பெண் சக்தி | ஆலிசன் ஃபெலிக்ஸ்: பெண்ணுரிமைக்கான குரல்

பெண் சக்தி | ஆலிசன் ஃபெலிக்ஸ்: பெண்ணுரிமைக்கான குரல்
Updated on
3 min read

“போட்டிக் களத்தில் ஓடுவதுதான் என் நெஞ்சுக்கு நெருக்கமானது என்றாலும் பொதுவெளியில் நான் செய்ய வேண்டிய அரிய பணி களுக்காக நான் விடைபெறுகிறேன்” - ஆலிசன் ஃபெலிக்ஸ்

ஓட்டப்பந்தயத்தில் அதிக பதக்கங்கள் பெற்ற வேகப்புயலான ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்தவர் அமெரிக்க வீராங்கனை ஆலிசன் ஃபெலிக்ஸ். 36 வயதில் தனது கடைசி ஓட்டத்தை அமெரிக்காவின் ஆரிகனில் 2022 ஜூலை 15இல் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஓடினார். அவர் கடைசியாக ஓடிய ரிலே ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் பெற்று விடைபெற்றார்.

1985இல் அமெரிக்காவில் பிறந்த ஆலிசன் ஃபெலிக்ஸ், 18ஆவது வயதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை ஓடத்தொடங்கினார். பிறகு பல்வேறு போட்டிகளில் வாகை சூடி உலக வரலாற்றில் அதிக பதக்கங்களைப் பெற்ற விளையாட்டு வீராங்கனை என்கிற பெருமை யைப் பெற்றார். ஒலிம்பிக்ஸில் தொடரோட்டம் உள்பட 7 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம், மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் என வியக்கவைக்கும் சாதனைகளுக்குச் சொந்தக் காரர். இந்தச் சாதனைகளோடு விளையாட்டுத் துறையில் பெண்களுக்காக வாதாடிவருபவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு.

விளையாட்டா, குழந்தையா?

விளையட்டுத் துறையில் தடம் பதிக்க விரும்புபவர்கள் போட்டிக் காலங்களில் மட்டுமன்றி போட்டியில்லா நேரத்திலும் தொடர்ந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டால்தான் வெற்றியை உறுதி செய்ய முடியும். மாதவிடாய், கருவுறுதல், குழந்தை பிறப்பு, குழந்தைக்குப் பாலூட்டுதல் போன்ற உள மற்றும் உடல்சார் நிகழ்வுகள் அவர்களின் கடுமையான பயிற்சிக்கும் போட்டியில் ஈடுபடுவதற்கும் சவாலாக உள்ளன. இருப்பினும் விளையாட்டு வீராங்கனைகள் அதற்காகத் தங்களது தாய்மைப்பேற்றை விட்டுக்கொடுக்கவோ அல்லது தங்களின் வெற்றிக் கனவுகளைத் தொலைத்துவிடவோ விரும்புவதில்லை. ஆனால், விளையாட்டு வீராங்கனைகள் கருவுறுவதும் குழந்தை பெற்றுக்கொள்வதும் அவர்களுக்கு நிதி உதவி செய்யும் ஸ்பான்சர்களுக்குக் கவலையளிக்கிறது. கருவுறும் வீராங்கனைகள் மீது ஸ்பான்சர்கள் நம்பிக்கை இழக்கிறார்கள். ஆலிசன் ஃபெலிக்ஸ் தன் வாழ்வில் இத்தகைய சவாலைச் சந்திக்க நேர்ந்தது. 2018ஆம் ஆண்டு அவர் கருவுற்றார். தொடக்கத்தில் தான் கருவுற்றதை அவர் ரகசியமாகவே வைத்திருந்தார். காரணம், கருவுற்றதை வெளியில் தெரிவிக்கக் கூடாது என்பது அவரது ஸ்பான்சரிங் கம்பெனியான ‘நைக்கி’யின் (NIKE) நிபந்தனைகளுள் ஒன்று. பிறகு அவர் கருவுற்றதை வெளியிட்டவுடன் அவருக்கான தனது நிதி உதவியை 70 சதவீதம் குறைத்தது நைக்கி. வெற்றி நாயகியான அவருக்காகக் குரல் கொடுக்க விளையாட்டுத் துறையில் எவரும் இல்லை. எந்தவொரு அமைப்பும் அதற்கு முன்வரவில்லை என்பது அவருக்கு வருத்தத்தை அளித்தது.

தாய்மை வெற்றிக்குத் தடையல்ல

தாய்மையடைந்ததால் ஸ்பான்சரின் உதவியை இழந்த அவருக்கு அவரது பிரசவமே அடுத்த சவாலாக ஆனது. கருவுற்ற தாய்மார்களுக்கு அரிதாக ஏற்படும் ‘ப்ரீக்ளாம்சியா’ என்னும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். கருவில் இருந்த குழந்தைக்கு இதயத் துடிப்பு குறைவாக இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். கருவுற்று 32 வாரங்கள் ஆன நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். குழந்தை நல்லவிதமாகப் பிறந்தாலும் பல வாரங்கள் மருத்துவமனை பராமரிப்பில் குழந்தை இருக்க நேர்ந்தது. ஸ்பான்சர் நைக்கியுடனான அவரின் ஒப்பந்தச் சிக்கல், வேறு ஸ்பான்சர்களுக்கான தேடல், தாய் - சேய் உடல் நலப் பராமரிப்பு எனப் பல்வேறு சவால்களை அவர் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள நேர்ந்தது. அவர் ஆலிசன் அல்லவா?

குழந்தை பிறந்து பத்தே மாதங்களில் போட்டிக் களத்தில் இறங்கினார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 4 X 400 ரிலே ஓட்டப் பந்தயத்தில் போட்டியிட்டார். அவர் வெற்றிபெற வாய்ப்பில்லை என்ற அவரது ஸ்பான்சரின் எண்ணத்தைப் பொய்யாக்கினார். முதல் இடத்தைப் பிடித்துத் தங்கப் பதக்கத்துடன் திரும்பினார். தாய்மை பெண்களின் வெற்றிக்குத் தடை என்கிற பலரது நம்பிக்கையை அவர் தகர்த்தெறிந்தார். அந்த நெருக்கடியான காலகட்டத்தின் அனுபவங்கள், அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் அவரின் பல்வேறு முயற்சிகளுக்கு வித்தாக அமைந்தன.

பெண்களுக்கான காலணிகள்

விளையாட்டு வீரர்களுக்குப் பொருத்தமான காலணிகள் ஆடுகளத்திற்கு இன்றியமையாதவை. விளையாட்டுக் காலணிகளுக்குப் புகழ்பெற்ற ‘நைக்கி’ ஆலிசனைக் கைவிட்ட நிலையில் அவர் அதற்காக அழுது புலம்பவில்லை. மாறாக, தானே விளையாட்டு வீரர்களுக்கான பிராண்ட் ஒன்றை ‘செய்ஷ்’ (Saysh) என்கிற பெயரில் தொடங்கினார். அவரது புதிய பிராண்ட், விளையாட்டு வீராங்கனைகளுக்காகப் பெண்களால் வடிவமைக்கப்பட்டது. அதுவரை ஆண்களின் கால் களுக்காக வடிவமைக்கப்பட்ட விளையாட்டுக் காலணிகளை வேறு வழியின்றி பெண்களும் பயன்படுத்திவந்த நிலையை அது மாற்றியது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தன் சொந்த பிராண்ட் ஷூவை அணிந்து ஓடி அவர் வெற்றிபெற்றார்.

கொள்கையை மாற்றிய குரல்

கருவுற்றதால் தான் எதிர்கொண்ட சிக்கல்கள் விளையாட்டுத் துறையில் உள்ள பெண்களுக்கு இன்னும் தொடர்வது அறமற்றது என உணர்ந்த அவர், தன் துறைசார் பெண்களுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கினார். விளையாட்டுத் துறைசார் சட்டங்கள், ஒழுங்குகள், வசதிகள் எல்லாம் ஆண்களால் ஆண்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டவையாக இருப்பதும், அதே நிலை இன்றும் தொடர்வதும் வேதனையளிக்கிறது என அவர் குறிப்பிட்டார். விளையாட்டுத்துறை பெண்களுக்கானதாகவும் மாற்றம் பெற வேண்டும் என அவர் விரும்பினார். பெண்களின் உணவு, உடல்நலன், மகப்பேறு உரிமை, பயிற்சியின்போது அவர்கள் ஓய்வு எடுப்பதற்கான வசதிகள், பயிற்சித் தளங்கள், போட்டி நடக்கும் இடங்களில் குழந்தைகளுக்குப் பாலூட்டவும் பராமரிக்கவுமான ஏற்பாடுகள், கருவுற்ற காலத்தில் அவர்களுக்கு நிதி உதவியை உறுதி செய்வது போன்ற பல்வேறு உரிமைகளுக்காக அவர் குரல் கொடுத்துவருகிறார். ஆலிசனின் இந்த முயற்சி விளையாட்டுத் துறையுடன் பயணிக்கும் பிராண்ட்களின் கொள்கையையே மாற்ற வைத்தது. ‘நைக்கி’ நிறுவனம் தான் நிதியுதவி செய்யும் விளையாட்டு வீராங்கனைகள் கருவுற்றாலும் எந்த மாற்றமும் இன்றி அவர்களுக்கான நிதியுதவி தொடரும் என அறிவித்தது.

கருவுற்ற காலத்திலும் பிரசவத்தின்போதும் பெண்களின் உடல்நலனைப் பேணுவதிலும் தாய் - சேயின் உயிரைக் காப்பதிலும் அரசாங்கத்தின் பங்கினை அவர் வலியுறுத்தி வருகிறார். குறிப்பாகப் பிரசவத்தில் அதிக எண்ணிக்கையில் இறக்கும் கறுப்பினப் பெண்களுக்காக அவர் குரல் கொடுத்துவருகிறார். தாய்மையைக் கொண்டாடும் அவர், “நான் ஒரு விளையாட்டு வீராங்கனை என்பதைவிட மேலானவள்; நான் ஒரு ஒலிம்பியன் என்பதைவிட மேலானவள்; நான் ஒரு தாய்!” எனக் குறிப்பிடுகிறார்.

விடைபெற்றார் ஆலிசன் பெலிக்ஸ்

“20 ஆண்டுகள் போட்டிக் களத்தில் போட்டியிட்ட கால்கள் இனிமேல் ஓடாது” என அறிவித்த ஆலிசன் ஃபெலிக்ஸ் “நான் ஒரு கடுமையான போட்டியாளராகவும் தாயாகவும் நினைவுகூரப்பட வேண்டும் என விரும்புகிறேன். அதே நேரத்தில் என் விளையாட்டுத் துறை அனுபவம் விளையாட்டுத் துறைசார் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் அவர்கள் களத்தில் இருக்கும்போது குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு அச்சமின்றிப் பாதுகாப்புடன் வாழவும் வகை செய்தது என்பதில் நான் பெருமை கொள்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார் ஆலிசன்.

கால்கள் ஓய்ந்தபோதும் உரிமைக்கான அவரது குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: mrs.dhanaseeli@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in