வாழ்வை மாற்றும் கதைகள்

வாழ்வை மாற்றும் கதைகள்
Updated on
2 min read

சிறந்த படைப்பு நம் வாழ்வையே மாற்றக்கூடும் என்பார்கள். அதை ஆமோதிக்கிற ரேணுகா தினகரன், கதைகளைக் கையில் எடுத்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இவர் கதைகளின் மூலம் ஒருவரது சிந்தனையோட்டத்தை, வாழ்வின் திசையை மாற்ற முடியும் என்கிறார்.

23 ஆண்டுகளாக ஆலோசகராகச் செயல்பட்டுவரும் இவர் ‘கவுன்சலிங்’ என்கிற சொல் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள எதிர்மறைத் தாக்கத்தின் விளைவால் தன்னை ‘டிரான்ஸ்ஃபர்மேஷன் தெரபிஸ்ட்’ என அழைக்கச் சொல்கிறார். “எனக்கு மனசு சரியில்லை. அதனால் கவுன்சலிங் போயிட்டு வர்றேன்னு நீங்க சொன்னா உங்களை எப்படிப் பார்ப்பாங்க? விஷயம் புரிந்தவர்கள் இயல்பா எடுத்துக்கிட்டாலும் சிலர் உங்களைத் தீவிர மனநலப் பாதிப்புக்கு ஆளானவராக நினைக்கக்கூடும் இல்லையா. அதான் இந்தப் பெயர் மாற்றம்” என விளக்கம் தருகிறார் ரேணுகா.

ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் முடித்த இவர் சிறப்புப் பயிற்சியாளர், கதை சொல்லும் தெரபி என்று பல்வேறு பயிற்சிகளை முடித்திருக்கிறார்.

எண்ணங்களின் வலிமை

ஆரம்பத்தில் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கு மட்டும் ஆலோசனை வழங்கிவந்த இவர் கடந்த பத்து ஆண்டுகளாகத் தன் ஆலோசனை எல்லையை அனைவருக்குமானதாக விஸ்தரித்துள்ளார். “இதைச் செய்யுங்கள், அதைப் பின்பற்றுங்கள் என்று யாருக்கும் நான் அறிவுரை வழங்குவதில்லை; எதையும் முன்தீர்மானத்துடன் அணுகுவதில்லை. கதைகளைச் சொல்லி அவர்களை அவர்களே சீர்தூக்கிப் பார்க்கச் சொல்வேன். இதுதான் என் அணுகுமுறை” என்கிறார் ரேணுகா.

பெரும்பாலும் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் வருகிற கிளைக்கதைகளை எடுத்துக்கொள்கிறார். “நம் எண்ணங்களுக்கு வலிமை உண்டு, ஆனால் நாம் எந்த அளவுக்கு வலிமையோடு நினைக்கிறோம் என்பதைப் பொறுத்தே அது செயல்வடிவம் பெறும். ஐரிஷ் எழுத்தாளர் ஜோசப் மர்ஃபி தன் ‘த பவர் ஆஃப் யுவர் சப்கான்ஷியஸ் மைண்ட்’ புத்தகத்திலும் இதைத்தான் குறிப்பிட்டிருப்பார். அதனால், நம் சிந்தனைகள் தெளிவுபெற்றாலே சிக்கல்கள் தீர்ந்துவிடும்” என்று சொல்லும் ரேணுகா தமிழ் எழுத்தாளர்களின் கதைகளில் இருக்கும் உளவியல் பார்வையையும் தன் தெரபிக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார். “ஜெயகாந்தனின் 90 சதவீதக் கதைகள் மனிதர்களின் உளவியலைப் புரிந்துகொள்ள உதவும். அவரது 75 சிறுகதைகளை அதிகமாகச் சொல்லியிருக்கிறேன். தவிர என்னைச் சந்திக்க வருகிற வர்களின் வாழ்க்கையும் மற்றொருவருக்குக் கதைதானே. பெயர், ஊர் உள்ளிட்ட அடையாளங்களை மறைத்து அதையும் ஒரு கதையாகச் சொல்வேன். ஒரு சிக்கலை அல்லது சூழலை ஒருவர் எப்படி எதிர்கொண்டார் அல்லது எதிர்கொள்ளத் தவறினார் என்பதும் வாழ்க்கைப் பாடம்தானே” என்கிறார் ரேணுகா.

ஏற்றுக்கொள்ளும் பக்குவம்

நாம் எவ்வளவோ நல்லவற்றைச் செய்திருந்தாலும் நம் சிறு பிசகு அல்லது கவனக்குறைவால் ஏற்படுவதைத்தான் பெரிதாகப் பேசுவார்கள். “இது மனித மனத்தின் இயல்புதான் என்பதை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். தினமும் சமையலறையே கதி எனக் கிடந்து விதவிதமாகச் சமைப்போம். ஒருநாள் இட்லியிலோ சட்னியிலோ உப்பு அதிகமாகிவிட்டால் அதை பெரும் குற்றமாகச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். குழந்தையைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டிருப்போம். குழந்தை எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டால் அவ்வளவு நாள்கள் நாம் பராமரித்தது நினைவுக்கே வராது. குழந்தை கீழே விழுந்த அந்தக் கணத்தில் அம்மாவைத்தான் கடிந்துகொள்வோம். நாம் செய்கிற வேலைக்கும் நம் இருப்புக்கும் அங்கீகாரம் இல்லாமல் போவது தான் பலரது கவலை. அதை எப்படிக் கடந்து வரலாம் என்பதைத்தான் கதைகளின் வாயிலாகச் சொல்கிறேன்” என்கிறார் அவர்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் இருப்பதால் பலதரப்பட்டவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. பெண்கள் முன்பைவிட இப்போது தெளிவாகவும் வருவதை எதிர்கொள்ளும் மனநிலையுடனும் இருப்பதாகச் சொல்கிறார். நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

“டிரான்ஸ்ஃபர்மேஷன் தெரபியில் தன்னைத் தானே ஏற்றுக்கொள்வது முக்கியம். நம் குணாதியசங்களை, திறமைகளை நாம் போற்ற வேண்டும். சொல்லப்போனால் நமக்கு நாமே காதல் கடிதம்கூட எழுதலாம். நம்மை நாம் விரும்பாவிட்டால் பிறர் எப்படி விரும்புவார்கள்? இப்படிக் கடிதம் எழுதுவதன்மூலம் நம் நிறைகளையும் குறைகளையும் பட்டியலிடலாம். நேர்மறை குணங்களை வளர்த்தெடுக்கலாம். எதிர்மறை குணங்களைக் குறைத்துக்கொள்ள முயலலாம். நம்மை நாம் புத்துணர்வோடு வெளிப்படுத்திக்கொள்வது வேறு. இயல்புக்கு மாறாக நடந்துகொள்வது வேறு. எது இயல்போ அதுவே அழகென்ற பக்குவம் வேண்டும்” என்று சொல்லும் இவர் “ஏதோவொரு கலை வடிவம் மூலம் நம்மை நாம் வெளிப்படுத்துவதும் நல்லது” என்கிறார்.

இவர் பள்ளிகள், கல்லூரிகள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றுக்குச் சென்று மன நலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். அனைத்துக்குமே உடனுக்குடன் வினையாற்றிவிடத் துடிக்கும் இந்த அவசர உலகில் மனத்தை ஆற்றுப்படுத்துவது எந்த அளவுக்கு முக்கியம் என்பதை ரேணுகாவுடனான இந்த உரையாடல் உணர்த்துகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in