

பெண்களுக்கு இன்னும் என்ன சுதந்திரம் கிடைக்கவில்லை? எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் முன்னேறி விட்டார்கள், பெண்ணியம் என்பதே ஆண்களுக்கு எதிரானது, பெண்ணியவாதிகள் எதிர்மறைவாதம் பேசுபவர்கள்... இப்படிச் சில கருத்துகள் பொதுவாக நிலவுகின்றன. மேலும், இந்த 21ஆம் நூற்றாண்டில் எல்லாத் துறைகளிலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்திவரும் காலகட்டத்தில் ஆண்கள்தாம் பல அடக்குமுறைகளைச் சந்திப்பதாகக் கருதப்படுகிறது. ஆகவே பெண்களின் இடத்தில் ஆண்களை வைத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையின் தொகுப்பு இது.
நண்பர் ஒருவர் திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போக வேண்டாம் என்று வீட்டில் எவ்வளவோ சொல்லியும் (மனைவி நல்ல நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறார்) தொடர்ந்து வேலைக்குச் சென்றார்.
“குழந்தைகள் பிறந்த பிறகு குழந்தைகளுக்குச் சிறந்த தகப்பனாக வீட்டில் இரு” என்று சொல்லியும் கேட்காமல் தன் வளர்ச்சி, பதவி இவையே முக்கியம் என்று வேலை, வீட்டுப் பொறுப்பு, குழந்தை வளர்ப்பு எல்லாம் செய்ததில் உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். நின்றால் உட்கார்ந்தால் முதுகு வலியாம்! இதனால், அந்த மனைவிக்கு எவ்வளவு மன உளைச்சல் பாருங்கள்?
சிகரெட், குடிப்பழக்கம் ஏதுமில்லாத அன்பு மனைவி, வீட்டின் அனைத்துப் பொறுப்புகளிலும் இயன்ற அளவுக்கு உதவுகிறார். இவர் செலவழிக்கும் பணத்துக்குக் கணக்குக்கூட மனைவி கேட்பதில்லையாம்.
பொறுப்பில்லாமல் அசட்டுத்தனமாகத் தன் சுயநலத்தை மட்டும் விரும்பும் அந்தத் தந்தையின் குழந்தைகளை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.
ஆண்கள் நலம் பற்றிப் பெண்கள்
நான் சமையலிலும் வீட்டு வேலை களிலும் குழந்தை வளர்ப்பிலும் என் கணவ ருக்கு எப்போதும் உதவியாக இருக்கிறேன். என் போன்றவர்களின் மனம் புண்படும்படி பேசாமல் ஊக்குவிப்பது அவசியம்.
- புனிதா, சீனியர் மேலாளர் (மார்க்கெட்டிங்).
என் பெற்றோரை அவர் கவனித்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்குக் கடமையுணர்வுடன் அவரது பெற்றோரையும் பேண அனுமதிக்கிறேன். எப்படியும் ஆண்டுக்கு இரண்டு மூன்று முறை தனது அப்பா வீட்டுக்குச் சென்று டேரா அடித்து விடுவார். எனக்கு ஹோட்டல் சாப்பாடுதான் என்று குறும்புடன் சிரிக்கிறார்.
- மகாலட்சுமி, ஆட்டோமொபைல் இன்ஜினீயர்.
நடிகை கார்மேகக் குழலியுடன் ஒரு பேட்டி
“ஹீரோ ஸ்ரீஹரிக்குக் கல்யாணம் ஆன பிறகு அவருடன் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களாமே? அவர் தொடர்ந்து நடிக்க அவர் மனைவி அனுமதி கொடுத்திருக்காங்களே?"
“பின்னே என்னங்க? முதல்ல நடிக்க வரும்போது அழகா, ஃபிட்டா, சிக்ஸ் பேக்லாம் வெச்சிட்டு வர்றாங்க. கல்யாணம் பண்ணி ரெண்டு மாசம்தான் ஆச்சு. அதுக்குள்ள ரொம்ப வெயிட் போட்டுட்டாரு. இவர்கூட நடிச்சா என் இமேஜ் என்னாகுறது? அதான் டைரக்டர்கிட்ட சொல்லி அவரைத் தூக்க சொல்லிட்டேன். புதுமுகம் யாரையாச்சும் போடச் சொல்லியிருக்கேன்"
“ம்ம்... பூமா மேடம்கூட அவரைத் தவிர்த்திட்டதா கேள்விப்பட்டேன். அப்போ ஸ்ரீஹரியோட மார்க்கெட் அவ்ளோதான்னு நினைக்கிறீங்களா?"
“தெரியல. ஒரு ரெண்டு, மூணு வருஷம் இடைவெளி எடுத்துக்கிட்டு, குழந்தையெல்லாம் பெத்து வளர்த்த பிறகு அண்ணாவா அப்பாவா நடிக்க வர்றவங்க இருக்காங்கதானே. இல்லைன்னா டிவி தொடர்களில் நடிக்கலாம்"
“அஞ்சு வருசத்துக்கு அப்புறம் மீண்டும் உங்க அடுத்த படத்தில் நடிக்கிற ஸ்ரீநாத் பத்தி”
“ஓ! நல்ல பையன். பத்து வருஷத்துக்கு முன்னாடி எனக்கு மகனா அறிமுகம் ஆனார். அப்புறம் ஜோடியா சில படங்களில் நடிச்சார். இந்தப் படத்துல எனக்கு அப்பாவா நடிக்கிறார். நல்ல ரோல், நான்தான் சிபாரிசு செய்தேன்”
“மேடம் ஷாட் ரெடி” என்ற குரல் வந்தவுடன், “ஓகே.. பார்ப்போம்!” என்று புறப்பட்டுச் சென்றார் 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா உலகைக் கலக்கிக்கொண்டிருக்கும் 70 வயது ஸ்டைல் ஸ்டார் கார்மேகக்குழலி.
சமையலில் உதவும் மனைவி
கன்னத்தில் கைவைத்துச் சோகமாக அமர்ந்திருந்தாள் நிலா.
“என்ன நிலா இவ்ளோ சோகம்?” தோழி மதி கேட்டாள்.
“வேறென்ன? வீட்ல சண்டை”
“என்னாச்சு?”
“நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். நாங்க ரெண்டு பேரும் மட்டும் இருக்கும்போது என் கணவருக்கு நான் வீட்டு வேலைகளில் உதவி பண்றது பிரச்னை இல்லை. ஆனா, எங்கப்பா ஊர்லேர்ந்து வந்திருக்கும்போது நான் இவனோட ஷர்ட்டை அயர்ன் பண்றதையோ, தோசை சுட்டுக் குடுக்குறதையோ பார்த்தா எங்கப்பாவுக்கு ரொம்பக் கோபம் வருது”
“ஏன் அவருக்கென்ன பிரச்சினை?”
“என்ன இப்படிக் கேட்டுட்டே? சின்ன வயசுலேர்ந்து என்னை ஒரு சின்ன வேலைகூடச் செய்ய விடமாட்டார் அப்பா. தினமும் டபுள் ஆம்லெட் போட்டுக் கொடுப்பார். இப்போ நான் இங்கே ஓடி ஓடி வேலை பண்றதைப் பார்த்தா எரிச்சலாகி இவனைத்தான் திட்டுவார். அதுக்காகத்தான் கொஞ்சம் அவர் ஊருக்குப் போகிற வரைக்கும் பொறுத்துக்கச் சொன்னேன். புரிஞ்சிக்காம சண்டை போடுறான்”
“ஆமாம்! என்ன இருந்தாலும் நம்ம அப்பாக்களை விட்டுக் குடுத்துட முடியுமா? இவங்க இப்பதானே வந்தாங்க. சரி, அப்போ இன்னிக்குச் சமையல் என்னாச்சு”
“ லேசா பிரச்சினை ஆரம்பிச்ச உடனேயே வாக்கிங் போறேன்னு கோபமா வெளியே போயிட்டேன். வந்து பார்த்தா மாமனாரும் மாப்பிள்ளையும் ஒழுங்காச் சமைச்சு எனக்கு பேக் பண்ணி வெச்சிருந்தாங்க. நிம்மதியாயிடுச்சு”
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: deepa.j.joseph@gmail.com