

நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பு சக்தியான கு.அழகிரிசாமியின் விஸ்தாரமான நாவல், ‘புது வீடு புது உலகம்’. சிறுகதைப் பரப்பில் மனித உறவுகளையும் மன உணர்வுகளையும் ஒரு குறிப்பிட்ட கால, இடச் சூழலின் பின்புலத்தில் அபாரமாகவும் நுட்பமாகவும் வசப்படுத்திய மேதை கு. அழகிரிசாமி.
சென்னை போன்ற பெருநகர வாழ்வைச் சிறிதும் விரும்பாதவரான கு.அழகிரிசாமியின் இந்நாவல், ஏழ்மையினால் எந்தவொரு சுகவாசத்தையும் அறியாமல் சென்னை நகரத்தில், வாடகைக் குடித்தனத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இரு பெண்களைப் பற்றியது. பேரழகும் பண்பும் கொண்ட அவர்கள், வறுமை காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியவர்கள். வாழ்ந்து கெட்டு, வறட்டுப் பிடிவாதங்களோடு வாதத்தினால் படுத்த படுக்கையாகிவிட்ட தந்தையும் தன் பெண் பிள்ளைகளை எப்படிக் கரையேற்றுவது என்று பெருமூச்செறிந்து கொண்டிருக்கும் தாயும் கொண்ட குடும்பம் அது. அண்டை வீட்டாரின் சகவாசமும் பரிவும் கிட்டுவதே அவர்களைப் பொறுத்தவரை பெரும் சாதனை. மூத்தவள் சரளா எடுக்கும் டியூஷன்களில் கிடைக்கும் குறைந்த பணத்தைக் கொண்டு கஷ்ட ஜீவனம். பெண்களாக இருப்பதாலேயே ஒழுக்கம் சார்ந்த அவதூறுகளுக்கும் காரணங்களற்ற பொறாமைக்கும் ஆளாகி இடம்பெயர்ந்தவர்கள் அவர்கள்.
எளியவர்களின் உலகம்
வதை மிகுந்த வாழ்விலும் மேன்மைமிக்க மனித குணங்கள் வெளிப்படும் கதைகளைப் படைத்தவரான கு.அழகிரிசாமி, இந்நாவலிலும் அந்தப் பண்பிலிருந்து விலகிடவில்லை. தன் காதலின் உணர்வொன்றையே பெரும்பேறாகக் கருதும் கோபால். சரளாவைப் பற்றியும் அவள் குடும்பத்தைப் பற்றியும் சுற்றியுள்ள அனைவருமே அவதூறுகளைச் சொல்லும் போதும் மகனின் விருப்பம் அறிந்து, காரணங்கள் காட்டித் தடுத்துவிடாது மாறாத புன்னகையோடு கடந்துவிடுகிற தாய் ராஜேஸ்வரி. தன் வீட்டுப் பெண்ணைப் போலவே கருதி அவளின் திருமண ஏற்பாட்டுக்குத் துணைநிற்கும் கோபாலின் தந்தை. இந்த எளிய பெண்களுக்கு எப்படியாவது திருமணத்தை நிகழ்த்தி அவர்களின் வாழ்க்கைக்கு ஏதாவதொரு வழியை உண்டாக்கிவிட வேண்டுமென முனையும் சின்னசாமி என நாவலின் பாத்திரங்கள் எளிமையாலும் மற்றவர் மீது கொண்ட அக்கறையாலும் ஒளிர்கின்றன.
வசதியற்ற வாழ்க்கையிலிருந்து விடுபட, தன் பெண்களைச் சுயமரியாதையை இழக்கச் செய்யும் காரியங்களைச் செய்யத் தூண்டுவதும் அவர்கள் அதை மறுக்கும்போது இரக்கமற்று வெறுப்பதுமான சரளாவின் தாயாரின் குணம், தாய் இயல்பின் விசித்திர முரணே. அதிகம் பேசாத ‘விட்டகுறை தொட்டகுறை’ சிறுகதையின் நாயகி நீலாவின் இயல்பைச் சொல்லும் அழகிரிசாமி, துன்பங்களைச் சகித்துச் சகித்து உணர்ச்சிகளெல்லாம் கூர்மழுங்கித் துடிப்பிழந்து மனசுக்குள் அவிந்து அடங்கிவிட்டதன் விளைவாகவும் இருக்கலாம் என்று வாசிப்போருக்கு அவள்மீதான நியாயம் தோன்றச் சொல்வார். அது போன்ற விவரிப்பை ஏழ்மையினால் விருப்பு வெறுப்புகளைக் கடந்து, யாரிடமும் பேச எதுவுமில்லை என்று மௌனத்தில் ஆழ்ந்து சலனமற்றுத் திகழ்கிற சரளாவிற்கும் செய்கிறார். அவரைப் பொறுத்தவரை மனித இயல்புகளை வாழ்வின் போக்கே தீர்மானிக்கிறது.
இருளும் ஒளியும்
இயலாமையால் இருண்டு கிடக்கும் இரு பெண்களின் வாழ்வைத் துலக்கம் பெறச் செய்யக் கடைசியாகக் கிடைத்த வாய்ப்பாக சினிமாதான் முன்னின்றது. சினிமாவைச் சீரழிவிற்கான பாதையாகக் காணும் மூத்தவளுக்கும் தன் முன் ஒரு இன்பலோகமே வழிவிட்டுக் காத்திருக்கிறது என்று வியந்த இளையவளுக்கும் இடையே நிகழும் உணர்ச்சிமிகு முரண் இத்தனை ஆண்டுக் கால நெருக்கத்தையும் உடன்பிறப்புத் தொடர்ச்சியையும் அறுத்துவிடுகிறது. தாயுடனான உறவையும்தான். ஆனால், இறுதியில் மதிப்புமிக்க பணி வாய்ப்பைப் பெற்று இச்சமூகத்தில் உயர்வான நிலையை அடைந்துவிடும் லட்சியங்களைக் கொண்ட சரளாவுக்கு, மோகனின் சுகபோக வாழ்வின் மீதான மயக்கம், தான் பட்டுக்கொண்டிருக்கும் வேதனையை உடனே மரத்துப்போகச் செய்யும் வாய்ப்பாக இருக்கிறது.
‘திரிபுரம்’ சிறுகதையில் அழகிரிசாமி, வெங்கிட்டம்மாள் தன் கையிலிருக்கும் சில்லறைக் காசுகளைப் பார்த்துச் சிரிக்கும்போது சிவபெருமான்மீது விழுந்த அடி இந்த உலக உயிர்களின் மீதெல்லாம் விழுந்ததைப் போன்ற உணர்வு என்று முடிப்பார். இந்நாவலில் அப்படியொரு சாட்டையடி மொழியில்லை. ஆனால், சரளாவின் சறுக்கல், வாழ்வு அவளைத் துரத்திய வேகத்திலிருந்து அவள் கண்டுகொண்ட புதிய பாதையின் நியாயத்தைக் கோரிநிற்கிறது.
காலத்தின் அசுர நிழல் கவிந்து சிதைவுறும் மூன்று பெண்களின் உலகத்தை இந்நாவலில் அழகாகக் கட்டமைத்துள்ளார் கு.அழகிரிசாமி. நாவல் தொடங்கும்போது ஒளியும் இருளும் சரிநிகர் சமானமாகப் படரும் ஓர் உலகம், நாவலின் வளர்ச்சியில் இருள் அடர்ந்த பிரதேசமாகிறது. புது உலகின் நிர்தாட்சண்யமற்ற கோர முகம் நம்மைப் பெரும் அதிர்வுகளுக்கு உள்ளாக்குகிறது.
கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: janagapriya84@gmail.com