

கடந்த ஆகஸ்ட் 18 அன்று வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. அதிரடி சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லாத நல்லுணர்வுத் திரைப்படம் (ஃபீல் குட்) என்று வகைப்படுத்தப்படும் ‘திருச்சிற்றம்பலம்’ மேம்போக்கான நல்லுணர்வு கேளிக்கைப் படம் என்பதைத் தாண்டியும் முக்கியத்துவம்பெறுகிறது.
படத்தின் நாயகனான திருச்சிற்றம்பலம் (தனுஷ்) தாயையும் தங்கையையும் விபத்தில் இழந்தவன். கண்ணுக்கு முன் நிகழ்ந்த அந்த விபத்தின் காரணமாக அவன் வன்முறையைக் கண்டு அஞ்சும் சுபாவம் கொண்டவனாக வளர்கிறான். தன்னுடைய நெருங்கிய தோழியை ஒருவன் இழிவான வார்த்தைகளால் அவமதிக்கும்போதுகூட அவனுடன் மோதுவதற்குப் பதிலாகத் தோழியைக் கூட்டிக்கொண்டு அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுகிறான். மிகப் பெரிய ரசிகர் படையைக் கொண்ட தனுஷ் போன்ற நட்சத்திர நடிகர் இப்படிப் பயந்த சுபாவம் கொண்டவராகக் கிட்டத்தட்ட படம் முழுக்க நடித்திருப்பதே வரவேற்கத்தக்க முன்னேற்றம். ஆண் என்றால் அதிவீர புஜபல பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும் என்னும் பிம்பத்தைத் தகர்க்க இதுபோன்ற நாயக சித்தரிப்புகள் உதவும்.
முன்னுதாரண நட்பு
திருச்சிற்றம்பலமும் அவனுடைய அண்டை வீட்டில் வசிக்கும் ஷோபனாவும் (நித்யா மேனன்) சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். இருவருக்கிடையிலான நட்பு தமிழ் சினிமாவில் இதுவரை ஆண்-பெண் நட்பு சித்தரிக்கப்பட்டுவந்த விதத்துக்கு முற்றிலும் வேறுபட்டதாகவும் நவீனச் சிந்தனைகளைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்கிறார்கள். ஆனால், அது அவமதித்தலின் எல்லையை ஒருபோதும் தொடுவதில்லை. பரஸ்பர கிண்டல்களையும் கலாய்ப்புகளையும் தாண்டி இருவருக்கும் இடையிலான நட்பும் அக்கறையும் அழகாக உணர்த்தப்பட்டுள்ளன. இந்த நட்பு தமிழ் சினிமாவில் ஆண்-பெண் நட்பைச் சித்தரிப்பதற்கு நல்ல முன்னுதாரணமாக விளங்குகிறது.
முன்னோக்கிய பயணம்
படித்த, நகரத்து உயர்தட்டுப் பெண்ணாகவும் ஆண் நண்பர்களுடன் இணைந்து பார்ட்டிகளில் கலந்துகொள்கிறவராகவும் இருக்கும் அனுஷா (ராஷி கன்னா) திருச்சிற்றம்பலத்தின் காதலை நிராகரிக்கிறார். அதோடு இருவருக்கும் இடையிலான சமூக-பொருளாதார இடைவெளியையும் சுட்டிக் காண்பிக்கிறார். தமிழ் சினிமாவின் ஆகிவந்த இலக்கணத்தின்படி ‘திமிர்பிடித்த தீய பெண்’ஆகச் சித்தரிக்கப்படக்கூடிய அனைத்து குணாதிசயங்களையும் உள்ளடக்கிய இந்தக் கதாபாத்திரம் இந்தப் படத்தில் மிகவும் கண்ணியமாகக் கையாளப்பட்டுள்ளது. அதேபோல் ‘நாம ஏன் டச்ல இருக்கணும்’ என்று இயல்பாகக் கேட்டு திருச்சிற்றம்பலத்தின் காதலை நிராகரிக்கும் கிராமத்துப் பெண்ணான ரஞ்சனியையும் (பிரியா பவானி ஷங்கர்) படம் கண்ணியமாகவே கையாண்டுள்ளது. அனுஷாவையோ ரஞ்சனியையோ திருச்சிற்றம்பலம் உள்பட யாரும் ஒரு துளியும் இழிவுசெய்வதில்லை, வசைபாடுவதில்லை. ‘அடிடா அவளை.. வெட்றா அவளை’ என்று குடித்துவிட்டு ஆடிப் பாடுவதில்லை. சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகராக உயர்ந்திருக்கும் தனுஷ் தன் திரைப்படங்களில் வெளிப்படுத்தும் பெண்கள் குறித்த அணுகுமுறையிலும் பார்வையிலும் ‘கொலவெறிடி’ காலத்திலிருந்து பல படிகள் முன்னோக்கி வந்துவிட்டதை உணர முடிகிறது.
நட்பும் புனிதமல்ல
இரண்டு பெண்களால் நிராகரிக்கப்பட்ட திருச்சிற்றம்பலம் தன் சிறுவயதுத் தோழியான ஷோபனாவையே வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறான். அதை அவளிடம் தெரிவித்த பிறகே அவள் தன்னை நீண்டகாலமாக விரும்பி வந்திருப்பதையும் சிறுவயதிலிருந்தே தன் கூடவே இருக்கும் பெண்ணின் மன உணர்வைப் புரிந்துகொள்ளாதவனாகத் தான் இருந்திருப்பதையும் உணர்கிறான். தமிழ் சினிமாவில் காதல் புனிதப்படுத்தப்பட்ட அளவுக்கு நட்பும் புனிதப்படுத்தப்பட்டுள்ளது. நண்பர்கள் காதலர்களாக ஆவதை இயல்பாகக் காண்பித்த திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆண்-பெண் நட்பு குறித்த கற்பிதங்களுக்கு வலுக்கூட்டவே ஆண் - பெண் நட்பைக் கையாண்ட பெரும்பாலான திரைப்படங்கள் பங்களித்துள்ளன. இந்தச் சூழலில் எதிர்பாலின ஈர்ப்பை முற்றிலும் தவிர்த்த நட்பே புனிதமானது என்னும் பிம்பத்தைத் தகர்க்கும் திரைப்படங்கள் வரவேண்டிய தேவையை ‘திருச்சிற்றம்பலம்’ நிறைவேற்றியுள்ளது. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு நட்பாகவே தொடர்வதும் காதலாக மாறுவதும் காதலாக இருந்து நட்பாக மாற்றமடைவதும் இரண்டில் எதுவுமாக இல்லாமல் பிரிவதும் சம்பந்தப்பட்ட நபர்களின் தேர்வு என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அனைவரும் அடைய வேண்டும். அதற்கு உதவும் வகையில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் முடிவு அமைந்துள்ளது.
வார்த்தைகளில் கவனம்
பாராட்டத்தக்க இவ்வளவு விஷயங்களைக் கொண்ட இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தாய்க்கிழவி’ என்னும் பாடல் நித்யா மேனனை நோக்கி நாயகனான தனுஷ் பாடுவதுபோல் அமைந்துள்ளது. இதைவைத்துப் படம் வெளியான பிறகு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலர் நித்யா மேனனை ‘தாய்க்கிழவி’ என்று குறிப்பிடத் தொடங்கிவிட்டார்கள். தன்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம் என்று நித்யா மேனன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ரசிகர்களும் சரி திரைக்கலைஞர்களும் சரி விளையாட்டாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில்கூட மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டிய தேவை இருப்பதையும் இது உணர்த்துகிறது.