

அண்மையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி சக்கை போடு போட்ட அமெரிக்கத் தொடர்களில் ஒன்று ப்ரிட்ஜர்டன் (Bridgerton). 19ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேயக் கனவான்கள் குறித்த கற்பனை கதை. விறுவிறுப்பான சம்பவங்களும் காதல் காட்சிகளும் நிறைந்த இத்தொடரின் சிறப்பம்சம் அரசவை மற்றும் பிரபுத்துவக் குடும்பங்களில் வெள்ளை இனத்தவர் மட்டுமல்லாமல் கறுப்பினத்தவரும் சமமாக இருப்பதாகக் காட்சிப்படுத்தியதுதான்.
ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் அடிமை வரலாற்றை எளிதில் மறக்க முடியாது. கடும் போராட்டம், மக்கள் எழுச்சி, மார்ட்டின் லூதர் கிங், ரோசா பார்க்ஸ், ஃப்ரெட்ரிக் டக்ளஸ் உள்ளிட்ட மகத்தான தலைவர்கள் நடத்திய போராட்டம் போன்றவற்றின் விளைவாகவே கறுப்பின மக்களின் விடுதலையும் சமூக உரிமைகளும் சாத்தியப்பட்டன.
கலையில் சமத்துவம்
அடக்குமுறை வரலாறு திருத்தி எழுதப் படும்போது கலை, இலக்கியங்களிலும் வலிந்து பல சீர்திருத்தங்களைச் செய்தாக வேண்டும். தங்கள் அடையாளங்கள் முற்றிலும் மறைக்கப்பட்ட அல்லது தங்களைச் சிறுமைப்படுத்தி வைத்திருந்த இலக்கியங் களையும் வரலாற்றுப் புதினங்களையும் கறுப்பின மக்களால் எப்படி வலியின்றிக் கொண்டாட முடியும்?
இந்த வலிக்கு மாற்றாக பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் பெண்ணியச் சிந்தனையாளருமான ஷோண்டா ரைம்ஸ், வரலாற்று நாவலாசிரியர் ஜூலியா க்வின் இருவருடைய சிந்தனையில் உருவானதுதான் ப்ரிட்ஜர்டனின் நிறச் சமத்துவச் சமூகம். வரலாற்றுக்கு மாறாக இக்கதையில் அரசி உள்படப் பல பிரபுத்துவக் குடும்பங்கள் கறுப்பினத்தவராக இருப்பது மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கூடுதல் சிறப்பாக இத்தொடரின் இரண்டாவது சீசனில் இரு புலம்பெயர் தமிழ்ப் பெண்கள் நாயகியராக நடித்திருக்கிறார்கள். கேட் எனும் பெயரில் பேரழகியாக வலம் வரும் சீமோன் அஷ்வினி (ஆஷ்லி) தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட புலம்பெயர் தமிழர். ஸ்காட்லாந்தில் பிறந்த சரித்திரா சந்திரன் தமிழ்நாட்டில் வளர்ந்தவர். கறுப்பு நிற நடிகர்களான இவ்விருவரின் அழகையும் திறமை யையும் ஹாலிவுட்டே கொண்டாடிக் கொண்டிருக்க, கோலிவுட்டின் நிலையைக் கொஞ்சம் பார்ப்போம்.
அரை நூற்றாண்டுக் காத்திருப்பு
தமிழ் சினிமா உலகில் தொழில்நுட்பத்திலும் கதை சொல்லலிலும் இளைஞர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு களமிறங்கும் காலம் இது.
ஆனால், என்னதான் புதுமை விரும்பிகளான போதும் நாம் அஞ்சிச் சாகும் புதுமை ஒன்று உண்டு; அதுதான் நாயகி கறுப்பாக இருப்பது. முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நாயகி கறுப்பாக இல்லை என்பது யாருக்கும் உறுத்தாமல் இயல்பாகக் கடக்கப்படுகிறது. ‘கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு’ என்கிற பாடலுக்கு ஈடாக ‘கறுப்பு நிறத்தழகி’, ‘அவள் அப்படியொன்றும் கலரில்லை’ போன்ற பாடல்கள் வந்தாலும் காட்சிப்படுத்தலில் சிறிதும் மாற்றம் இல்லை.
எம்.ஜி.ஆர், ஜெமினி, கமல் என்று சிவந்த நிறமுடையவர்களை மட்டுமே அழகன்களாக அங்கீகரித்த நிலை மாறி எழுபதுகளில் கறுப்பழகர்கள் ரஜினிகாந்தையும் விஜயகாந்தையும் போற்றி மாற்றத்தைத் தொடங்கியது தமிழ் சினிமா. ஆனால், ஏறத்தாழ அரை நூற்றாண்டு கடந்த பின்பும் கறுப்பான பெண்களுக்கு முன்னணி நாயகி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சரிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா போன்றோர் விதிவிலக்காகவே பார்க்கப் படுகின்றனர்.
ஆதிப் பெண்ணின் நிறம் என்ன?
ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழணங்கு ஓவியம் கறுப்பாக இருந்தது குறித்து சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம். கறுப்பு என்பது தாழ்வு என்கிற கூற்றை வலுப்படுத்தும் நோக்கமுடைய சிலரால் வன்மத்துடன் தோற்றுவிக்கப்பட்டதே அந்த வீண் சர்ச்சை. ஆதித்தமிழர் கறுப்பாக அன்றி வேறெப்படி இருந்திருக்க முடியும்? பெண்களின் முன்னேற்றமே சமூக முன்னேற்றம் என்றார் டாக்டர் அம்பேத்கர். ஒரு சமூகம் தன் பெண்களை எப்படி நடத்துகிறது என்பதைக் கொண்டே அதை மதிப்பீடு செய்வேன் என்றார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா.
அந்த வகையில் இந்நிலத்தில் பிறந்து வளர்ந்த பெரும்பான்மையான பெண்கள் கறுப்பு நிறம் எனும்போது அவர்களின் இயல்பை மதிக்காமல், அவர்களது தன்னம்பிக்கையைக் காலில் போட்டு மிதிக்கும் வண்ணம் தொடர்ந்து உருவக் கேலி செய்யும் போக்கு கேடானது. பெண் குழந்தை பிறந்தவுடன் காதைத் திருப்பிப் பார்ப்பது, கருவுற்றிருக்கும் பெண்களைக் குங்குமப்பூ சாப்பிடச் சொல்வது, பெற்றோரே ‘சிகப்பழகு’ க்ரீம்களை வாங்கிக் குழைத்துப் பூசிவிடுவது ஆகிய சமூக அவலங்கள் ஒழிந்தாலொழிய உண்மையான முன்னேற்றத்தை இச்சமூகம் காண முடியாது.
இளம்பெண்களிடம் தோலின் நிறம் குறித்த விழிப்புணர்வு வெகுவாக அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளங்களின் நல்ல பலனாக சுய அன்பு, சுய ஏற்பு ஆகிய கருத்தாக்கங்கள் பரவலாகியுள்ளதால் நிறம் சார்ந்த தாழ்வுணர்வு கொள்ளவும், சிவப்புதான் அழகு என்பதை ஏற்றுக்கொள்ளவும் மறுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். தோலின் நிறத்தை மாற்றாமல் இயல்பாக அழகுபடுத்துவது முக்கிய அம்சமாக வளர்ந்துவருகிறது. மாற்றங்கள் மெதுவாக ஆனால் உறுதியாக நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது நம்பிக்கை அளிக்கிறது.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: deepa.j.joseph@gmail.com