Published : 02 Oct 2016 12:17 PM
Last Updated : 02 Oct 2016 12:17 PM

பருவத்தே பணம் செய்: வீட்டில் உண்டியல் இருக்கிறதா?

நீங்கள் பிறந்தது சுகப் பிரசவமா? சிசேரியனா? இந்தக் கேள்வியோடுதான் சென்ற வாரக் கட்டுரையை முடித்திருந்தேன். சேமிப்புக் கட்டுரையில் சிசேரியனுக்கு என்ன தேவை என்று தோன்றலாம். இன்றைக்கு மருத்துவ மனைச் செலவுதான் மிகப் பெரிய செலவாக இருக்கிறது.

சீமந்தச் செலவுக்கு ஏற்பாடு செய்கிறார்களோ இல்லையோ, பிரசவச் செலவுக்கு ஏகப்பட்ட ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டிய சூழல்தான் நிலவுகிறது. சுகப் பிரசவமாகும் ஒரு குழந்தைப் பிறப்புக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொண்டால், அதே குழந்தை சிசேரியன் முறையில் பிறந்தால் செலவு அப்படியே இரட்டிப்பாகிவிடும். அப்படியானால் சுகப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தை, பிறக்கும்போதே பெரிய சேமிப்போடு பிறக்கிறது என்றுதானே அர்த்தம்!

மிச்சமாகும் அந்தத் தொகையைச் சேமிப்பிலோ, வேறு முதலீட்டிலோ போட்டுவைத்தால், குழந்தை கல்லூரிக்குச் செல்லும்போது கைகொடுக்கும்.

சரி, இந்த விஷயத்தின் மூலம் பிறக்கும்போதே சேமிப்பும் தொடங்கிவிடுகிறது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். எப்போது சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுப்பது? பிள்ளைகளுக்குக் காசு, பணம், துட்டு, மணி என்ற வார்த்தைகள் அறிமுகமாகும் காலத்திலேயே சேமிப்பு குறித்து கற்றுக்கொடுத்துவிட வேண்டும்.

உண்டியல் அவசியம்

முன்பெல்லாம் வீட்டுக்கு வரும் பெரியவர்கள் பலகாரம், பழங்கள் வாங்கி வந்திருந்தாலும் போகும்போது, குழந்தைகள் கையில் காசு கொடுத்துவிட்டுச் செல்வார்கள். பிள்ளைகளும் ஓடிப் போய் அம்மா கையில் அந்தக் காசைக் கொடுப்பார்கள். அம்மா ஆளுக்கோர் உண்டியல் வைத்திருப்பார். அவரவர் கொடுக்கும் காசை அவரவர் உண்டியலில் போட்டு வைப்பார். அவ்வப்போது உண்டியலை எடுத்து, எடுத்துப் பார்த்து நிறைந்திருக்குமா எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும் என்று கணக்குப் போட்டுப் பார்க்கும் அலாதி சுகம் பிள்ளைகளுக்குக் கிடைக்கும். அந்தச் சுகத்தைப் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவாவது உண்டியல் வாங்கிக் கொடுங்கள்.

எங்கள் வீட்டில் மகனுக்கு ஒன்று, மகளுக்கு ஒன்று என இரண்டு உண்டியல்கள் இருக்கின்றன. இருவருமே அதில் காசு சேர்ப்பார்கள். இந்த மாத வீட்டுக் கடன் இ.எம்.ஐ.க்கு என்ன செய்வது என்று நானும் மனைவியும் விவாதிக்கும்போது, என் மகள் ஓடிப் போய் உண்டியலை எடுத்து வந்து கொடுப்பாள். அதில் இருக்கும் சில நூறு ரூபாய் நம் தேவையைத் தீர்க்காது என்றாலும், பெற்றோருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்ற இயல்பை என் மகளுக்குள் விதைத்தது அந்த உண்டியல்தான்.

வீட்டின் சின்னச் சின்னத் தேவைகளான தீப்பெட்டி, மெழுகுவர்த்தி வாங்குவதற்கு அவளைக் கடைக்கு அனுப்பினால், தன் உண்டியலிலிருந்து காசு எடுத்துச் செல்வாள். அந்த நடையில் தனி கம்பீரம் தெரியும். அந்தக் கம்பீரத்தை அனுபவிக்கவாவது பிள்ளைகளுக்கு உண்டியல் வாங்கிக் கொடுங்கள்.

சேமிக்கவும்தான் பணம்

இதையெல்லாம்விட முக்கியமான விஷயம் பணம் என்பது செலவழிப்பதற்கான ஆயுதம் என்பது மட்டுமல்லாமல், சேமிக்கவும் பயன்படும் என்பதை உணர்ந்துகொள்வது முக்கியம். அதற்கு இளமையிலேயே சேமிக்கப் பழக்குவதுதான் வழி. அவர்கள் உழைத்துச் சம்பாதிக்கும்போது சேமிப்பைத் தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டால், அவர்களுக்குச் சேமிப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடும்.

இன்றைய சூழலில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்குக்கூட பாக்கெட் மணி கொடுக்க வேண்டியிருக்கிறது. போனில் பீட்ஸாவுக்கு ஆர்டர் கொடுக்க அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் செலவழிப்பது பற்றி நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதோடு பெற்றோருடன் ஷாப்பிங் செல்லும்போது, சூப்பர் மார்க்கெட்களில் விலையே பார்க்காமல் பொருள் வாங்குவதையும் தெரிந்துவைத்திருக்கிறார்கள். பில் கொடுக்கும் இடத்தில் பெற்றோர் ஓர் அட்டையைத் தேய்த்து, பொருளை அள்ளிக்கொண்டு வருவதையும் கவனிக்கிறார்கள். ஆக, அவர்களுக்குத் தெரிந்தது எல்லாமே செலவுகள்தான். இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை. அவர்கள் கொஞ்சமாவது சேமிப்பைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதற்காகத்தான் உண்டியல். நாமே சின்னச் சின்ன வெற்றிகளுக்குப் பரிசு கொடுக்க நினைத்தால் பணமாகக் கொடுக்கலாம். அப்போதுதான் பிள்ளைகளின் உண்டியல் நிறையும். ஓர் இலக்கு வைத்துக்கொள்ளச் சொல்லுங்கள். அந்த இலக்கை அடைந்ததும் உண்டியலைத் திறந்து, பணத்தை எண்ணிப்பார்க்கச் சொல்லுங்கள். அதோடு நீங்கள் கொஞ்சம் காசு போட்டு, ஆசைப்படும் பொருளை வாங்கிக் கொடுங்கள்.

தங்கள் உழைப்பில் கிடைத்த பொருள் என்ற சந்தோஷம் ஒரு பக்கம், ஒரு பொருள் வேண்டுமென்றால் அதற்காகக் கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என்ற யதார்த்தம் மறுபக்கம் என்று வாழ்க்கையைப் பிள்ளைகள் கற்றுக்கொள்ள இந்த உண்டியல் கைகொடுக்கும்.

இனி எந்த வீட்டுக்குச் சென்றாலும் திரும்பி வரும்போது, அங்கிருக்கும் குழந்தைகளுக்குப் பணம் கொடுத்துவிட்டு வாருங்கள். அவர்களுடைய சேமிக்கும் பழக்கத்தைத் தூண்டிவிடுங்கள். சேமிப்பவர்களாக இருந்தால் ஊக்கு வியுங்கள். பரிசு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்போது உண்டியல் வாங்கிக் கொடுங்கள்.

சிறு வயதில் நண்பனாக இருக்கும் விஷயம் ஒன்று எதிரியாக மாறும் பருவம் ஒன்று எல்லோருக்கும் இருக்குமே, அப்படி உண்டியலும் நமக்கு எதிரியாக மாறும். அது எப்படி என்றும் எந்தப் பருவத்தில் என்றும் அடுத்துச் சொல்கிறேன்.

(தொடர்ந்து சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்.
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x