

“ஓ... ரெண்டாவது கல்யாணமா?” இப்படியான இளக்காரமான கேள்விகளை நாமும் கேட்டிருக்கலாம். பிரியாவும் நிறைய கேட்டுவிட்டாள். பிரியாவுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 29 வயது. அவருடைய குழந்தைக்கு ஆறு வயது. குழந்தை பிறப்பதற்கு முன்பே மூளையில் கட்டி வந்து பிரியாவின் கணவன் இறந்துவிட்டார்.
பிரியாவைப் பார்த்து வருத்தப்பட்டவர்கள்கூட பின்னர், ராசி இல்லாதவள் என்று சொன்னார்கள். மாமியார் வீட்டுடன் இருந்த உறவு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அற்றுப்போனது. பிறகு அரசுத் தேர்வுகளை எழுதி, இளநிலை அலுவலராக வேலை கிடைத்ததால் கவுரவமும், ஓரளவு நிம்மதியும் கிடைத்தன.
இறப்புக்குப் பிறகும் வாழ்க்கை
மாப்பிள்ளை பார்க்கத் தாமதமானதற்கு முதல் காரணமே பிரியாதான். குழந்தைக்காகத் திருமணமே வேண்டாம் என்றுதான் நினைத்தார். ஆனால் அதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. இடையில் வந்த உறவான கணவன் ஓராண்டுக்குள் இறந்த பின்னர், மீதியிருக்கும் ஆண்டுகளைத் தனியாக வாழ்வதற்குப் போதுமான காரணம் எதுவும் இல்லை. சரியான நபர் அமைந்தால், வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும் என்பதை உணர்ந்தார்.
ஆனால் ஏதோ செய்யாத ஒரு குற்றத்தைச் செய்தது போன்ற குற்ற உணர்வு பிரியாவைத் தடுத்தது. எப்படி யோசித்தாலும் அவர் மேல் குற்றமில்லை. மகிழ்ச்சியாக இருப்பதுதான் அவருக்கும் குழந்தைக்கும் ஆரோக்கியமானது என்பதை உணர ஆரம்பித்துவிட்டார்.
யாராவது, “ஓ... ரெண்டாவது கல்யாணமா?” என்று கேட்கும்போது, சட்டை செய்வதில்லை. அவருடைய மேலதிகாரி கல்பனா, “நல்ல வாழ்க்கை பெண்களின் கையில்தான் உள்ளது. அடுத்தவர்கள் நன்றாக செய்து வைக்கவோ, கெடுக்கவோ அது ஒன்றும் பண்டமில்லை” என்று சொன்னது பிரியாவுக்கும் சரியான்றே தோன்றியது. நம்பிக்கையோடு தன் மகளையும் தயார்படுத்திவிட்டார்.
நம் சமூகத்தில் இள வயது பெண்ணின் கணவன் அகால மரணமடைந்துவிட்டால், “பாவம்... யாராவது வாழ்க்கை தரட்டுமே” என்ற பரிதாபம் மட்டுமே இருக்கிறது. இரண்டாவது திருமணத்தை அனுதாபத்தாலோ, பெரிய மனதாலோ போடப்படும் பிச்சை என்று பார்க்கும் பார்வை அருவருப்புக்குரியது. ஆனால் ஒரு மனைவி இறந்துவிட்டால், அவள் இறந்த நாளிலிருந்தே அடுத்த திருமணத்தை யோசிக்கும் சமூகம்தான் நம்முடையது. விதிவிலக்காகத்தான் ஆண்கள் மறுமணம் செய்யாமல் வாழ்கிறார்கள்.
வண்ணங்கள் இல்லாத உலகம்
பெண் ஒன்றும் பண்டமல்ல. திருமணம் நடந்துவிட்டாலே, விலை போன பண்டமாகப் பார்க்கப்படும் பார்வைதான் இரண்டாவது திருமணம் பற்றிய பார்வையும். இப்படிப் பார்க்கும், பேசும் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் தங்களையும் தங்கள் தாய், சகோதரி, மகள், இணை என்று எல்லோரையும் பண்டமாகக் கருதும் மனத்தடையிலிருந்து வெளிவர வேண்டும்.
1921-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 497 பேர், 1 – 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 11,142 பேர், 5 - 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 85,032 பேர் விதவைகள் என்று தெரியவந்தது. இதன் மூலம் அந்தக் காலத்தில் கணவன் இறந்துவிட்ட பெண்களின் எண்ணிக்கையையும், வாழ்நாள் முழுவதும் அவலமான வாழ்க்கையை வாழவேண்டிய நிலையையும் புரிந்துகொள்ள முடிகிறது.
பள்ளிக்குச் செல்ல முடியாது, விளையாட முடியாது, பொது இடங்களில் அனுமதி கிடையாது, திருமணம், விசேஷங்களில் பங்கேற்கக் கூடாது, வீட்டின் முன்னறைகளுக்கு வரக் கூடாது, எந்த ஆணிடமும் (தாத்தா, அப்பா, சகோதரன் தவிர) பேசக்கூடாது. பூ கிடையாது, பொட்டு கிடையாது, பெரும்பாலான சமூகங்களில் அடர் வண்ணத்தில் உடையும் கிடையாது, உணவும்கூட மறுக்கப்பட்டது. காதல் உணர்வுகள் வரக் கூடாது என்று உப்பும் இனிப்பும் இல்லாத உணவுகள் தரப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.
வழி காட்டிய சட்டத் திருத்தம்
இப்படிப்பட்ட மிகவும் பிற்போக்கான, பின்தங்கிய சமூகத்தில் 160 ஆண்டுகளுக்கு முன்னால், 1856-ம் ஆண்டு இந்து விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்டது. அதுவரை இந்துச் சட்டத்தின்படி, ஒருமுறை திருமணமான பெண் சில விதிவிலக்குகள் தவிர, மீண்டும் மறுமணம் புரிய முடியாது என்று கூறப்பட்டது. ஆனால் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் இதற்காகப் பெருமுயற்சி எடுத்து, விதவைகள் மறுமணச் சட்டத்தைக் கொண்டு வரச் செய்தார். அதனால் கடும் எதிர்ப்பைப் பெற்றார். அந்தச் சட்டம் இயற்றப்படும்வரை, இந்துப் பெண் மறுமணம் செய்ய முடியாது, அவ்வாறு மணம் புரிந்தால் அவள் கணவனின் சொத்துகளை அடைய முடியாது என்று இருந்தது.
கணவன் இறந்துவிட்டால் பெண்கள் மறுமணம் புரியலாம் என்று இந்தச் சட்டம் பரிந்துரைத்த போதும், மறுமணம் செய்தால் சொத்துரிமை மறுக்கப்பட்டதோடு, குழந்தைகள் பிறந்தால் அவர்களைச் சட்டத்துக்குப் புறம்பாகப் பெறப்பட்ட குழந்தைகள் என்ற சட்ட நிலை அப்படியே இருந்தது. டாக்டர் அம்பேத்கர் முன்னெடுத்த மிகப் பெரிய இந்து சட்ட சீர்திருத்தங்கள், 1956-ம் ஆண்டு முதல், விவாகரத்து என்பதை அவர்களது சட்டப்பூர்வமான உரிமையாக ஆக்கியது.
பெண்ணுக்குச் சொத்து, மறுமணத்தில் பிறந்த குழந்தைகள் சட்டப்பூர்வமான குழந்தைகளே என்ற மிகப் பெரிய உண்மைகளும் சட்ட அங்கீகாரமும் 1956-ம் ஆண்டு முதல் கிடைத்தன. இந்து விதவை மறுமணச் சட்டம் அவசியமற்றதாகி, காலாவதியான சட்டம் என்பதால் 1983-ம் ஆண்டு சட்டப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டன. ஆனாலும் விவாகரத்துக்குப் பின்னால் மறுமணம் செய்யலாம் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தினால்தான் உரிமைகள் வந்துசேரும்.
பிரியாவுக்கு இன்றைக்கு நிலவும் சூழலும் பிறருடைய எதிர்ப்பும் சட்டத்துக்குப் புறம்பானவையே. நடைமுறைகளில் நாம் மாற்றம் புரியாமல், சட்டம் மட்டும் வைத்துக்கொண்டிருந்தால் ஆழ்கடலில் கிடக்கும் முத்துகளைப் போலத்தான் நம் சட்டங்களும் பயனற்று கிடக்கும்.
விவாகரத்துக்கள் பெருகிவிட்டன என்று கூட்பாடு போடுவதே தவறு. ஏனெனில் விவாகரத்து உரிமையை அங்கீகரிக்கும் சட்டங்களே விவாகரத்து பெறுவதற்காகத்தான் இயற்றப்பட்டன. சட்டப்படியான காரணங்கள் இருந்தால் விவாகரத்து பெறுவது நியாயம்தான். எனவே, ஒரு பெண் விவாகரத்து பெறத் துணியும் போதும் மறுமணம் பெற முடிவுசெய்யும் போதும் குற்றவாளியைப் போல பாவிக்கும் சமூகம், குற்ற மனப்பான்மைகொண்டது. அதன் மூலம் பெண்களுக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்தி, அவர்களைச் சிரமங்களில் ஆழ்த்துகிறது. இந்த நிலையை நமது பொதுப்புத்தியில் இருந்து மாற்றவேண்டும்.
கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com