Published : 22 Jun 2014 08:30 AM
Last Updated : 22 Jun 2014 08:30 AM

சோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா

மகளிர் நோய்க்கான மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ள டாக்டர் இந்திரா ஹிந்துஜா, ஒரு காலத்தில் வலி பொறுக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள நினைத்தார் என்றால் நம்ப முடிகிறதா?

“நான் எம்.டி. படிப்பை முடித்ததும் எனக்கு மிகக் கடுமையான முதுகு வலி ஏற்பட்டு பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்குத் துடிதுடித்து வேதனைப்பட்டேன். முதுகுத் தண்டுவடத்தில் ஒரு கட்டி இருப்பதாகவும், உள்ளே எலும்பு அரிக்கப்பட்டுவருவதாகவும் டாக்டர்கள் சொன்னார்கள். மூன்றிலிருந்து ஆறு மாதங்களில் கால்களில் பக்கவாதம் ஏற்படலாம் என்றும் சொன்னார்கள். நான் உண்மையிலேயே உடைந்துபோனேன்” என்று அந்த வேதனையான அனுபவத்தை நினைவுகூரும் டாக்டர் இந்திரா ஹிந்துஜா, வேதனை தன்னை வாட்டியெடுத்ததில் பெரும் மனச் சோர்வுக்கு ஆளானதாகக் குறிப்பிடுகிறார்.

இந்தத் தீராத தொல்லையிலிருந்து விடுபடத் தற்கொலை செய்துகொள்வதுதான் ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். முக்கியமாகத் தனது பெற்றோர்களுக்கு ஒரு சுமையாக இருக்க அவர் விரும்பவில்லை. அந்தச் சமயத்தில்தான் மைலோகிராம் என்ற சோதனையைச் செய்துபார்ப்பது என்று டாக்டர்கள் முடிவுசெய்தனர். இவரது தற்கொலை மனநிலையை நன்கு அறிந்திருந்த இவருடைய தோழிகள் இவரை விட்டு நகராமல் கூடவே இருந்தார்கள்.

மைலோகிராம் சோதனையில் கட்டி எதுவும் இல்லை என்றும், உடல் நிலைமையில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது. “சாதாரணமாக அந்த வயதில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய முதுகுவலிதான் என்றும், மருந்துகள், யோகா போன்றவற்றால் குணப்படுத்திவிட முடியும் என்றும் டாக்டர்கள் சொன்னது என் காதுகளில் தேனை ஊற்றியது போல இருந்தது” என்று சொல்லும் ஹிந்துஜா, இந்தச் செய்தியைக் கேட்டவுடன், அவர் தோழிகள் இவரைத் தழுவி முத்தமிட்டு, மகிழ்ச்சி ஆரவாரத்தில் திணறடித்த தருணத்தை மறக்கவே முடியாது என்கிறார்.

“தற்கொலை செய்துகொள்ள நினைத்த என்னை நான் இப்போதும் ஒரு கோழை என்றே நினைக்கிறேன்” என்று சொல்கிறார். இனப்பெருக்க உயிரியல் (Reproductive Biology) பற்றிய துறையில் இவர் எழுதிய 108 அறிவியல் சார்ந்த வெளியீடுகள், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் உரையாற்றியிருக்கிறார்.

இந்திரா ஹிந்துஜாவுக்குக் கிடைத்துள்ள ஏராளமான பல விருதுகளும் பாராட்டுகளும் பதக்கங்களும் அவருடைய மருத்துவமனை அலமாரிகளை அலங்கரிக்கின்றன. 2011-ல் இந்திய அரசு இவருக்கு பத்ம விருது வழங்கிக் கௌரவித்தது. மகாராஷ்டிரா ஆளுநர், தன்வந்த்ரி விருது வழங்கிச் சிறப்பித்திருக்கிறார். இந்தியாவின் சோதனைக் குழாய் முறையிலான முதல் குழந்தை பிறப்பிற்கு முன்னோடியாக விளங்கியமைக்காக ரோட்டரி சிறப்புப் பரிசைப் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு கோல்டன் மகாராஷ்டிரா விருதுபெற்றோர் வரிசையில் இடம்பெற்ற இவர், இந்திய ஐ.வீ.எஃப். மற்றும் இன்ஃப்ர்டிலிடி துறையிலான முதல் பெண்மணி என்ற சிறப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜஸ்தான் கட்ச் பகுதியைச் சேர்ந்த மணி சாவ்டா என்ற பெண்மணிக்குச் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பிறக்கச் செய்திருக்கிறார் இந்துஜா.

“அந்தப் பிரசவத்திற்காக மணிசாவ்டா கே.ஈ.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நான் அந்தப் பெண்ணுக்கு சிசேரியன் செய்தேன். சர்ஜரி முடிந்து பெண் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டபோது அது என் காதுகளுக்கு இன்ப கானமாகவே ஒலித்தது. அந்தப் பெண் குழந்தைதான் ஐ.வீ.எஃப். ட்ரான்ஸ்ஃபர் முறையில் உருவெடுத்த முதல் சோதனைக் குழாய் குழந்தை. ஹர்ஷா என்ற அந்தப் பெண் 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி பிறந்தாள். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத பொன்னாள்” என்கிறார் ஹிந்துஜா.

இந்தச் சாதனையைச் செய்தபோது ஹிந்துஜாவுக்கு வயது 38. தற்போது 68 வயதாகும் டாக்டர் ஹிந்துஜா, மருத்துவத் துறைக்கே தன்னை முழுமை யாக அர்ப்பணம் செய்துகொண்டதால் திருமணம் செய்துகொள்ளவில்லை. “குழந்தை எதையும் தத்து எடுத்து வளர்க்கிறீர்களா?” என்று கேட்டதற்கு, “இங்கு பிறந்துள்ள அத்தனை சோதனைக் குழாய் குழந்தைகளும் என்னுடையதுதானே” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் ஹிந்துஜா.

1984-ம் ஆண்டு தொடங்கி இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமான சோதனைக் குழாய் குழந்தைகள் பிறப்பதற்கு டாக்டர் ஹிந்துஜா வழிவகுத்துக் கொடுத்திருக்கிறார். சோதனைக் குழாய் குழந்தைகள் பிறப்புக்கான வெற்றி வாய்ப்பு என்பது ஐம்பது சதவீதம்தான் என்றும் இவர் தெரிவிக்கிறார்.

மருத்துவ ஆராய்ச்சித் துறையில், அளவுக்கு மீறிய ஆர்வமும், அதீதமான ஈடுபாடும் கொண்டுள்ள இவர், இனப்பெருக்க மருத்துவ ஆய்வில் மிகுந்த முனைப்புடன் ஈடுபட்டுள்ளார். மும்பையில் உள்ள ஹிந்துஜா தேசிய மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில், இன்கஸ் மையத்தில் ஐ.வி.எஃப் பிரிவின் நிறுவநராக இன்றும் பளிச்சிட்டுவருகிறார் டாக்டர் ஹிந்துஜா.

மருத்துவம் தொடர்பான பல சர்வதேசக் கருத்தருங்குகளில் இவர் கலந்துகொண்டு உரையாற்றிவருகிறார். மகளிர் நோய் மருத்துவம் தொடர்பான பல விஷயங்களையும் தெரிந்துகொள்வதற்காகவே மகளிர் நோய் மருத்துவத் துறை மாணவர்கள் பலர் இவரை அணுகுகிறார்கள்.

பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தைச் சேர்ந்தவரான ஹிந்துஜாவின் குடும்பத்தார் இந்தியப் பிரிவினைக்குப் பின் இந்தியாவில் நிரந்தரமாகவே குடியேறிவிட்டனர். மருத்துவப் புத்தகங்களைப் படிப்பது இவரின் முக்கியமான பொழுதுபோக்கு. சித்தார் வாசிப்பதில் இவர் கைதேர்ந்தவர். இனிய இசையை ஆழ்ந்து ரசிப்பவர்.

வலி பொறுக்காமல் உயிரை விட்டுவிட வேண்டும் என்று ஒரு காலத்தில் நினைத்த இந்திரா ஹிந்துஜா, எத்தனையோ உயிர்கள் பிறக்கக் காரணமாக இருந்துவருகிறார். மரணத்தின் விளிம்பைத் தொட்டுத் திரும்பிய இவர், உயிரின் வலிமையையும் மதிப்பையும் உணர்த்தும் வகையில் செயல்பட்டுவருவதில் ஆச்சரியம் என்ன?

(மகளிர் நோய் மருத்துவம் தொடர்பாக இவரிடம் ஆலோசனை கேட்க விரும்புவோர், indirahinduja@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x