

கவிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என சல்மாவுக்குப் பல அடையாளங்கள் இருக்கின்றன. ஆனால், தனக்கென இந்த அடையாளங்களை உருவாக்க அவர் கடந்து வந்த பாதையைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். பிரிட்டனைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கிம் லாங்கினோட்டோ (Kim Longinotto) சல்மாவின் வாழ்க்கைப் பயணத்தை ஆவணப்படமாகப் பதிவுசெய்திருக்கிறார். ‘சல்மா’ என்றே பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம் 2013-ம் ஆண்டு வெளியாகிப் பல விருதுகளைப் பெற்றது. இந்த ஆவணப்படத்தின் திரையிடல் கடந்த அக்டோபர் 6 அன்று ரோஜா முத்தையா நூலகத்தில் நடைபெற்றது. திரையிடலுக்குப் பிறகு, சல்மாவுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருச்சி துவரங்குறிச்சி கிராமத்தில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறக்கும் சல்மா, பூப்பெய்தியவுடன் கல்வி மறுக்கப்படுகிறது. திருமணமாகும்வரை, தாய் வீட்டில் ஓர் அறையில் அடைத்துவைக்கப்படும் அவர், திருமணத்துக்குப் பிறகு இருபது ஆண்டுகள் புகுந்த வீட்டில் சிறைவைக்கப்படுகிறார். அவருடைய எழுத்துதான் அவருக்கான சுதந்திரத்தைப் பெற்றுத்தருகிறது. ஆனால், ஒரு பெண் எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாத சமூகத்தில், எழுத்தை நேசித்ததால் அவர் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். அந்தப் போராட்டங்களையெல்லாம் அப்படியே பார்வையாளர்களின் கண் முன் நிறுத்துகிறது இந்த ஆவணப்படம்.
சல்மாவே தன் வாழ்க்கையைப் பின்னோக்கிச் சென்று பார்க்கும்படி எடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய வாழ்க்கையைத் தீர்மானித்த குடும்பத்தினர், அவரைப் பற்றிய தங்களுடைய பார்வையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தக் குடும்ப உறுப்பினர்களில் சிலருக்கு சல்மாவைப் பற்றிய பெருமிதம் இருக்கிறது. சிலருக்கு வருத்தம் இருக்கிறது. இன்னும் சிலருக்கு அதிருப்தி இருக்கிறது. இவர்கள் பேசுவதையெல்லாம் அமைதியாக கவனிக்கும் சல்மா, தன்னுடைய பார்வையில் தன் வாழ்க்கை நிகழ்வுகளைத் தொகுக்கிறார்.
எழுதுவதை நிறுத்தாவிட்டால் முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுவேன் என்று மிரட்டும் கணவரிடம் தப்பிப்பதற்காகக் குழந்தையின் முகத்தைத் தன் முகத்தின்மீது வைத்துக்கொண்டு தூங்குவேன் என்று சல்மா சொல்லும் காட்சி அதிரவைக்கிறது. இந்த ஆவணப்படத்தின் நோக்கத்தையும் உணரவைக்கிறது.
பெண்ணின் மீதான அடக்குமுறை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மட்டும் நடப்பதில்லை. அது சமூகம் கடந்து நடக்கக்கூடியது என்பதையும் இந்த ஆவணப்படத்தில் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர். அத்துடன், இந்த அடக்குமுறை தலைமுறை தலைமுறையாகத் தொடரக்கூடியது என்ற அதிர்ச்சிகரமான உண்மையை சல்மாவின் சகோதரி மகன் பேசும் காட்சியால் புரிந்துகொள்ள முடிகிறது.
எழுதுவதற்கு உரிமையற்ற ஒரு வீட்டில், கழிவறையில் நின்றாவது எழுதித் தீர வேண்டும் என்ற சல்மாவின் எழுத்து மீதான பேரார்வமும் மனஉறுதியும்தான் அவரை உருவாக்கியிருக்கிறது என்பதை இந்த ஆவணப்படம் தெளிவாகக் காட்டியிருக்கிறது. சல்மாவின் தனிப்பட்ட வாழ்க்கையை விரிவாக அலசும் இந்தப் படம், அவரது இலக்கிய வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் அலசியிருக்கலாம். எழுத்தின் காரணமாகக் கூடுதலான ஒடுக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சல்மா, அதே எழுத்தின் மூலம்தான் தனக்கான விடுதலையையும் பெற்றிருக்கிறார் என்னும் நிலையில் அவரது இலக்கிய உலகின் மீது இன்னும் வெளிச்சம் பாய்ச்சுவதன் மூலம் மேலும் சில முக்கியமான அம்சங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கலாம்.