செப்டம்பர் 17: பெரியார் பிறந்தநாள் | உத்தியோகம் புருஷலட்சணம் மட்டுமா?

செப்டம்பர் 17: பெரியார் பிறந்தநாள் | உத்தியோகம் புருஷலட்சணம் மட்டுமா?
Updated on
2 min read

எண்ணிக்கையில் ஏறக்குறைய சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு, அரசு வேலைவாய்ப்புகளிலும் அதற்கான விகிதாச்சாரத்தை அளிக்க வேண்டும். சில நேரம் 50 சதவீதத்தைக் காட்டிலும் அவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதை எதிர்பாலினர்கள் விரும்பவில்லை என்பதற்கான காரணம், ஏற்கெனவே இங்கே நிலவிவரும் வேலையில்லா நெருக்கடி நிலைதான். வேலையில்லாத் துயரத்தை ஆண்கள் மட்டும் அனுபவிக்கவில்லை, பெண்களும் சேர்ந்தே அனுபவிக்கிறார்கள். மற்றபடி, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இத்தகைய ஆட்சேபணைகள் எழக்கூடும் என்பதெல்லாம் ஏற்கெனவே எதிர்பார்த்ததும்கூடத்தான்.

1970இல் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த பதி சந்திரசேகர் சென்னை வானொலிக்காக, தந்தை பெரியாரைப் பேட்டி கண்டார். அந்தப் பேட்டியின் முக்கிய நோக்கம் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி பிரச்சாரம் செய்வது. இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்படுவதற்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பே, 1920-களில் அதன் அவசியத்தைப் பேசியவர் பெரியார் என்பதன் அடிப்படையில் அந்தப் பேட்டி அமைந்திருந்தது. அதன் ஒருபகுதியாக, பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றிய விவாதமும் இடம்பெற்றிருந்தது.

வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு

ஸ்ரீபதி சந்திரசேகர், அடிப்படையில் ஒரு பொருளியலாளர். இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதற்கும் பெண்களின் திருமண வயது 15-லிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டதற்கும் அவரது வழிகாட்டலுக்குப் பெரும் பங்குண்டு. ‘2 குழந்தைகளே போதும், அவை பெண் குழந்தைகளாக இருந்தால் ஆண் குழந்தைக்காக அடுத்து முயற்சிசெய்ய வேண்டாம்’ என்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, பெரியாரிடம் ஒரு யோசனை கேட்கிறார் ஸ்ரீபதி சந்திரசேகர். அந்த எண்ணம் மக்களிடமிருந்து மாற பெரியார் சொன்ன யோசனைதான், பெண்களுக்கு 50 சதவீத வேலை வாய்ப்பு, ஆண்களுக்கு 50 சதவீத வேலை வாய்ப்பு. அந்த நேர்காணலின் ஒரு பகுதி இது:

பெரியார்: இப்ப ஆம்பளையெல்லாம் உத்தியோகம் பாக்கறாங்க; பொம்பளைங்க எல்லாம் வீட்லே இருக்காங்க. அதனாலேயே நமக்கு ஆம்பிளைப் புள்ளை ஒண்ணு வேணுமின்னு தோணுது; அவன் சம்பாதிக்கிறான்னு தோணுது. அதனாலே நாம் ‘ஈக்வலைஸ்’ பண்ணிட்டா உத்தியோகத்தை ஆளுக்குப் பாதின்னு?

அமைச்சர்: அப்போ, ஆம்பிளைங்க கொஞ்சம் ‘அப்போஸ்’ பண்ணுவாங்களே, எதிர்ப்பாங்களே?

பெரியார்: ஏன்? எப்படி ‘அப்போஸ்’ பண்ணுவாங்க? எப்படி நீங்கதான் ‘அப்போஸ்’ பண்ண முடியும்? உங்க மகளுக்கும் உங்க தங்கச்சிக்கும் உத்தியோகம் வரும்போது நீங்க ஏன் ‘அப்போஸ்’ பண்றீங்க?

அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தியது குறித்து கோபத்தில் கொதிக்கிறவர்களுக்கு, 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் சொன்ன வார்த்தைகள்தான் பதிலாக இருக்க முடியும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது நம் தங்கை, மனைவி, மகள் ஆகியோரையும் உள்ளடக்கியதுதானே? உத்தியோகம் ஏன் புருஷலட்சணமாக மட்டும் இருக்க வேண்டும்? பெண்டாட்டி லட்சணமாகவும் இருக்கட்டுமே… அதுவும்கூட ஆண்களுக்கு நல்லதுதானே!

பெண்ணின் திருமண வயது

அதே பேட்டியில், பெண்களின் திருமண வயது குறித்தும் பேசியிருந்தார் பெரியார்.

“20 வயசு வரைக்கும் அவங்க படிச்சாங்கன்னா வேலைக்கு லாயக்கு ஆகறாப்லே ஒரு படிப்பு அவங்களுக்கு வந்து சேரும். இந்த பதினெட்டுலே கொண்டுபோயிட்டா எஸ்எஸ்எல்சி பாஸ் பண்ணியும் ஃபெயில் ஆகியும் இருக்கிற நிலைமை வரும். அவங்க, புருஷனுக்கு என்னமா பாடுபட முடியும்? அவங்களுக்குத் தொழில்தான் என்ன வரும்? எனக்கென்னமோ, எவ்வளவு நாளைக்குக் கல்யாணத்தைத் தள்ளிப்போடறமோ அவ்வளவும் நல்லதுதான்; பின்னாலேயும் ரொம்ப உபயோகப்படுவாங்க அவங்க. இப்ப என்ன பண்றது? பதினெட்டுலியே கலியாணம் பண்ணினா பத்தொன்பதிலியே குடும்பப் பொம்பிளையா போயிடறா; குடும்பத்தைக் காப்பாத்தற வேலையே அவளுக்குச் சரியாப் போகுது; இருபதிலே ரெண்டு புள்ளையாகிப் போகுது... அதெல்லாம் இல்லாம இருக்கணும்னா ஒரு 20, 22 வயதாவது இருக்கணும்.”

பெண்ணின் திருமண வயதை 15-லிருந்து 18 ஆக உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்ட நாளிலேயே 20-க்கும் அதிகமாக நிர்ணயிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் பெரியார். 150 ஆண்டுகளுக்கு முன்பு, ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பெண்களின் திருமண வயதை 10 ஆக நிர்ணயிப்பதற்கே ஒரு இயக்கத்தை நடத்த வேண்டியிருந்தது. 20 வயதுக்கும் மேல் திருமண வயதை நிர்ணயிக்க வேண்டும் என்று எழுபதுகளிலேயே பெரியார் பேசினாலும் அதற்குப் பிறகும் 50 ஆண்டுகள் கடந்துதான் அந்த நிலையை எட்டியிருக்கிறோம். இதுபோன்ற காரணங்களால்தான் அவரது பிறந்தநாளில் மட்டுமல்லாமல் எல்லா நாள்களிலும் பெரியார் நமக்குத் தேவைப்படுகிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in