முகம் நூறு: ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டவர் இன்று ஊருக்கே வழிகாட்டி
நாமக்கல்லில் உள்ள அந்த அலுவலகத்தில் திரளான பெண்கள் விவரங்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர். ஹெச்ஐவி பாசிட்டிவ் நபர்களில் ஏஆர்டி கூட்டு சிகிச்சைக்கான தேதிகள், ஆலோசனை வழங்க வேண்டியவர்களின் பட்டியல் அவர்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டன. டிசம்பர் முதல் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனையில் இருந்தார் கெளசல்யா. இவர், 19 ஆண்டுகளுக்கு முன் ஹெச்ஐவி பாசிட்டிவ் நபர் என்று கண்டறியப்பட்டவர். தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று, ஹெச்ஐவி பாசிட்டிவ் நபர்களைச் சந்தித்து நம்பிக்கையை விதைத்து, ஆலோசனைகளை வழங்கிவருகிறார். பத்து களப் பணியாளர்களுடன் ஹெச்ஐவி தொற்று டையோர் கூட்டமைப்பை நடத்திவருகிறார்.
“வாழ்க்கையில் சில நேரங்களில் யாருக்கும் நிகழாத ஒன்று, நமக்கு மட்டும் ஏன் நடக்குது என்ற கேள்வி எழும். பதில் தெரியாத அந்தக் கேள்வியைப் புன்னகையுடன் கடந்துவிட்டு, விதியை நோகாமல் நம்மைப் போன்றவர்களைத் தேற்றத் தொடங்கினால், பயணம் இனிதாகும். அதைத்தான் நான் செய்கிறேன்” என்று தெளிவாகத் தொடங்குகிறார் கெளசல்யா.
புரட்டிப் போட்ட வாழ்க்கை
நாமக்கல் அருகே தெத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கௌசல்யா. 1985-ம் ஆண்டு காக்காவேரியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுந்தரத்துடன் திருமணம் நடந்தது. மகள், மகனுடன் அழகாகக் கடந்தது வாழ்க்கை. 1995-ம் ஆண்டு லாரி ஓட்டுநர்களிடையே எய்ட்ஸ் நோய் இருக்கலாம் என்ற செய்தி பரவியது. வட இந்தியாவுக்குச் சரக்கை ஏற்றிச் சென்ற கணவர், உடனே திரும்பினார். சேலத்தில் குடும்ப மருத்துவரிடம் பரிசோதனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு எய்ட்ஸ் உறுதி செய்யப்பட, வாழ்க்கையே இருண்டுபோனது போல உணர்ந்தார் கௌசல்யா. விரக்தியின் விளிம்பில் தற்கொலை என்னும் தவறான முடிவை நோக்கிச் சென்றிருக்கிறார்.
அழுகையும் பயமும்
“எய்ட்ஸ், ஹெச்ஐவி கிருமி குறித்து எந்த விழிப்புணர்வும் எனக்கு அப்போது இல்லை. இந்த வியாதியால் அருகிலுள்ள கிராமத்தில் ஒரு குடும்பமே தற்கொலை செய்ததைக் கேள்விப்பட்டேன். இந்த ஊர், உலகம் நம்மை எப்படி நடத்துமோன்னு பயந்தேன். நாமளும் தற்கொலை செய்துக்கலாம்னு என் வீட்டுக்காரர்கிட்டே சொன்னேன். குழந்தைகளைத் தவிக்க விட்டுட்டுப் போகக் கூடாதுன்னு சொல்லி எனக்கு ஆறுதல் சொன்னார்” என்று சொல்லும் கௌசல்யா, அத்தனை துயரிலும் தன்னைத் தேற்றிய கணவரை மீட்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
கேரள மருத்துவரிடம் மருந்து வாங்கிச் சாப்பிடவைத்தார். தன் கணவருக்கு வந்திருக்கும் நோய் குறித்து யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவரது உடல்நிலை மோசமாகி மருத்துவமனைக்குச் சென்றபோது, கௌசல்யாவையும் பரிசோதனை செய்து கொள்ளச் சொன்னார்கள். அவர் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் கௌசல்யாவுக்கும் ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தது.
“அவ்ளோ நாளா எங்களை மதிச்ச சனங்க, எய்ட்ஸ்னு தெரிஞ்சதும் எங்களை ஒதுக்கிவச்சிட்டாங்க. என் வீட்டுக்காரரோட உடலை அடக்கம் செய்யறதுக்குக்கூட யாரும் உதவிக்கு வரலை” என்று வருத்தத் தோடு சொல்கிறார் கெளசல்யா.
சேமிப்பு அனைத்தையும் கணவரின் சிகிச்சைக்காகச் செலவிட்டு மிகவும் சோர்ந்துபோனவர், ஒரு போலி சித்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, மிகவும் கஷ்டப்பட்டார். ஹெச்ஐவி தொற்றுடையோருக்கு வரும் சந்தர்ப்பவாத நோய்களான அழுகையும் பயமும் ஒன்றரை ஆண்டுகள் இவரைத் துரத்தியிருக்கின்றன. ஆனால் குழந்தைகளைக் காப்பாற்றுவதற் காக உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் கெளசல்யாவைக் காப்பாற்றியது.
அனுபவமே பாடம்
‘தமிழ்நாடு நெட்வொர்க் ஆஃப் பாசிட்டிவ் பீப்பிள்’ என்ற அமைப்பின் தலைவர் ராமபாண்டியன் பேச்சை ஒரு நிகழ்ச்சியில் கேட்டு, தெளிவு பெற்றார் கௌசல்யா. சத்தான உணவையும் சரியான மருந்தையும் உட்கொண்டால், சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்பதையும் அறிந்துகொண்டார். அன்றிலிருந்து இன்று வரை கடுகளவும் சிகிச்சை முறையில் பிசகவில்லை. தன் அனுபவங்களையே மற்றவர்களைத் தேற்றுவதற்கான மருந்தாகப் பயன்படுத்திவருகிறார். தனது குழுவினரோடு சேர்ந்து சுமார் இரண்டாயிரம் பேரைச் சந்தித்து நம்பிக்கையும் ஊக்கமும் அளித்திருக்கிறார்.
“தேவைப்பட்ட நேரத்தில் விழிப்புணர்வு இல்லாமல் நான் பட்ட துன்பத்தை யாரும் அனுபவிக்கக் கூடாது. ஒருவரின் அனுபவம் மற்றவர்களுக்குப் பாடம். ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. என் வாழ்க்கை புதிர் போட்ட போது, அதற்கான விடையாக இந்தப் பயணத்தைத் தேர்ந்தெடுத்தேன். இன்னும் நான் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்” என்று உற்சாகமாக விடைகொடுக்கிறார் கெளசல்யா.
