையில் நின்று, நல்லிணக்கத்தோடு வாழ்வதுதான் சிறந்த வழி. சீனத் தத்துவம் ஒன்று இதைத் தெளிவான கருப்பு வெள்ளை வரைபடமாகக் காட்டி (Yin and Yang) விளக்குகிறது.
இந்த நிலையை அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன என்பதுதானே அடுத்த கேள்வி! தனக்குள் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து, வளர்த்துக் கொள்ள வேண்டும். உணர்வுவயப்பட்டுச் செயல்படக் கூடாது. இரண்டு வரிகளில் முடிந்துவிடும் விவரங்களா இவை! தொடர்ந்து நிறைய பேசுவோம், தயாராக இருங்கள்.
கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்
தொடர்புக்கு: ashabrinda@gmail.com