என்ஹெடுவானா: ஆதிச் சிறகுகள்

என்ஹெடுவானா: ஆதிச் சிறகுகள்
Updated on
2 min read

என்ஹெடுவானா, வரலாற்றின் வழியே நாம் அறியும் முதல் பெண், முதல் பெண் கவிஞர் என்ற சிறப்புகளை மட்டும் கொண்டவரல்ல; பதிவுசெய்யப்பட்டிருக்கும் வரலாற்றில் பெயர் கிடைக்கப்பெறும் முதல் எழுத்தாளரும் அவர்தான். ஆக, ஆதி எழுத்தாளராக நாம் அறியப்பெறுபவர் ஒரு பெண்!

நாகரிகத்தின் தொட்டில்களுள் ஒன்றாகக் கருதப்படும் மெசபடோமியாவின் சுமேரியாவில் கி.மு. 2300 வாக்கில் (அதாவது இன்றிலிருந்து சுமார் 4,300 ஆண்டுகளுக்கு முன்பு) வாழ்ந்தவர் என்ஹெடுவானா. அக்காடியன் சாம்ராஜ்யத்தின் மன்னரான சார்கோனின் மகள்தான் என்ஹெடுவானா. இளவரசி என்ற உயரிய அந்தஸ்து மட்டுமல்லாமல் ‘நானா’ என்றழைக்கப்பட்ட நிலவுக் கடவுளின் கோயிலுக்கு அர்ச்சகியாக அவரது தந்தையாலேயே நியமிக்கப்பட்டவர். இதையெல்லாம்விட அவரது கவிதை எழுதும் ஆற்றல்தான் வரலாற்றில் அவரை நாம் நினைவுகூர்வதற்குப் பிரதானமான காரணம்.

50 ஆண்டுகளுக்கு முன்பு நம்மிடையே வாழ்ந்த படைப்பாளிகளைப் பற்றிய தகவல்களே சரியாகக் கிடைக்காதபோது, கிட்டத்தட்ட 40 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த என்ஹெடுவானாவைப் பற்றி எவ்வளவு தகவல்கள் கிடைக்கும்? எனினும், இடைவெளிகளை நிரப்பி என்ஹெடுவானாவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சித்திரமாக நம்மால் தீட்டக்கூடிய அளவு சில பதிவுகள் வரலாற்றில் கிடைக்கின்றன என்பது வியப்பளிக்கும் விஷயம்! அவர் வசித்த ‘ஊர்’ என்ற நகரத்திலிருந்து இரண்டு வட்டுக்களின் துண்டுகள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டன. அந்த வட்டுக்களில் என்ஹெடுவானாவின் உருவம் செதுக்கப்பட்டதுடன் அவர் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய உருவம் சற்றே சிதைக்கவும்பட்டிருக்கிறது. ஊர் நகரத்தில் நடந்த அரசியல் குழப்பங்களின்போது என்ஹெடுவானா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். சில காலம் கழித்து மறுபடியும் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். அவர் வெளியேற்றப்பட்ட சமயத்தில் யாராவது அந்த வட்டுக்களைச் சிதைத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். எனினும் அவரது முகம், தோற்றம், உடை போன்றவை ஓரளவு தெளிவுடன் காணப்படுகின்றன. ஆக, உலகின் முதல் எழுத்தாளர், முதல் பெண் கவிஞரின் படைப்புகள் மட்டுமல்லாமல் அவரது உருவமும் நமக்குக் கிடைத்திருப்பது பெரும் அதிர்ஷ்டம்தான். கூடவே, தன் பாடல்களில் என்ஹெடுவானா தன் வாழ்க்கை பற்றிய குறிப்புகளை, தன் பெயரைக் குறிப்பிட்டே, தந்திருக்கிறார்.

என்ஹெடுவானாவின் படைப்புகள் எல்லாமே சடங்கு சார்ந்தவை. பூமி, அன்பு, வளம் போன்றவற்றுக்கான இனான்னா என்ற சுமேரியக் கடவுள், நிலவுக் கடவுள் போன்றவற்றைப் பற்றியும் சுமேரியாவின் கோயில்கள் பற்றியும் என்ஹெடுவானா அதிகம் பாடியிருக்கிறார். தன்னுடைய கவிதைகளைப் பற்றிச் சொல்லும்போது, ‘மன்னனே, யாரும் இதுவரை படைத்திராத ஒன்று இப்போது படைக்கப்பட்டிருக்கிறது’ என்று என்ஹெடுவானாவே சொல்லியிருக்கிறார். என்ஹெடுவானாவின் பாடல்கள் அவற்றின் மேன்மை காரணமாக மக்களிடையே அப்போது மிகவும் பிரபலமாக இருந்தது தெரியவருகிறது. அவரது காலத்துக்குப் பிறகு களிமண் ஏடுகளில் பதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்த பாடல்கள் சமீபக் காலத்தில் கண்டெடுக்கப் பட்டன. மேலும் தொடரும் பல கண்டெடுப்புகள் என்ஹெடுவானாவின் படைப்புகளின் எண்ணிக்கையையும் அவர் வாழ்க்கை வரலாற்றின் தகவல்களையும் அதிகப்படுத்துகின்றன.

என்ஹெடுவானாவின் படைப்புகளை மொழிபெயர்த்து, வரலாற்றுத் தகவல்களை இணைத்து வில்லியம் டபிள்யூ ஹாலோவும் ஜே.ஜே.ஏ. வான் டிஜிக்கும் வெளியிட்ட ‘தி எக்ஸாட்ல்ட்டேஷன் ஆஃப் இனான்னா’ புத்தகம் என்ஹெடுவானாவையும் அவரது படைப்புகளையும் பற்றி அறிந்துகொள்ள முக்கியமான நூல். மேலும், என்ஹெடுவானாவின் தனித்தனிப் பாடல்களை ஒன்றிணைத்து ஒரே காவியமாக ஆக்கி ‘இனான்னா – குயின் ஆஃப் ஹெவன் அண்டு எர்த்’ (1983) என்ற தலைப்பில் டயான் வோல்க்ஸ்டெய்னும் சாமுவேல் நோவா கிராமெரும் மொழிபெயர்த்த புத்தகமும் மிகவும் முக்கியமானது.

சுமேரிய மொழி ஆய்வுகளும் அகழ்வாய்வுகளும் தொடர்ந்துகொண்டி ருப்பதால் என்ஹெடுவானாவின் படைப்பு களும் அவரது வாழ்க்கைப் பதிவுகளும் மேலும் நிறைய கிடைக்கும் என்று நம்புவோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in