

மிரட்டப்போகும் தேவசேனா
சன் தொலைக்காட்சி ‘தெய்வ மகள்’ தொடரில் நடித்துவரும் ஷப்னம், திரைப்பட இயக்குநர் சுந்தர். சி தயாரிப்பில் வெளிவர இருக்கும் ‘தேவசேனா’ தொடரில் நடித்துவருகிறார்.
“பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டே, தெய்வ மகள் தொடரில் நடித்து வந்தேன். இப்போ படிப்பு முடிந்துவிட்டது. இனி, முழு நேரமாக சின்னத்திரையில் நடிப்பதே என் லட்சியம். தேவசேனா, அரண்மனை திரைப்படம் மாதிரி கலகலப்புக்குப் பஞ்சமே இருக்காது. திகில், காமெடி, அன்புன்னு தொடர் முழுக்க வித்தியாசமா இருக்கும். சன் தொலைக்காட்சியில் எப்போ ஒளிபரப்பாகும்னு காத்துக்கிட்டு இருக்கேன்” என்கிறார் ஷப்னம்.
புதிய அவதாரம்
கலைஞர் தொலைக்காட்சியில் எல்லாமே சிரிப்புதான், சினிமா நட்சத்திரங்கள் சந்திப்பு, சினிமா செய்திகள் என்று பரபரப்பாக இருந்துவரும் சுமையாவுக்கு, ஆடை வடிவமைப்பாளராக வேண்டுமென்று ஆசை.
“ஆர்ஜே ஆக வேண்டும் என்ற ஆசையோடுதான் மீடியா பக்கம் வந்தேன். எதிர்பாராத விதமாகத் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக மாறிவிட்டேன். சில வருஷங்களாகவே ஆடை வடிவமைப்பு மீது தீராத காதல். விரைவில் அதற்காகப் படிக்கப் போகிறேன். பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் படித்தாலும் தொகுப்பாளினி பணியைத் தொடர்வேன்” என்கிறார் சுமையா.
நிறைவேறியது கனவு
இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் சன் தொலைக்காட்சியின் ‘பொம்மலாட்டம்’ தொடரில் நடித்துவரும் ப்ரீத்தி, நடனப் பள்ளி ஆரம்பித் திருக்கிறார்.
“சின்ன வயதிலிருந்தே நடனம்தான் என் விருப்பம். பரத நாட்டியம், குச்சுப்புடி நடனங்களுக்கு எப்போதும் மதிப்பு உண்டு. ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சிக்குப் பிறகு ஏன் நடனத்துல கவனம் செலுத்தலைன்னு தோழிகள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். சரியான சமயம் அமையட்டும்னு காத்திருந்தேன். தீபாவளியோடு ‘பொம்மலாட்டம்’ தொடர் முடியப்போகிறது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, ‘சமர்ப்பணா’ நடனப் பள்ளியை ஆரம்பிக்கும் பணியில் இறங்கிவிட்டேன்” என்கிறார் ப்ரீத்தி.