அஞ்சலி: ராணியின் அஸ்தமனம்

அஞ்சலி: ராணியின் அஸ்தமனம்
Updated on
1 min read

பிரிட்டிஷ் முடியாட்சி வரலாற்றில் நீண்ட காலம் ராணியாகப் பதவி வகித்தவர் என்கிற பெருமையைப் பெற்றவர் இரண்டாம் எலிசபெத். லண்டனில் 1926இல் இவர் பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு ஆண் வாரிசு இல்லை. விவாகரத்தான அமெரிக்கப் பெண்ணை மணந்ததன்மூலம் இவருடைய பெரியப்பா மன்னராக நீடிக்கும் தகுதியை இழக்க, எலிசபெத்தின் தந்தை முடிசூடிக்கொண்டார். அவருக்குப் பிறகு எலிசபெத் ராணியாக முடிசூடப்படுவார் என்கிற பேச்சு எழுந்தபோது இவருக்குப் பத்து வயது.

இந்தியா விடுதலை பெற்று ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1952இல் எலிசபெத்தின் தந்தை இறக்க அதைத் தொடர்ந்து அப்போதைய ஏழு காமன்வெல்த் நாடுகளின் ராணியாக 1953இல் இவர் முடிசூடப்பட்டார். அதன் பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து சில நாடுகள் குடியாட்சிக்கு மாறிய போதும் இங்கிலாந்து ராணியாக இவர் நீடித்தார். தன் பதவிக் காலத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி லிஸ் ட்ரஸ் வரை 15 பிரதமர்களைப் பார்த்திருக்கிறார் எலிசபெத்.

சிறு வயதிலேயே துடிப்பும் பக்குவமும் நிறைந்தவராக இருந்தார் எலிசபெத். இரண்டாம் உலகப் போரின்போது ரேடியோ மட்டுமே பொதுத்தொடர்பு சாதனமாக இருந்தபோது தன்னைப் போன்ற சிறுவர், சிறுமியர் மத்தியில் பிபிசி ரேடியோவின் குழந்தைகள் நிகழ்ச்சி மூலம் உரையாடினார் 14 வயது எலிசபெத். 1947இல் இளவரசர் பிலிப்பை மணந்துகொண்டார். தன் வாழ்வின் வலிமையும் பிடிப்பும் என பிலிப்பைக் குறிப்பிட்ட இவர் தன் கணவரின் இறப்பு வரைக்கும் அவருடன் 74 ஆண்டு காலப் பெருவாழ்வு வாழ்ந்தவர்.

காமன்வெல்த் தலைமைப் பொறுப்பில் இருந்ததால் ஆண்டுக் கொரு முறை காமன்வெல்த் நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். 1961இல் இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகத் தன் கணவருடன் பங்கேற்றார். அந்த வருகையின்போது டெல்லி, பம்பாய், மதராஸ் மாகாணங்களைப் பார்வையிட்டார். 1919இல் பிரிட்டிஷாரால் நிகழ்த்தப்பட்ட ஜலியான்வாலா பாக் படுகொலைக்குத் தன் இந்தியச் சுற்றுப் பயணத்தின்போது அவர் வருத்தம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி ஏதும் நிகழவில்லை. பிறகு 1997இல் இந்தியா வந்த அவர், ஜலியான்வாலா பாக் படுகொலை நடந்த இடத்திற்குச் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

வெளித்தோற்றத்துக்கு அதிகாரம் நிறைந்த அரசப் பொறுப்பில் இருப்பதுபோல் இருந்தாலும் இவரது தனிப்பட்ட வாழ்க்கை சோகங்கள் நிறைந்தது. தன் மூன்று மகன்களின் மண வாழ்க்கை முறிவு, மருமகளான இளவரசி டயானாவின் மரணம் என்று தொடர் இழப்புகளை எதிர்கொண்டார். மக்களாட்சிக் காலத்திலும் முடியாட்சி வேண்டுமா என்பது போன்ற விவாதங்களையும் விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டார். செப்டம்பர் 8 அன்று 96 வயதில் மரணமடைந்த ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உலகம் முழுவதும் இருந்தும் மக்களும் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in