பேசு பெண்ணே - 14: ஒருதலை கேலி

பேசு பெண்ணே - 14: ஒருதலை கேலி
Updated on
2 min read

அந்நியோன்யமான தம்பதி என்று ஊர் முழுவதும் பேர்பெற்றவர்கள் அவர்கள். ஆனால், மனைவி பெயரைச் சொல்லி கணவன் அழைத்துப் பார்த்ததில்லை. அவ்வளவு மரியாதையா? இல்லை. பேரக் குழந்தைகள் பிறந்த பின்பும் அந்தக் கணவன் தன் மனைவியை எல்லார் முன்பும் இப்படித்தான் அழைப்பார்:

“ஏய்ய்ய்ய்ய்ய்!”

“ஏண்டி”

“இந்தா கழுதை”

“அடியேய் குந்தாணி”

அன்பும் உரிமையும் மிகும் இடத்தில் இதெல்லாம் ஒரு பிழையா என்கிறீர்களா? பதிலுக்கு மனைவியும் அப்படி அழைத்தால் அக்கருத்தை ஏற்கலாம். ஆனால் “என்னங்க”, “இந்தாங்க” என்பதைத் தாண்டி அந்தப் பெண்மணி வேறெதையும் நினைத்துகூடப் பார்க்க முடியாது.

அவருக்கு அடுத்த தலைமுறைப் பெண்களும் கணவன் பெயரைச் சொல்லாமல் ‘என்னங்க; என்பதும், குழந்தைகளின் பெயரைச் சொல்லி ‘அவங்கப்பா இவங்கப்பா’ என்று மரியாதையுடன் விளிப்பதும் பண்பாடாக இருக்க ஆண்கள் மட்டும் ‘ஏய் ஊய்’ என்று மனைவியரை அதட்டுகிறார்கள்.

குழந்தைகளுக்கு இது நல்ல முன்னுதாரணம் இல்லையே, திருத்திக் கொள்ளக் கூடாதா என்று யாரேனும் சொல்லப் போனால் ஆண்களை முந்திக்கொண்டு பெண்களே சண்டைக்கு வருவார்கள் என்பதுதான் வேடிக்கை.

படித்திருந்தாலும் பெண்ணடிமைத்தனத்தைக் கலாச்சாரம் என்றும் பண்பாடு என்றும் போற்றிவரும் பெண்கள் பெரும்பாலும் பொருளாதாரச் சிக்கல் ஏதுமின்றி, தன்னளவில் வாழ்க்கையில் பெரிய போராட்டங்கள் ஏதும் கண்டிராதவர்கள். நிறைய பேச வேண்டியிருப்பதும் அவர்களிடம்தான்.

கேவலமாகப் பேசுவது ஜாலியா?

ஆண்கள் இப்படிப் பேசுவதை விமர்சித்தால், “எல்லாத்துக்கும் முறைச்சிக்கிட்டே இருந்தா எப்படி?” என்று கிச்சுகிச்சு மூட்டும் ஆண்களை நாம் அவ்வளவு எளிதில் திருப்பி கேலி செய்துவிட முடியாது. இந்த ஜாலி எல்லாம் கண்டிப்பாக ஒருதலைபட்சமானது. அது மட்டுமல்ல. “ஆண் தனக்குப் பிடித்த பெண்ணைத்தான் கேலி செய்வான்” என்கிற மிகக் கோணலான பார்வையின் மூலம் பெண்கள் இழிசொல்லையும் அவமானங்களையும் புறக்கணிக்க மட்டுமல்ல; பெருமையாகக் கருதும் அவலநிலை உருவாகிறது. ஆனால், எல்லாப் பெண்களும் எப்போதும் அப்படி இல்லை. நீறுபூத்த நெருப்பாகப் பெண்களுக்குள் சுயமரியாதை கனன்று கொண்டே இருப்பதை ஆண்கள் உணர மறுக்கிறார்கள்.

தலைநிமிரும் சுயமரியாதை

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் 100 கிலோமீட்டர் பயணித்து வேலைக்குச் செல்லும் தன் மனைவி பாத்திரங்களைக் கழுவாமல் சென்று விடுகிறார் என்று புகார் கூறியது அதிகக் கவனம் பெறவில்லை. மாறாக, அதிகம் படிக்காத கணவனை கேலியாகப் பேசிய ஒரு பெண்ணைச் சமூக வலைத் தளங்களில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே வறுத்தெடுத்தார்கள். கணவனோ மனைவியோ பொதுவில் யார் மற்றொருவரை இழித்துப் பேசுவதும் தவறுதான். ஆனால், பொதுப்புத்தி எப்போதும் ஆணுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

நண்பர்களோ சக ஆண்களோ செய்யும் பகடியில் துவளாத ஆண் மனம் ஒரு பெண் செய்துவிட்டால் மட்டும் சிலிர்த்து எழுவதன் பின்னணி என்ன? என் மனைவிக்குச் சமையலையும் வீட்டையும் விட்டால் வெளியுலகமே தெரியாது என்று ஆண் சொல்வது பெருமையாகவும், அவருக்கு விவரம் பத்தாது என்று பெண் சொல்வது இழுக்காகவும் பார்க்கப்படுவது ஏன்?

இந்த இரட்டை நிலைப்பாடு ஒழிய வேண்டுமானால் முதலில் பெண் ஏன் இந்நிலைக்கு ஆளானாள் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமல்லவா? காலத்தை வென்ற பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்கிற நூலில் ஆணுக்குப் பெண் அடிமையாக்கப்பட்ட நெடிய வரலாற்றையும் பெண் விடுதலைக்கான வழிமுறை களையும் எடுத்துரைக்கிறார். அவரது பிறந்தநாளும் சமூகநீதி நாளுமான செப்டம்பர் 17-ஐ பெண் விடுதலைக்கான சீரிய செயல்பாட்டு நாளாகவும் கருதி அவரது எழுத்துக்களை வாசித்தால் தெளிவு பெறலாம்.

(தொடர்ந்து பேசுவோம்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: deepa.j.joseph@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in