

கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது போல வரமாகக் கிடைத்தவர் என் கணவர். நாங்கள் இருவருமே ஆசிரியர்கள் என்பது கூடுதல் சிறப்பு. மகிழ்ச்சிக்கும் பணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது என் அனுபவம் தந்த பாடம். இருவரும் தனியார் பள்ளிகளில் வேலை செய்ததால் மிகக் குறைந்த வருமானத்தில் வாழ்க்கையைத் தொடங்கினோம்.
என் உணர்வுகளை மிகவும் மதிக்கக்கூடியவர். அடிக்கடி உடல்நலக் குறைவால் அவதிப்படும் என்னை, சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் சிறந்த மனநல மருத்துவர். சமையலில் உதவக்கூடிய பண்பாளர். அடுத்தத் தெருவில் இருக்கும் பள்ளிக்குக்கூட என்னை வண்டியில் அழைத்துச் சென்றுவிடும் சிநேகிதர். என் நான் பிறந்த குடும்பத்தையும் தன் குடும்பமாக நேசிப்பவர்.
ஒருமுறை என் அம்மாவிடம், “உங்க பொண்ணுக்கு சிசேரியன் செய்ததால் வெயிட் தூக்கக் கூடாதுன்னு டாக்டர் சொன்னார். அதுக்காக 19 ஆண்டுகளாகியும் ஒரு குக்கர் வெயிட்டைக் கூடத் தூக்க விடுவதில்லை” என்று சொன்னார் என் கணவர். மருமகன் தன் மகளை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறார் என்று அறிவதைவிட ஒரு தாய்க்கு வேறென்ன மகிழ்ச்சி வேண்டும். என் அம்மாவின் மகிழ்ச்சியில் நானும் மகிழ்ந்தேன்.
என் கணவர் எதுகை, மோனையோடு ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசுவதில் வல்லவர். சுற்றுலாப் பிரியரான அவர் மூலம்தான், நான் புதுப் புது இடங்களையெல்லாம் தரிசித்திருக்கிறேன். சிறந்த திரைப்படங்களைத் தேர்வுசெய்து, விடுமுறை நாட்களில் பார்க்கச் சொல்வார். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் எனக்கும் ஒரு கணக்குத் தொடங்கி, அதில் வரும் விஷயங்களையும் பகிர்ந்துகொள்வார்.
மனைவிக்கான முழு உரிமையையும் சுதந்திரத்தையும் நான் பெற்றிருக்கிறேன். ஏதாவது சண்டை வந்தாலும் நானே அவரிடம் பேசிவிடுவேன். என் பக்க நியாயத்தை எடுத்துச் சொன்னால் தயங்காமல் ஏற்றுக்கொள்வார். அதனால்தான் எங்களுக்கு ஒவ்வொரு நாளும் திருநாளாக இருக்கிறது.
- ஏ.கே. பானு மைதீன், அருப்புக்கோட்டை.
உங்க வீட்டில் எப்படி? தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். |