

சுதந்திரம், சமூக நீதி, மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் இந்திய அரசியல் சாசனம் நாம் பெற்ற விடுதலையின் மகத்துவம். அடிமை இந்தியாவுக்கும் விடுதலை பெற்ற இந்தியாவுக்குமான வேறுபாடுகளை 75 ஆண்டுகளில் உணர்ந்திருக்கிறோம். கல்வி, வேலை, வேளாண்மை, மக்களின் வாழ்க்கைத்தரம் போன்றவற்றில் நாம் நிகழ்த்திய மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்து இந்நேரத்தில் நாம் சிந்திக்க வேண்டும். விடுதலைக்குப் பின் நிகழ்ந்த முன்னேற்றங்களும் சாதனைகளும் உலகின் வளரும் நாடுகளுக்கு மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை இந்தியாவுக்குப் பிடித்துக் கொடுத்திருக்கின்றன.
விடுதலைக்குப் பின்னால் அனைத்திலும் சாதனைகள்தானா என்கிற கேள்விக்கு வேதனைகளும் சமமாக வந்தமர்ந்து பதில் அளிக்கக்கூடும். அதுதான் நாம் பெற்ற சுதந்திரத்தின், ஜனநாயகத்தின் மகத்துவம்! உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, பணவீக்கம், விலைவாசி போன்ற பட்டியலிலிருந்து விலகி உண்மையான சுதந்திரத்தின் சாதனையாக நமது கவனத்தை ஈர்ப்பது பெண்கல்விதான்! அன்றைய இந்தியாவில் பெண் கல்வி என்பது ஒரு கோரிக்கையாக இருந்தது. பெண்களுக்குக் கனவாக இருந்தது. 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?' என்கிற பழங்காலச் சிந்தனைக்கு எதிராகப் பெண்ணுக்கும் கல்வி வேண்டும் என்கிற கோரிக்கை அப்போதைய விடுதலை மேடைகளின் முழக்கமாக முன்வைக்கப்பட்டது. காரணம், சமூகத்தின் சரிபாதியான பெண்கள் விடுதலைப்போரில் ஈடுபடவில்லையென்றால் வெற்றியும் விடுதலையும் சாத்தியமல்ல என்பதை உணர்ந்திருந்தார்கள். அதை நன்கு உணர்ந்த காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க முன்வருமாறு பெண்களுக்கு அறைகூவல் விடுத்தார். பெரும்திரளாகப் பெண்கள் விடுதலைப் போரில் பங்கேற்றார்கள். பெண் கல்வியும் அப்போராட்டத்தில் குதித்தது என்றே கூறலாம்.
பெண்களுக்கான கல்வி நிலையங்கள்
சென்னையில் படித்த பெண்கள் குறித்த 1871ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் 620 பெண்களில் ஒருவர்தான் படித்தவராக இருந்தார் என ஆய்வு முடிவில் தெரியவந்தது. மற்றோர் ஆய்வில் 1901இல் பெண்களின் கல்வி 0.6 சதவீதமாக இருந்துள்ளது. 1911இல் 1.0 சதவீதமாகவும் 1951இல் 8.86 சதவீதமாகவும் 1971இல் 21.97 சதவீதமாகவும் 2001இல் 53.67 சதவீதமாகவும் 2011இல் 65.46 சதவீதமாகவும் உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சாவித்திரிபாய் பூலே 1848இல் பெண்களுக்கான தனிப் பள்ளியைத் தொடங்கிப் பெரும் சாதனை படைத்தார். ஒன்பது மாணவிகளோடு செயல்படத் தொடங்கிய அப்பள்ளியே பெண் கல்விக்கு முதல் விதை தூவியது. அதன் பிறகே பெண்களுக்குத் தனிப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் தேவை என்கிற சிந்தனை சமூகத்தில் பரவ ஆரம்பித்தது. 1854இல் சார்லஸ் உட் என்பவர் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிக்கை வெளியிட்டார்.1879இல் பெத்தூன் பெண்கள் கல்லூரி முதலாவதாக வங்கத்தில் தொடங்கப்பட்டது. 1849ல் இது பெண்கள் பள்ளியாக இருந்துள்ளது.
பெண்களுக்கான தனிப் பல்கலைக் கழகம் 1916இல் பம்பாயில் டாக்டர் தோந்தோ கேசவ் கர்வே என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. ஐந்து பெண்கள் இங்கிருந்துதான் முதன்முதலாகப் பட்டதாரிகளாக வெளிவந்தார்கள் எனச் சமூக ஆய்வாளர் திருப்பதி தனது ஆய்வில் குறிப்பிடுகிறார். இந்தப் பெண்கள் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு மகாத்மா காந்தி தலைமை தாங்கியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
மாற்றத்துக்கு வித்திட்ட கல்வி
பெண் கல்வி என்கிற தலைப்பில் பிரிவு 15 (1) பாலின அடிப்படையில் எந்த ஒரு குடிமகனையோ குடிமகளையோ வேறுபடுத்தக் கூடாது என்கிறது நமது அரசமைப்புச் சட்டம்.
ஆகவே, அரசமைப்புச் சட்டத்தின் அங்கீகாரத்தோடு சம உரிமை பெற்ற பெண் கல்வி இந்தியாவெங்கும் தன் சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்கியது. 799 பல்கலைக் கழகங்களில் 14 பெண்களுக்குரியதாக இன்று விளங்குகின்றன. 1,751 பெண்கள் கல்லூரிகள் இயங்குகின்றன. 2016 இல் முனைவர் (ph.d.) ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் 28,799பேர். அவர்களில் பெண்கள், 12,505 பேர்.
அறிவியல், பொறியியல், மொழியியல், மருத்துவம், சட்டம், வரலாறு, பொருளாதாரம் என எண்ணற்ற பிரிவுகளில் பெண் கல்வி முன்னேற்றமடைந்துவருவது மிகப்பெரிய சாதனை. விண்வெளி ஆராய்ச்சி முதல் கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சிக் கல்வி வரை பெண்கள் பங்கேற்காத துறைகளே இல்லை என்று கூறும் அளவுக்குக் கல்வியின் பயனைப் பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள். என்னதான் சட்டங்கள் இயற்றப்பட்டாலும் குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் என்னும் சதி, பெண் கரு அழிப்பு, தேவதாசி முறை போன்ற பழமையின் எச்சங்களை எதிர்த்துப் போராடும் வலிமையையும் விழிப்புணர்வையும் பெண்களுக்குக் கல்விதான் வழங்கியது.
இன்று இந்தியாவில் அந்த மூடப்பழக்கவழக்கங்கள் ஓரளவு ஒழிக்கப்பட்டதென்றால் அதற்கு அரசின் நடவடிக்கைகளோடு பெண் கல்வியே முக்கியக் காரணமாகவும் இருந்தது. சமூக உற்பத்தியில் பெண்கள் பங்கேற்பதற்கான தகுதியையும் உழைப்பின் மதிப்பு குறித்த கேள்வி ஞானத்தையும் பெண்களிடம் கொண்டுவந்து சேர்த்தது கல்விதான். பெண்ணை இரண்டாம் பாலினமாகக் கருதுவதுதான் பெண்கல்விக்கு முதல்தடை. அதை உடைத்தெறிந்துள்ளது நமது அரசமைப்புச் சட்டம். ஏழ்மையும் வறுமையும் இன்னொரு தடை. ஆரம்பக் கல்வி நிலையங்களில் மதிய உணவு போன்ற மாநில அரசுகளின் திட்டங்களால் இந்தத் தடையையும் தகர்க்க முடிந்துள்ளது. தொலைதூரங்களில் அமைந்த கல்வி நிலையங்களை அருகில் கொண்டுவந்து சேர்த்ததோடு பெண் ஆசிரியைகள் நியமனமும் சேர்ந்து இடைநிற்றலில் காணாமல்போன சிறுமிகளைக் கல்வி நிலையங்கள் கண்டெடுத்தன. அவர்களின் கல்வி தொடர வழிவகை செய்தன. டெல்லி நிர்பயா, கதுவா சிறுமி, கள்ளக்குறிச்சி மாணவி போன்ற எத்தனையோ பெண்களை இழந்த போதும் பேராபத்துகள் நம்மைச் சூழ்ந்தபோதும் பெண் கல்வி ஒருநாளும் தன் பயணத்தை நிறுத்திக்கொள்ளாது.
கட்டுரையாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com