பேசு பெண்ணே - 12: இழிசொல்லை என்ன செய்யலாம்?

பேசு பெண்ணே - 12: இழிசொல்லை என்ன செய்யலாம்?
Updated on
2 min read

“நான் நீர்ல கரைவேன் நெருப்புல உருகுவேன்… ஆனா தப்பான வார்த்தைய மட்டும் தாங்கிக்கவே மாட்டேன்!”

- தன் அழகிய பெரிய கண்களை விரித்து உருட்டி ‘புதுமைப்பெண்’ திரைப்படத்தில் ரேவதி பேசிய இந்த வசனத்தை நம்மில் பலரும் மறந்திருக்க மாட்டோம். ஆனால், அது என்ன ‘தப்பான’ வார்த்தை? அதை ஏன் பெண்ணால் மட்டும் தாங்கிக்கொள்ள முடியாமல் புழு போலத் துடிக்க வேண்டியுள்ளது?

வலியைத் தாங்கும் நுண்ணுணர்வில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அறிவியல்ரீதியாக வேறுபாடு எதுவும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஊர் சொல்லுக்கும் உறவுச் சொல்லுக்கும் அஞ்சுவது ஆண் - பெண் இருவருக்குமே பொதுவென்றாலும் வீட்டுக்குள்ளேயே சுடுசொற்களுக்கும் இழிசொற்களுக்கும் அஞ்ச வேண்டிய நிலை பெண்களுக்கு மட்டும் இருப்பது ஏன்?

அவள் அப்படித்தான்

பள்ளியில் வேதியியல் சோதனைச் சாலைகளில் உப்பைக் கண்டுபிடித்திருக் கிறீர்களா? தாமிரம் கலந்த உப்புகளை நீல நிறத்தை வைத்துப் பார்த்த மாத்திரத்தில் கண்டுகொள்ளலாம். அமோனியா உப்புகளை அவற்றின் மணம் மூலம் கண்டுபிடிக்க முடியும். வெள்ளை அல்லது நிறமற்ற உப்புகளைக் கண்டறிய பலவித சோதனைகளும் விதிகளும் உண்டு. சில அரிய உப்புகளைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாது. எந்த உப்பாக இருந்தாலும் பரிசோதனை செய்தே முடிவை வெளியிட வேண்டும் என்பது அறிவியல் பாடத்தின் விதி. ஆனால், பார்த்த மாத்திரத்தில் பெண்களின் குணநலன்களைக் கண்டுபிடித்துவிடும் அறிவியலாளர்கள் நம் சமூகத்தில் உண்டு. அணிந்திருக்கும் உடை முதல் தலை முடியின் நீளம் எனப் பலவற்றை ஒரு பெண்ணின் குணத்தைக் கண்டறிய உதவும் கருவிகளாகக் காலங்காலமாக அவர்கள் பயன்படுத்திவருகிறார்கள்.

தன்னிலை விளக்கம்

சமூக அந்தஸ்தில் எந்தப் படிநிலையில் இருந்தாலும் வீடு, பணியிடம், உறவுகள், நட்புகள் என்று எல்லா இடங்களிலும் பெண்கள் தன்னிலை விளக்கம் கொடுத்துத் தங்களை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ‘நல்ல’ பெண் என்று பெயர் வாங்குவதற்காகத் தங்கள் திறமையையும் கனவுகளையும் மூட்டைகட்டி வைக்கும் பெண்கள் ஏராளம். விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகத் தாயிடம் சிறப்பு வகுப்பு என்று பொய் சொல்லிவிட்டு அண்ணனின் கால்சட்டையைப் புத்தகப் பைக்குள் ஒளித்து எடுத்துச் சென்றிருக்கிறாள் அந்தப் பதின்வயதுச் சிறுமி. போட்டியில் வென்றுவிட வீட்டுக்குத் தெரிந்து விளக்குமாறு பிய்ந்திருக்கிறது. அடியைவிட அதிகமாக வலித்தது பெற்ற தாய் உதிர்த்த இழிசொற்கள் என்று இன்று கண்ணீர் சிந்தும் அந்தப் பெண் கொடுஞ்சொற்கள் தரும் பாதிப்பிலிருந்து மீள இன்னும் போராடிவருகிறார்.

அதிகம் பேசிவிட்டால் ‘வாயாடி’, கோபப்பட்டால் ‘அரக்கி’, அழகாக உடுத்திக்கொண்டால் ‘மேனா மினுக்கி’, ஏன் என்று கேட்டால் ‘திமிர் பிடித்தவள்’, இன்னும் பெண் தன் விருப்பம், மகிழ்ச்சி, சுயதிருப்திக்காக எதைச் செய்தாலும் அதற்குக் குத்தலாகவும் இழிவாகவும் ஒரு வார்த்தை தயாராக இருக்கும்.

வெல்வோம் சொல்லை

எப்போதும் சந்தேகப்படும் கணவனுடன் வாழும் தோழி ஒருத்திக்குக் கணவனின் வசவுச் சொற்கள் கல்யாணமான புதிதில் தற்கொலை வரை செல்லும் அளவுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்தன. அவளைத் துடிக்க வைத்துப் பார்ப்பதில் அவன் வக்கிரமான இன்பத்தைக் கண்டு கொண்டிருந்தான்.

ஒரு நாள் குடித்துவிட்டு மோசமான இழிசொல்லைப் பயன்படுத்தி அவளை அழைத்தபோது சிரித்த முகத்துடன், “கூப்டீங்களா?” என்றாள். ஆண் என்கிற அவனது வீண் அகங்காரத்தின் முகத்தில் ஓங்கி அறைந்தது அவளது சிரிப்பு. அன்றுடன் அவனது வாயும் ஓய்ந்தது. சிலவற்றை இப்படிச் சிரித்தபடி எதிர்கொள்வதன் மூலமாகவும் வேரறுக்க முடியும். வெறிபிடித்துத் துரத்தும் நாய்களுக்குப் பயந்து ஓடாமல் திரும்பி நின்று முறைப்பது போலத்தான் பெண்களும் தங்கள் மீது வீண்பழியையும் அவப்பெயர்களையும் சுமத்துபவர்களை எதிர்கொள்ள வேண்டும்.

(தொடர்ந்து பேசுவோம்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: deepa.j.joseph@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in