

“பையன் ரொம்ப நல்ல பையன். பொண்ணுங்களைத் தலை நிமிர்ந்துகூடப் பார்க்க மாட்டான்.”
“எங்க பாஸ் படு சுத்தமான கேரக்டர். டீம்ல பொண்ணுங்களையே வேலைக்கு எடுக்க மாட்டார்.”
“என் மகனுக்குப் பொண்ணுங்கன்னாலே அலர்ஜி. இந்தக் காலத்துல இப்படி ஒழுக்கமான பையனைப் பார்க்க முடியுமா?”
- மேற்கண்ட வாக்கியங்கள் இன்றளவும் ஓர் ஆணின் ஒழுக்கத்துக்குச் சான்றிதழ் தரவும் அவனைப் பெருமிதப்படுத்தவும் பயன்பட்டு வருகின்றன.
மது மாது
“அவனா? மது, மாது, சூது என்று சகல பலவீனங்களும் நிறைந்தவன்.”
“மனிதனுக்கு அழிவு தருவது மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை.”
- என்று அழிவு தரும் அஃறிணைப் பொருள் களோடு உயிருள்ள பெண்ணையும் சேர்க்கும் தத்துவங்களையும் நாம் அறிந்திருக்கிறோம். நமது திரைப்படங்களிலோ சொல்லவே வேண்டாம்.
“ஃப்ரெண்டா ஃபிகரான்னு முடிவு பண்ணுடா.”
“பொண்ணுங்களைத் தேடி நாம போகக் கூடாதுடா, அவங்கதான் நம்மைத் தேடி வரணும்!”
“போயும் போயும் ஒரு பொண்ணுக்காக…”
“ஆஃப்டர் ஆல் ஒரு பொம்பளை….”
“இந்தப் போட்டியில நீங்க தோத்துட்டா கனகாம்பரப் பூ வெச்சு, சேலை கட்டிட்டு உட்காரணும்.”
- இது போன்ற வசனங்கள் ஒரு புறம். தன்னைத் துரத்தித்துரத்தி காதலிக்கும் பெண்ணை உதாசீனம் செய்யும் கண்ணியவான் நாயகன் ஒரு பாடலுக்குத் திரையில் வரும் பெண்ணுடன் மட்டும் உரசி உரசிப் போடும் ஆட்டங்கள் மறுபுறம். என்னதான் இவர்களின் பிரச்சினை? ஏன் இவ்வளவு குழப்பம்?
பெண் என்பவள் நுகர்வதற்கான பண்டம்; பேசிப் பழகி நட்பு பாராட்டவோ, அறிவார்ந்த உரையாடல்களை நடத்தவோ அவர்களிடம் ஒன்றுமில்லை என்கிற பிற்போக்குத்தனத்தின் வெவ்வேறு விதமான வெளிப் பாடுகளே இந்தப் ‘பெண்ணைப் பார்த்தா மண்ணைப் பார்க்கும்’ ஒழுக்கசீலர்களின் அடிப்படை லாஜிக்.
பாலின வேறுபாடற்ற நட்பு
பெண்களிடம் தாய்மை, காமம் இரண்டைத் தவிர வேறெந்த உணர்வையும் எதிர்பார்க்கத் தெரியாமல் நட்பைக் காதலுக்கான வழியாக மட்டுமே தேர்வு செய்வதனால் தான் ’பாய் பெஸ்டி’ என்பது ‘கேர்ள் பெஸ்டி’ போலல்லாமல் கேலிக்குரிய சொல்லாகிப்போனது. கல்லூரியில் படிக்கும்போது ஒரு பெண்ணுடன் நன்றாகப் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென்று பேசுவதை நிறுத்திவிட்டாலோ, தவிர்த்தாலோ உடனே புரிந்துவிடும் சக மாணவர்கள் வக்கிரத்தைக் கொட்டிக் கொக்கரித்து இருக்கிறார்கள் என்று. அப்புறம் என்ன? அவளது கண்ணைப் பார்த்து அவனால் பேச முடியாது. அதுவரை இல்லாத தேவையற்ற ஈர்ப்பும்கூட வரலாம், அழகிய நட்பு சிதையலாம்.
கேலி கிண்டல் பொறுக்க முடியாமல் நண்பனைக் கடிந்துகொள்ளும் ஆண் கடுமையாகச் சாடப்படு வான். “போயும் போயும் ஒரு பொண்ணுக்காக….” என்று ஒலிக்கும் ஆண்களின் குழு மனப்பான்மை அச்சுறுத்தக்கூடியது. பெண்கள் மீதான இந்த இழிவான மதிப்பீட்டின் நீட்சியாகவே திருநங்கைகள் மீதும் பால்புதுமையினர் மீதும் காழ்ப்பும் வெறுப்பும் தொடர்கின்றன. ஆண் தன்மையினின்று மாறுபட்ட எந்தப் பாலினமும் இழிவு செய்யப்பட வேண்டிய ஒன்று என்கிற எண்ணம் ஆதிக்கத்தின் உச்சம்.
குடும்பத்தின் பங்கு
ஆனால் இந்தக் கூச்சம், தயக்கம், பெண்ணுடன் நட்பு என்பது இழிவு என்கிற எண்ணங்கள் எல்லாமே நம் குடும்ப அமைப்பில் இருந்துதான் பிறக்கின்றன. மனைவியின் ஆலோசனையையும் அறிவையும் மதிக்கும் ஆணுக்குப் ‘பொண்டாட்டிதாசன்’ என்று அழைப்பது மட்டுமல்ல, கணவனும் மனைவியும் குடும்பத்தில் மற்றவர் முன்னிலையில் அன்பு பாராட்டிக்கொள்வதுகூட மிகுந்த அசூயையுடன் பார்க்கப்படுகிறது.
ஆண்மைய உலகில் சுயமரியாதையை விரும்பும் பெண்களுக்கும் பால் புதுமையினருக்கும் நட்பு மட்டுமே சிறகுகள் தருகிறது. நிபந்தனைகளற்ற நட்புகள் அனைத்துத் தரப்பினருக்கும் ஆரோக்கிய மான வெளிகளை உருவாக்கும். பெண்ணின் நட்பை இழிவாகக் கருதும் போக்கு ஆணிடமும் ‘கற்பு’க்கு இழுக்காகப் பெண்ணிடமும் விதைக்கப் படுவது பகுத்தறிவுக்குப் புறம்பானது. ஆணின் பலவீன மாக, வெறுத்து ஒதுக்க வேண்டிய விஷயமாகப் பெண்மையையும் கட்டுப்பாடற்றுத் திரிந்து அச்சப்பட வேண்டிய ஆபத்தாக ஆண்மையையும் பார்க்கும் மனப்பான்மை அழிய வேண்டும். பாலின வேறுபாடற்ற நட்புகள் மட்டுமே அதனைச் சாத்தியமாக்கும்.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: deepa.j.joseph@gmail.com