

ஹிஜாப் அணிந்து சென்றதால் பள்ளியில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட கர்நாடக மாணவிகள் சார்பாக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணை சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. மாணவியர் சீருடையை மறுக்க வில்லை, சீருடையுடன் சேர்த்து ஹிஜாபையும் அணிய அனுமதி கோருகிறார்கள் என மாணவியர் தரப்பில் சொல்லப்பட்டது. அது தொடர்பான விவாதத்தில் நீதிபதிகள் ஹேம்ந்த் குப்தா, சுதான்ஷு தூலியா அடங்கிய அமர்வு, “மாணவியருக்கு ஹிஜாப் அணிய உரிமை உள்ளது. ஆனால், அதைப் பள்ளிக்கு அணிந்துவரலாமா?” எனக் கேள்வி எழுப்பியது. “அரசு சார்ந்த நிறுவனத்தில் மத அடையாளத்துடன் வருவது சரியா? இந்தியா மதச்சார்பற்ற நாடு என அரசமைப்புச் சட்டம் சொல்கிறது” எனவும் நீதிபதிகள் சார்பாகக் குறிப்பிடப்பட்டது.
சீருடைக்கு மேலே அணிகிற ஆடைக்காக மாணவியரின் கல்வி உரிமையைத் தடுப்பது சரியா என மாணவியர் தரப்பு வழக்கறிஞர் கேள்வியெழுப்பியபோது, “ஆடை அணிவது உரிமை என்றால் ஆடை அணியாமல் இருப்பதும் உரிமைதானா” என்று நீதிபதிகள் கேட்க, அதற்குப் பல தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
தலைமைப் பொறுப்பு
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 47 வயது லிஸ் ட்ரஸ் அந்நாட்டுப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாதாரச் சரிவு, பொது சுகாதரத் துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கம், வரிச்சுமை, முதியோர் நலன் போன்றவற்றைச் சமாளிக்க லிஸ் ட்ரஸ் முன்வைத்த திட்டங்களும் வாக்கெடுப்பில் இவர் வெற்றிபெற காரணமாக அமைந்தன.
லண்டனில் 1975இல் பிறந்த இவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். 1996இல் கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்தார். கல்லூரி நாட்களில் மாணவர் அமைப்புகளில் இணைந்து செயல்பட்டார். அப்போது முடியாட்சிக்கு எதிராகவும் குரல்கொடுத்தார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி, தோல்விகளைச் சந்தித்துப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2021 முதல் இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றிவந்தார். லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் சுவெல்லா பிரேவர்மன் உள்துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய அம்மா கோவாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண் என்பதால் பிரேவர்மன்னுக்கு இந்தியாவிலிருந்து வாழ்த்துகள் குவிந்தன.