மாடித் தோட்டம்: நீங்களும் விவசாயி ஆகலாம்!

மாடித் தோட்டம்: நீங்களும் விவசாயி ஆகலாம்!
Updated on
2 min read

ஒவ்வொரு நாளும் நமது உணவு மேஜையில் உணவு என்ற பெயரில் உண்ணத் தகாத பொருட்களை நிறைத்துவருகிறோம். கீரை, காய்கறிகளில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள், உரங்களில் உள்ள வேதிப்பொருட்களால் ஒட்டுமொத்த உடலியக்கமும் பாதிக்கப்பட்டுவருகிறது. இதனால் பெருகிவரும் நோய்களில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். குறிப்பாக குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் பெண்களின் இந்தக் கவலையைப் போக்க மாடித் தோட்டம் ஒன்றே மாமருந்து.

“நகரங்களில் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்புவாசிகள், வீட்டில் எப்படி தோட்டம் அமைக்க முடியும் என்ற கவலை தேவையில்லை. வீட்டில் வெயில் படும் சிறு இடத்தில்கூட கீரை வகைகளைப் பயிரிடலாம். பால்கனியில் காய்கறி கூடம் அமைக்கலாம்” என்று நம்பிக்கை தருகிறார் மாடித் தோட்ட வழிகாட்டியும் இயற்கை வேளாண் ஆர்வலருமான பா.செந்தில்குமார். மாடித் தோட்டம் அமைப்பதில் உள்ள சிக்கல்களையும் தீர்வையும் அவர் விளக்குகிறார்.

எப்படி அமைக்கலாம்?

“அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் பால்கனிகளில், ஜன்னல் ஓரங்களில் என விரும்பும் இடங்களில் காய்கறித் தோட்டம் அமைக்கலாம். டைல்ஸ் தரை கறையாகிவிடும் என்ற கவலை வேண்டாம். தரைக்கு மேல் ஓரடியில் அடுக்கு அமைத்து, அதன்மேல் எடை குறைவான பைகளில் செடிகளை வளர்க்கலாம். இந்தப் பைகளில் தேங்காய் நார் கழிவு, இயற்கை உரங்கள் இட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் தோட்டம் அமைக்க முடியும். தேங்காய் நார் கழிவில் தண்ணீர் ஊற்றினால் இரண்டு, மூன்று நாட்கள்வரை ஈரப்பதம் இருக்கும். இதனால் தண்ணீரின் தேவையும் குறைகிறது. பால்கனியில், வெயில் படும் இடங்களில் சில தாவரங்களையும் வெயில்படாத இடங்களில் சில தாவரங்களையும் வளர்க்கலாம். இடம் என்பது பெரிய விஷயமே இல்லை. தேவை மனமும் நேரமும்தான்” என்கிறார் உறுதியாக.

என்ன சேமிக்கிறோம்?

மாடித் தோட்டம் அமைப்பதன் மூலம் முதலில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை செந்தில் விளக்குகிறார். “நாம் வசிக்கும் இருப்பிடத்தில் இருந்து 50 கிலோ.மீட்டருக்குள்ளாக விளைவிக்கப்படும் காய்களைச் சாப்பிடுவதன் மூலம், டாக்டரிடம் செல்வது 90 சதவீதம்வரை குறைகிறது. மாதந்தோறும் காய்களுக்காகச் செலவிடும் தொகை 30 சதவீதம்வரை குறைகிறது. சமையலின்போது தூக்கியெறியப்படும் காய்களின் கழிவுகளையே இயற்கை உரமாக மாற்றுகிறோம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறோம். சுற்றுச்சுவர்களில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் ஏசி பயன்பாடு குறைந்து, மின் கட்டணம் குறையும்” என்று பலன்களை அடுக்கிறார்.

என்ன கிடைக்கிறது?

தினமும் 10 முதல் 15 நிமிடம் மட்டும் செலவிட்டால் சுத்தமான, வேதிப்பொருள் இல்லாத காய்கறிகள், கீரைகள் கிடைக்கும். அலுவல் நேர நெருக்கடியை ஆற்றுப்படுத்த மாடித் தோட்டம் உதவும். மன அழுத்தத்தைக் குறைக்கும். நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்காக மாறும். வீணாகும் காய்கறிக் கழிவுகளில் இருந்து நல்ல இயற்கை உரம் கிடைக்கிறது.

“கலப்படமில்லாத உணவை உண்ணும் திருப்தி வேறு எதிலுமே கிடைப்பதில்லை. மாடித் தோட்டம் அமைத்து, தன் குடும்பத்துக்கு இயற்கையான காய், கீரைகளைச் சமைத்துப் பரிமாறும் ஒவ்வோர் இல்லத்தரசியும் சின்ன விவசாயிதான்!” என்கிறார் செந்தில்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in