

தங்கள் தாயைக் கொன்ற வழக்கில் தந்தைக்குத் தண்டனை பெற்றுத்தர ஆறு ஆண்டுகளாகப் போராடியுள்ளனர் இரு மகள்கள். உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷர் நகரத்தைச் சேர்ந்தவர் மனோஜ் பன்சால். இவருடைய மனைவி அனு. இவர்களுக்கு லத்திகா, தான்யா என இரு மகள்கள். தங்கள் வம்சத்தின் பெருமையைக் காக்க ஆண் குழந்தை வேண்டும் என்று மனைவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார் மனோஜ். கருவில் இருக்கும் குழந்தை பெண் என்று தெரிந்து அனுவுக்கு ஆறு முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்படியொரு சூழலில் 2016இல் அந்தக் கொடூரத்தை மனோஜ் அரங்கேற்றினார்.
அப்போது மூத்த மகள் லத்திகாவுக்கு 15 வயது, இளையவள் தான்யாவுக்கு 11 வயது. தங்கள் குடும்பத்தினர் ஆதரவுடன் அனு மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்தார் மனோஜ். “2016 ஜூன் 14 அன்று எங்கள் அம்மாவின் அலறல் கேட்டுத்தான் நாங்கள் கண் விழித்தோம். எங்கள் அம்மா எரிந்துகொண்டிருந்தார். நானும் என் தங்கையும் இருந்த அறை வெளிப்புறமாகப் பூட்டப்பட்டு இருந்ததால் அம்மா எங்கள் கண் முன் எரிந்து அடங்குவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்” என்று விசாரணை நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார் லத்திகா.
உள்ளூர் காவல் நிலையத்துக்கும் ஆம்புலன் ஸுக்கும் இந்தச் சிறுமிகள் தகவல் சொல்லியும் எதுவும் நடக்கவில்லை. அதனால் தங்கள் தாய் மாமாவுக்கும் அம்மாவழிப் பாட்டிக்கும் தகவல் சொன்னார்கள். அவர்கள் வந்து அனுவை மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலில் 80 சதவீதக் காயங்களோடு இருந்த அனு சில நாட்களில் இறந்துவிட்டார். ஆனால், உள்ளூர் காவல்துறை இதைத் தற்கொலை என்று பதிவு செய்தது. இதற்கு எதிராக லத்திகாவும் தான்யாவும் எடுத்த முயற்சிக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு இவர்கள் தங்கள் ரத்தத்தால் கடிதம் எழுதிய பிறகே முறையான விசாரணை தொடங்கியது.
இந்தச் சிறுமிகளுக்கு ஆதரவாக சஞ்சய் சர்மா என்பவர் நீதிமன்றத்தில் கட்டணமின்றி வாதாடினார். தந்தை மீது ஏன் வழக்குத் தொடுக்க வேண்டும் என்று லத்திகாவிடமும் அவருடைய தங்கையிடமும் பலரும் கேட்டனர். “அவர் எங்கள் தந்தையாக இருந்தாலும் எங்கள் தாயைக் கொன்றவர் அவர்தானே” என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மனோஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி புலந்த்ஷர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. வழக்கு நடை பெற்ற இந்த ஆறு ஆண்டுகளில் இந்தச் சகோதரிகள் நூற்றுக்கு மேற்பட்ட முறை நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறார்கள். அதில் ஒருநாள்கூடத் தவறிய தில்லை என்று தெரிவித்துள்ளார் வழக்கறிஞர் சஞ்சய் சர்மா. “ஆண் குழந்தை பிறக்காததற்கும் பெண்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிறகு ஏன் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்?” என்கிற சஞ்சய்யின் கேள்விக்கு இந்தச் சமூகம் என்ன பதில் வைத்திருக்கிறது?
அழைப்பிதழ் புத்தகம்!
தங்களது வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப விதம்விதமாகத் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்படும் காலத்தில் புதுமை படைத்தி ருக்கிறார்கள் நிகர் கலைக்கூடத்தின் இணை நிறுவனர்களான ப.சந்திரிகா, க.நிவாஸ் இருவரும். கோவையைச் சேர்ந்த இவர்கள் 32 பக்கத்தில் இணையேற்பு விழா அழைப்பிதழைச் சிறு புத்தகமாக அச்சடித்துள்ளனர். பலரும் வள்ளுவரிலிருந்து இல்வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினால் இவர்களோ உலகத் தலைவர் களின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து அளித்துள்ளனர். கார்ல் மார்க்ஸ் - ஜென்னி, டாக்டர் அம்பேத்கர் - ரமாபாய், பாப் மார்லி - அல்பாரிட்டா, சேகுவேரா - அலெய்டா மார்ச், ஃப்ரீடா காலோ - டியாகோ ரிவேரா என்று நீளும் அழைப்பிதழ், வெள்ளிவீதியார் பாடலைத் தொட்டு சந்திரிகாவின் அனுபவக் குறிப்புடன் நிறைவடைகிறது.