

ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படை உரிமைகள் சமம் என்கிறபோது சொத்து என்று வந்தால் மட்டும் பெண்ணுக்கு ஏன் அது மறுக்கப்படுகிறது என்கிற கேள்வி மேரி ராயை அந்த அநீதிக்கு எதிராகப் போராடச் செய்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சிரியன் கிறிஸ்தவக் குடும்பம் ஒன்றில் 1933இல் பிறந்தவர் மேரி ராய். இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல் திருவிதாங்கூர், கொச்சி மாகாணங்கள் தனியான வாரிசுரிமைச் சட்டத்தைக் கடைப்பிடித்தன. அதன்படி தந்தை உயில் ஏதும் எழுதிவைக்காத நிலையில் மகனுக்குத் தரும் சொத்தில் நான்கில் ஒரு பங்கு அல்லது ஐந்தாயிரம் ரூபாய் இவை இரண்டில் எது குறைவோ அதுவே மகளுக்கு வழங்கப்பட்டுவந்தது. அதன் அடிப்படையில் மேரி ராய்க்குத் தந்தையின் சொத்தில் பங்கு மறுக்கப்பட்டது.
தனக்கு மட்டுமல்லாமல் தன்னைப் போலவே குடும்பச் சொத்து மறுக்கப்படும் பெண்களுக்காக மேரி ராய் பொது நல வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில் 1986இல் வழங்கப்பட்ட தீர்ப்பு பெண்களின் சொத்துரி மையை நிலைநாட்டுவதில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் ஆணுக்கு நிகரான பங்கு உண்டு என்று வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பு, மேரி ராயின் சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த நீதி. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் தன் சகோதரனிடம் இருந்து சொத்தைப் பெற பல ஆண்டுகள் அவர் காத்திருக்க வேண்டியிருந்தது.
சொத்து தனக்குக் கிடைத்ததும் அதைத் தன் சகோதரனுக்கே திருப்பித் தந்த மேரியின் செயல், அவரது போராட்டம் சொத்துக்காக அல்ல மறுக்கப்பட்ட உரிமைக்காக என்பதை உணர்த்தியது. ஆனால், தந்தையின் வீட்டில் தனக்கு உரிமையில்லை என்று சொல்லி அந்த வீட்டை விட்டு வெளியேறும்படி சொன்னபோது ஏற்பட்ட கோபமே வழக்குத் தொடுக்க காரணம் என்று நேர்காணல் ஒன்றில் மேரி ராய் சொல்லியிருக்கிறார். இந்த வழக்கில் பெண்ணியச் செயற்பாட்டளரான இந்திரா ஜெய்சிங், மேரி ராய் சார்பில் வாதாடியது குறிப்பிடத்தக்கது.
சிறந்த கல்வியாளரான மேரி ராய் கோட்டயம் அருகில் உள்ள களத்தில்பாடி கிராமத்தில் ‘பள்ளிக்கூடம்’ என்கிற கல்வி நிறுவனத்தை 1967இல் தொடங்கினார். பிற்போக்கான கல்வித் திட்டத்திலிருந்து மாணவர்களை விடுவித்து அவர்களைச் சிந்திக்கக்கூடியவர்களாக மாற்றுவது இந்தப் பள்ளியின் நோக்கங்களில் ஒன்று. எழுத்தாளர் அருந்ததி ராய் இவருடைய மகள். மேரி ராய் செப்டம்பர் 1 அன்று கேரளத்தில் மறைந்தார்.