Last Updated : 27 Nov, 2016 01:03 PM

 

Published : 27 Nov 2016 01:03 PM
Last Updated : 27 Nov 2016 01:03 PM

பருவத்தே பணம் செய்: நாணயமாக வாங்குவது நல்லது

தங்க நகை முதலீடு லாபம் தராது, ஆனால் தங்கம் நல்ல முதலீடுதான் என்று சொன்னது உங்களைக் குழப்பியிருக்கலாம். ஆனால், உண்மை அதுதான். நாம் தங்கத்தை நகையாக வாங்கும்போது எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படும் என்பதைப் பார்த்தோம். அதனால் நகையாக வாங்கும் தங்கம் லாபம் தருவதில்லை. அப்படியானால் தங்கத்தை வேறு எப்படி வாங்குவது?

நாணயங்களாகவும் பிஸ்கட்களாகவும் வாங்கலாம். தங்க பிஸ்கட், தங்க நாணயம் என்று சொன்னதும் அது பணக்காரர்களுக்கான முதலீடு என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. நாணயமும் பிஸ்கட்டும் சிறிய அளவில்கூட கிடைக்கின்றன.

நாணயமாக வாங்குவதில் என்ன லாபம்?

1. நகையாக இருந்தாலும் நாணயமாக இருந்தாலும் வாங்கும்போது ஒரே விலைதான். ஆனால், நாணயமாகவும் பிஸ்கட்டாகவும் வாங்கினால் நாம் கொடுக்கும் மொத்தப் பணத்துக்கும் ஈடாகத் தங்கத்தைப் பெற முடியும். இதில் செய்கூலி, சேதாரம் போன்ற எந்த இழப்பும் வாங்குபவருக்கு ஏற்படாது. நாம் ஐந்து கிராம் நாணயம் வாங்க வேண்டுமானால், ஐந்து கிராம் தங்கத்துக்கான விலையைக் கொடுத்தால் போதும்.

2. தங்க நாணயத்தை விற்கும்போது, பழைய தங்கத்துக்கான தனி விலையோ அல்லது பயன்படுத்தியதால் ஏற்படும் இழப்பு பற்றியோ கவலைப்படத் தேவையில்லை.

3. சிறுகச் சிறுகச் சேர்த்து வாங்கிக்கொள்ளலாம். நகை என்றால் கடைகளில் மட்டும்தான் கிடைக்கும். ஆனால், நாணயங்களை வங்கிகளில்கூட வாங்கலாம்.

4. சிறுகச் சிறுக சேமிப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் நாணயங்கள் நல்ல வழி. நகையாக வாங்க வேண்டுமென்றால் பெரிய தொகை தேவைப்படும். சிறு தொகையைக் கொண்டு நாணயங்களாகச் சேமிக்கலாம்.

5. நாணயங்களாக வாங்கி வைத்துக்கொண்டால் நகையாக மாற்ற வேண்டிய சூழல் வரும்போது, அன்றைய தங்கத்தின் விலைக்கு நகையாக மாற்றிக்கொள்ளலாம். பணம் கிடைக்கும்போது நகையாக வாங்கி வைத்து, அதன்பிறகு கல்யாண நேரத்தில் டிசைன் பழசாகிவிட்டது என்று மாற்றும்போது ஏற்படும் இழப்பை இதன்மூலம் தவிர்க்கலாம்.

கவனிக்க வேண்டியவை

சரி, இதில் ஆபத்து எதுவும் இல்லையா? இருக்கிறது. நாணயமாகவோ பிஸ்கட்டாகவோ வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

1. எங்கு வாங்கினோமோ அந்தக் கடையிலேயேதான் விற்க முடியும். ஏனென்றால் தங்கத்தின் தரம் கடைக்குக் கடை மாறுபடக் கூடியது. அதனால், ஒரு கடையில் வாங்கிய நாணயத்தை இன்னொரு கடையில் மாற்றிக்கொள்வதில்லை. நாணயமாக வாங்கும்போதே, மாற்றுவதற்கு என்ன வழி என்பதையும் யோசித்துவிட்டு வாங்குங்கள். மாற்ற முடியாமல் போகாது. ஆனால், நாம் நினைக்கும் வகையில் எளிதாக மாற்றும் வழி இருக்கிறதா என்பதை ஆராய்ந்து முடிவெடுங்கள்.

2. வங்கிகளில் வாங்கும் தங்க நாணயங்களை, நகைக்கடைகளில் மாற்ற மாட்டார்கள். சரி, நாணயங்களை அழித்து நகைகளாகச் செய்துகொள்ளலாம் என்று நினைத்தால் அதிலும் தங்கத்தின் மாற்று மாறுபடுகிறது. நகையாகச் செய்ய வேண்டுமானால், கூடுதலாகத் தங்கம் சேர்க்க வேண்டும் என்று சொல்லலாம். அதனால், வெறும் முதலீடாக நாணயங்களாக வாங்கி வைப்போம். நல்ல விலை வரும்போது விற்றுப் பணமாக்கிவிடலாம் என்று நினைத்தால் மட்டும் நாணயமாகவோ பிஸ்கட்டாகவோ வாங்குவது சிறந்தது.

3. என்னதான் முதலீடு, பணம் முக்கியம் என்றெல்லாம் சொன்னாலும் கையில் தங்கத்தை வைத்துக்கொண்டு நகையாகப் போட முடியவில்லை என்று நினைப்பவர்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும். வாங்கிய பிறகு வருந்தக் கூடாது.

நகையாக வாங்கி, நஷ்டப்படத் தயாரில்லை; நாணயமாக வாங்கி, மாற்ற முடியாமல் தவிக்கவும் தயாரில்லை. ஆனால், தங்க முதலீட்டில் கிடைக்கும் லாபத்தை அனுபவிக்க வேண்டும் என்கிறீர்களா? உங்களுக்கான முதலீட்டு வாய்ப்புதான் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்.

தங்கத்தில் முதலீடு செய்வதற்கு நிகரான முதலீட்டுத் திட்டம் இது. நிஜத் தங்கம் நம் கையில் கிடைக்காது. ஆனால், ஒவ்வொரு கிராமுக்கான பணத்தைச் செலுத்தி முதலீட்டைத் தொடர்ந்துகொண்டே இருக்கலாம். நம் கணக்கில் கிராம் கிராமாக உயர்ந்துகொண்டே போகும். எப்போது தங்கம் தேவையோ அப்போது கணக்கை முடித்து, பணத்தை எடுத்துத் தங்கம் வாங்கிக்கொள்ளலாம்.

இந்த முதலீட்டில் நம் கணக்கில் ஒவ்வொரு கிராமும் ஒரு யூனிட்டாக வரவு வைக்கப்படும். ஒரு கிராம் அளவில்தான் நாம் முதலீடு செய்ய முடியும். எந்தச் சேதாரமும் இல்லாத முதலீட்டுத் திட்டம் என்பதால் எளிதான வலிமையான முதலீடாக இதைச் சொல்லலாம்.

இந்த முதலீட்டுக்கு நமக்கு டீமேட் கணக்கு இருக்க வேண்டும். இந்தக் கணக்கின் மூலமே நாம் கோல்ட் டிரேடட் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும். அது என்ன டீமேட் கணக்கு? நாம் முதலீட்டின் அடுத்த படிக்குச் செல்ல வேண்டிய நேரம் இதுதான். அடுத்த வாரம் பார்க்கலாம்.

(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x